புதிய அரசுத் துறையை நிர்வகிக்க எலான் மஸ்க், விவேக் ராமசாமி நியமனம்- ட்ரம்ப் அதிரடி!
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் தலைவரான எலான் மஸ்க் மற்றும் தொழில் முனைவோரும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளருமான விவேக் ராமசாமி இருவரும் வெளிப்படையாக டிரம்பை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது
எலான் மஸ்க் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி ஆகியோர் புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு தலைமை தாங்குவார்கள் என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
ட்ரம்ப் தனது அறிக்கையில்,
மஸ்க் மற்றும் ராமசாமி "அரசு அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் எனது இந்த நிர்வாகம் வழி வகுக்கும்," என்று வலியுறுத்தினார்.

இந்த முன்முயற்சியானது அரசாங்க செயல்பாடுகளை நெறிப்படுத்துவதையும், கூட்டாட்சி துறைகள் முழுவதும் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு விழாவில் நாட்டிற்கு ஒரு "பரிசாக" ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பயனுள்ள அரசாங்கத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜூலை 4, 2026க்குள் இவர்களது பணி முடிவடையும் என்று டிரம்ப் அறிவித்தார். இந்த நியமனங்கள் இரண்டு குறிப்பிடத்தக்க தனியார் துறை பிரமுகர்களை முக்கிய அரசாங்கப் பாத்திரங்களில் கொண்டு வருகின்றன, என்றார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ் ஆகியவற்றின் தலைவரான எலான் மஸ்க் மற்றும் பயோடெக் தொழில்முனைவோரும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளருமான ராமசாமி இருவரும் வெளிப்படையாக டிரம்பை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது
டிரம்ப் 2.0-வின் புதிய துறைக்குப் பெயர் Department of Government Efficiency, இதனை சுருக்கமாக DOGE என்று அழைக்கின்றனர். இது சுவாரஸ்யமாக, மஸ்க் விளம்பரப்படுத்தும் கிரிப்டோகரன்சியான Dogecoin என்ற பெயருடன் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.