ட்ரம்ப் திறக்கும் மொதெரா கிரிக்கெட் மைதானத்தில் என்னென்ன சிறப்பு தெரியுமா?
இந்தியா வரும் ட்ரம்ப் உலகின் மிகப் பெரிய விளையாட்டு அரங்கமான மொதேரா அரங்கத்தை திறந்து வைத்து ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இன்று உலக நாடுகளின் உச்சப்பட்ச முக்கியச் செய்தி, உலக ஊடகங்களின் முக்கிய தலைப்புச் செய்தி என்னவென்றால் அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணம்தான். இருநாடுகளின் முக்கியத் தலைவர்களும் என்ன பேசப் போகிறார்கள் என்பதை கேட்கத்தான் உலக நாடுகள் அனைத்தும் காதுகளைத் தீட்டிக் கொண்டு காத்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக திங்கள்கிழமை (24.02.2020) இந்தியா வருகிறார். குஜராத்தின் அகமதாபாத் நகர் விமான நிலையத்துக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து சாலைமார்க்கமாக காரில், உலகின் மிகப் பெரிய விளையாட்டு அரங்கமான மொதேரா அரங்கம் என்றழைக்கப்படும் ‘சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட்’ மைதானத்துக்கு செல்லவுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து புதுப்பிக்கப்பட்ட மொதேரா அரங்கத்தைத் திறந்துவைக்கிறார்.
1982ல் கட்டப்பட்ட இந்த கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 49 ஆயிரம் பேர்வரை அமரலாம். 64 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த அரங்கத்தைப் புதுப்பித்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தைப் போன்ற அமைப்பில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இதனை அமைக்கவேண்டும் என்பது பிரதமர் மோடியின் நீண்ட நாள் கனவுத் திட்டமாகும்.
இதற்காக இம்மைதானம் ரூ. 700 கோடியில் 2 ஆண்டுகளாக புதுப்பித்து கட்டப்பட்டது. இன்றைய தேதியில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். இதில் சுமார் 1,10,000 பேர் அமர்ந்து விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிக்கலாம் என்பது தனிச் சிறப்பாகும்.
மேலும் கூடுதல் சிறப்பாக இம்மைதானத்தில்தான் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற அமெரிக்க அதிபரின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தின் ஏரியல் வியூ புகைப்படத்தை எடுத்துள்ள பிசிசிஐ, அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். மேலும், கடந்த வாரம் ஓர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்,
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை, இந்திய பிரதமருடன் இணைந்து திறந்து வைப்பது தனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிப்பதாகவும், தான் இந்தியா வரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இரு உலகப் பெருந்தலைவர்கள் சந்தித்துக் கொள்வதாலும், அமெரிக்க அதிபரின் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறுவதாலும், லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளதாலும், இம்மைதானத்தைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவுள்ளவர்கள் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு முன்பாகவே மைதானத்துக்கு வந்து விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சபர்மதி ஆசிரமத்துக்குச் செல்லும் டிரம்ப், தொடர்ந்து பிற்பகலில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலையும் சென்று பார்வையிட உள்ளார். இதையடுத்து தாஜ்மகாலைச் சுற்றியுள்ள யமுனை நதிக்கரை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதோடு, தாஜ்மகாலை சுற்றியுள்ள நீருற்றுகளை தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்த்தும் டிரம்ப், காந்தியடிகளின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து மோடியும், டிரம்ப்பும் அகமதாபாத் இல்லத்தில் பேச்சு நடத்துகின்றனர்.
தொடர்ந்து டாடா, ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தும் டிரம்ப் இரவு உணவு விருந்துக்குப் பின் வாஷிங்டன் புறப்பட்டுச் செல்கிறார்.