‘கொரோனா தொற்று உள்ளவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல, அது ஒரு எதிர்பாராத விபத்து மட்டுமே’ - குணமடைந்த மணிகண்டன்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் பத்திரிக்கையாளரின் நம்பிக்கையூட்டும் அனுபவப் பகிர்வு.
உலகம் முழுவதும் உழன்றுக் கொண்டிருக்கும் வார்த்தை கொரோனா. கொரோனா வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளான பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
சாமானியர்கள் முதல் பெருந்தலைவர்கள் வரை பாரபட்சமின்றி ஊடுருவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் பத்திரிக்கையாளரின் தன்நம்பிக்கைத் தரும் அனுபவங்களைப் படித்து பயம், அறியாமை, சுயநலமின்றி ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் செய்தியாளர் மணிகண்டன், ஈடிவி பாரத்தின் டெல்லி நிருபராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்பதற்காக மார்ச் 28ம் தேதி தமிழகம் திரும்ப முடிவு செய்திருந்தார். மார்ச் 22ம் தேதி Janata Curfew கடைபிடிக்கப்பட்டதைத் தொடந்து முழு ஊரடங்கிற்கு இந்தியா தயாராவதை உணர்ந்து மார்ச் 24ஆம் தேதியே அதிகாலை 3.15 மணிக்கு இண்டிகோ விமானத்தில் சென்னை வந்திறங்கியுள்ளார். அங்கிருந்து தனியார் காரில் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தை மாலை 3 மணியளவில் சென்றடைந்திருக்கிறார்.
எப்படியோ ஒருவழியாக சொந்த ஊர் வந்து சேர்ந்துவிட்டேன், ஆனால் டெல்லியிலிருந்து வந்ததால் அரசு அறிவுறுத்தல்படி, நானே என்னை 28 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள நினைத்தேன் என்கிறார் மணிகண்டன்.
மார்ச் 30-ம் தேதி லேசான உடம்பு வலி ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார மருத்துவ அலுவலரிடம் தெரிவித்து அவர்கள் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டதும் சரியாகிவிட்டது. ஊருக்குள் இருக்கும் பழைய ஓட்டு வீட்டில் சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்டேன்.
கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்றாலும் நாளுக்கு நாள் எனக்கு கோவிட் வைரஸ் தாக்குதல் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஏப்ரல் 2ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு என் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டன.
பரிசோதனை முடிவுக்காகக் காத்திருந்த போது தான் அந்த செய்தி வெளியானது மார்ச் 24ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணித்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதால் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நான் நினைத்தது போலவே எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்ததையடுத்து பாதுகாப்பு மண்டலம் என்று எங்கள் பகுதியை அறிவித்தார்கள். எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட அடுத்த நாளே எனது 1.5 வயது மகன் உள்பட குடும்பத்தினர் அனைவரும் மருத்துவக் கல்லூரிக்கு சோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யாருக்கும் தொற்றில்லை என்றாலும் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தியே வைக்கப்பட்டிருந்தனர்.
சில நாட்கள் கழித்து நான் மற்றும் பிற நோயாளிகள் அனைவரும் ஒரே கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். மூன்று நேரமும் சாப்பாடு ஜமாத்திலிருந்து வந்தது. பால், முட்டை, சுண்டல் என மருத்துவமனையிலும் நல்ல கவனிப்பு. அடுத்தடுத்த நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானது.
21 நாட்களும் அரசியல், சினிமா, இலக்கியம் என்று எல்லோரிடமும் பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன. ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு நம்பிக்கையோடு நாள்களைக் கடத்தினோம். சொந்தபந்தங்கள் போனில் பேசத் தயங்கியபோது ஜமாத் ஆட்கள் மூட்டை மூட்டையாக உணவும், பழங்களும் கொடுத்து அனுப்பினார்கள்.
நான் குணமாகிவிட்டேன். காரணம் ஜமாத்திலிருந்து வந்த சாப்பாடும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்களின் கவனிப்பும்தான். உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள் பணி செய்கின்றனர். சில வயதான நோயாளிகள், ‘சார் ஒருவேளை எங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா இப்படி தான் துரத்தியடிப்பாங்களா என்று கண்ணீர் விட்டதும் என்னை கலங்கச் செய்தது.’
பத்திரிகையாளனாக அங்குமிங்கும் ஓடியாடி பணிசெய்துவிட்டு நான்கு சுவற்றுக்குள் தனித்திருப்பதுமே பெரிய சங்கடம். சில நேரங்களில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் எழுதுவது, அமேசான் கிண்டிலில் புத்தகம் படிப்பது, ஹாட்ஸ்டார், ப்ரைமில் படம் பார்ப்பது என்று நாட்கள் நகர்ந்தன. முக்கியமாக ஊடகவியலாளர்கள் அளித்த மனோபலம் எழுத்தில் சொல்ல முடியாது. அத்தனை நம்பிக்கை ஊட்டினர்.
தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர்கள் பலர் தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தனர். அரசு அதிகாரிகள் பீலா ராஜேஷ், ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோரும் நம்பிக்கை வார்த்தைகளில் பேசினர். ஒரு பக்கம் ஊரில் அறிவிக்கப்படாத ஒதுக்கிவைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது இன்னொரு புறம் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் என்று போனில் அழைத்து நம்பிக்கையளித்தனர்.
இந்தச் சூழலில் 21 நாள்களைக் கடந்து நான்கு பரிசோதனை முடிவுகளில் தொற்று ஏதும் இல்லை என்று முடிவுகள் வரவே ஏப்ரல் 23ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்தேன்.
நாட்டு நடப்புகளில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த எனக்கு குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தாரின் நடவடிக்கைகளை கற்றுத் தந்திருக்கிறது கொரோனா. எனக்கு நோய் உறுதிசெய்யப்படுவதற்கு முன்னர் நான் ஆம்புலன்சில் சென்ற போதே எனக்கு நோய் தொற்று என்று வாட்ஸ் அப், முகநூல் என சமூக வலைதளங்களில் செய்திகள், வீடியோக்கள் பரவின.
நான் நோயிலிருந்து மீண்டுவிடுவேனா என்று எண்ணி என்றுமே கண்கலங்காத என் அப்பாவும் கண்ணீர் விட்டார், குடும்பத்தினரின் அழுகையைப் பார்த்து விவரமறியாத 1.5 வயது மகனும் கதறித் துடித்தான். இந்த உணர்ச்சிகரமான சூழலே தனிமையில் எனக்கு பாரத்தைத் தந்தது. ஆனால் அரசு மன நல மருத்துவர்கள் தொடர்ந்து 3 வேளையும் தைரியமூட்டும் வார்த்தைகளைக் கூறி தேற்றினர்.
கொரோனாவில் இருந்து மீண்டு ஊர் திரும்பிய பின்னரும் கூட பலர் நான் சென்ற பாதையில் கிருமி நாசினி தெளிப்பு, சாணியை கரைத்து ஊற்றுதல் என்று செய்வது சங்கடமாக இருக்கிறது. ஊருக்கு வந்திருக்கவே கூடாதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கொரோனா தொற்றுள்ளவர்கள் ஏதோ பெரிதாகத் தவறு செய்துவிட்டது போல மக்களின் மனநிலை உள்ளது. இது எதிர்பாராத விபத்து மட்டுமே. நாங்கள் வேண்டுமென்றே சென்று கிருமியை வாங்கி வரவில்லை. மரத்தின் மீதோ, தூணின் மீதோ தெரியாமல் நாம் மோதிவிடுவது போல கிருமி எங்கள் மீது மோதிவிட்டது, அவ்வளவே.
இதனால் யாரும் குற்ற உணர்ச்சியுடன் இருக்க வேண்டியதில்லை, என்னால் குடும்பம் பாதிக்கப்பட்டுவிட்டது, ஊரே முடக்கப்பட்டு விட்டது என்று மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம். வேண்டுமென்றே நாம் எதையும் செய்யவில்லை. சுய தனிமைப்படுத்திக் கொண்டு, நம்மால் யாரும் நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக்கொண்டால் போதும்.
பயம், அறியாமை, சுயநலத்தை ஒதுக்கிவைத்து தனித்திருந்தால் கொரோனாவை எளிதில் வெல்லலாம் என்பதற்கு நானே சாட்சி, வாருங்கள் ஒன்றிணைந்து இந்த நோயை விரட்டி அடிப்போம் என்று நம்பிக்கையூட்டுகிறார் மணிகண்டன்.
தகவல் உதவி: பத்திரிகையாளர் மணிகண்டன்