டிரம்பிற்கு சிலை, பால் அபிஷேகம், பூஜை: கடவுளாக பாவிக்கும் தெலுங்கானா ரசிகர்!
இவர் ஏன் ட்ரம்ப்பின் தீவர பக்தர் ஆனார்? கோயில் கட்டுமளவுக்கு ட்ரம்ப் இவருக்கு என்ன செய்தார்?
டொனால்டு டிரம்பை அமெரிக்க அதிபராக அனைவருக்கும் தெரியும். ஆனால், தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் பூஸா கிருஷ்ணா டொனால்டு டிரம்பை கடவுளாக நினைத்து வழிபட்டு வருவது தெரியுமா?
ரியல் எஸ்டேட் தரகராக இருக்கும் கிருஷ்ணாவின் நான்கு ஆண்டுகளுக்கு முன் கனவில் டிரம்ப் வந்ததை அடுத்து அவரை கடவுளாக வழிபட்டு வருகிறாராம்.
கனவில் டிரம்ப் வந்த பிறகு, அதிர்ஷ்டக்காற்று வீசத்துவங்கி கிருஷ்ணா வாழ்க்கையே மாறியதால், தனது வீட்டில் டிரம்பிற்கு சின்னதாக கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். கிராமத்தில் தனியாக வசித்து வரும் கிருஷ்ணா, டிரம்பிற்கு ஆளூயர சிலை வைத்துள்ளதோடு, வீட்டுச்சுவரிலும் டிரம்ப் பெயரை எழுதி வைத்திருக்கிறார்.
"டிரம்ப் மீதான அன் அன்பு, அவர் மீதான அபிமானமாக மாறிவிட்டது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதன் பிறகு கடவுளை வழிபடுவதற்குப் பதில், அவரை வழிபட்டு வருகிறேன்,” என்று பூஸா கிருஷ்ணா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"உறவினர்கள் எனக்குத்தொல்லைக் கொடுத்து வருகின்றனர். நான் சமூகத்தில் அவர்களுக்கு அவமானம் தேடித்தருவதாகக் கூறுகின்றனர். நீங்கள் சிவனை கடவுளாக நம்பி வழிபடுவது போல, நான் டிரம்பை நம்புகிறேன் என அவர்களிடம் கூறுகிறேன். யாரும், யாருடைய நம்பிக்கையிலும் குறுக்கிட முடியாது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
கிருஷ்ணா மட்டும் அல்ல, சிவசேனா கட்சியும், இந்தியா வருகை தரும் டிரம்பை வரவேற்கப் பாடல் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது.
"இந்தியாவின் உணர்வுகள் பற்றி வெளிப்படையாக பேசுவதால் டிரம்பை விரும்புகிறோம். இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பேன் என வெளிப்படையாக அவர் கூறுகிறார். எனவே நாங்கள் அவர் ரசிகனாக விட்டோம்,” என்று சிவசேனா நிர்வாகி விஷ்ணு குப்தா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இன்று இந்தியா வருகைத் தருகிறார். குஜராத்தின் அகமதாபாத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்