‘நான் கொரோனாவை வென்றது எப்படி? - குணமடைந்த கோவை மாணவி சிறப்புப் பேட்டி!
‘நான் மூன்று வாரங்கள் மனித முகங்களையே பார்க்கவில்லை’ - கொரோனாவில் இருந்து மீண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாணவியின் அனுபவங்கள்.
எங்கு திரும்பினாலும் கொரோனா... கொரோனா... இதே பேச்சு, இதே செய்தி, அதைப் பற்றிய மெசேஜ்களுக்கு நடுவில் பயத்துடனும், குழப்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தினசரி அரசாங்கம் தரும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள மரணங்களைப் பற்றி தெரிந்து கொண்டு இன்னும் டென்ஷன் அதிகமாகி செய்வதறியாது இருக்கின்றோம்.
நமக்கே இப்படி இருக்குமென்றால், கொரோனா வைரஸை நேரெதிராகச் சந்தித்து, அதனுடன் போராடி வென்ற நோயாளிகளின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்ன? அவர்கள் பட்ட வலி, வேதனை, மனநிலை இவற்றை அவர்களின் வாய் மூலம் கேட்பதே நமக்கிருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு சரியான பதிலாக இருக்கும் என்று உணர்ந்தேன்.
அப்படி நம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குணமாகிய சிலரை பேட்டி எடுக்க முயன்றேன். இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் மீண்ட நோயாளிகள் எவரும் பேட்டி கொடுக்காத சூழலில் அவர்களின் மனநிலையை தெரிந்து கொள்ள தீவிர முயற்சி எடுத்தேன். அதில் கோவையைச் சேர்ந்த ஸ்பெயினில் இருந்து திரும்பிய 25 வயது மாணவியும் ஒருவர்.
தொடக்கத்தில் மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்று தயக்கம் காட்டிய அவர், சிலமுறை கேட்டுக் கொண்டதும் தன் அனுபவங்களைப் பகிர முடிவு செய்து எனக்கு மெசேஷ் அனுப்பினார். அவரின் அந்தத் தன்னம்பிக்கையே மிகவும் ஒரு பாசிடிவ் சூழலை உருவாக்கும் என்று தோன்றியது.
கோவை மாணவி தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஸ்பெயினில் இருந்து மார்ச் 13ம் தேதி கிளம்பி டெல்லி விமான நிலையம் அடைந்தார். பின்னர் கோவைக்கு நேரடி விமானம் அப்போது இல்லாத காரணத்தால், விமானம் மூலம் பெங்களுரு சென்று, அங்கிருந்து ரயில் மூலம் கோவைக்கு மார்ச் 15ம் தேதி வந்து சேர்ந்தார். கோவை வந்தவுடன் அரசுப் பொது மருத்துவமனை சென்று கோவிட் டெஸ்ட் செய்து பார்த்த அவருக்கு எந்த அறிகுறிகளோ, ஜுரமோ இல்லாததால் அவரை வீட்டில் தனிமையில் இருக்க மட்டும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின் அவர் மார்ச் 18ம் தேதி கோவை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபா தமிழகத்தின் ஏழாவது மற்றும் கோவையின் முதல் கோவிட் பேஷண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபா உடன் நான் நடத்திய டெலிபோன் உரையாடலில் இருந்து....
கேள்வி: கொரோனா தாக்கிய சமயத்தில் வெளிநாட்டில் இருந்த நீங்கள் வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிந்தும் நாடு திரும்ப முடிவு எடுத்தது ஏன்?
தீபா: நான் ஸ்பெயினில் முதுகலைப்பட்டம் படித்து வருகிறேன். அங்கு கொரோனா வேகமாக பரவிக் கொண்டிருந்தது. சில நாட்களாக நான் ஹாஸ்டலில் தான் இருந்தேன், வெளியில் எங்கும் செல்லவில்லை. நிலைமை மோசமாக எனக்கு இருந்தது இரண்டே வாய்ப்பு.
ஒன்று கோவிட் தாக்கி ஸ்பெயினில் குடும்பத்தின் உதவி இல்லாமல் தனியாகப் போராட வேண்டும் அல்லது இந்தியா திரும்பி என் ஊரில் என் பெற்றோர்களுடன் இந்த நோயை எதிர்கொள்ளவேண்டும் என்பதே. அதில் நான் தேர்ந்தெடுத்தது நாடு திரும்புவது. அப்படி இந்தியா திரும்பவேண்டும் என்று முடிவெடுக்கும் பட்சத்தில் உடனடியாக கிளம்ப முடிவெடுத்தேன்.
என் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தியாவில் மருத்துவராக உள்ளார். அவரைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றுக்கொண்ட பிறகே நாடு திரும்ப ஆயத்தமானேன்.
நான் தமிழகத்திலேயே கோவிட்-19 உறுதிசெய்யப்பட்ட ஏழாவது நபர், கோவையில் முதல் நபர். அந்த சமயத்தில் அதிகம் பேர் பாதிக்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்படும் முறையும் அப்போது இல்லை.
என்னைக் குறைக் கூறுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே, நான் அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகே நாடு திரும்பும் பணிகளை மேற்கொண்டேன். குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்திய பிறகே என்னுடைய பயணம் அனுமதியளிக்கப்பட்டது. இது எல்லாருக்குமே ஒரு புது சூழ்நிலை.
கேள்வி: உங்களுக்கு எவ்வாறான நோய் அறிகுறிகள் தென்பட்டன? அவை எப்போது தெரியவந்தது?
ஸ்பெயினில் இருந்து டெல்லி வந்திறங்கிய போது அங்கு முதலில் என்னை ஃபீவர் ஸ்கிரீனிங் செய்தனர். அங்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. வீட்டிற்கு வந்த இரண்டு நாட்கள் கழித்து வெளிநாட்டில் என்னுடன் பயின்ற சக நண்பருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. உடனே நானாகவே அரசுப் பொது மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொண்டேன்.
ரிசல்ட் வருவதற்கு முன்பே நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சோதனை முடிவுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்தனர். என் பயண விவரங்களைச் சேகரித்து என்னுடைய தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு கலெக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் என்னிடம் நேரடியாக தொடர்பில் இருந்தனர். என்னுடன் பயணித்தவர்களையும் கண்காணித்தனர்.
எனக்கு முதலில் காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. சுவை மற்றும் வாசனைத் திறன் இல்லாமல் இருந்தது. எனக்கு வந்தது மைல்ட் வகை கோவிட் என்பதால் அதிக அறிகுறிகள், பிரச்சனை இல்லை.
கேள்வி: கோவிட் டெஸ்ட் பாசிடிவ் என்று வந்ததும் உங்களின் மனநிலை எப்படி இருந்தது?
தீபா: எனக்கு பொதுவாக சிறுவயது முதல் வைரஸ் தொற்று ஏற்பட்டதில்லை. அதனால் இது புது அனுபவம். அதோடு கோவையில் நான் தான் முதல் கொரோனா நோயாளி. இது எனக்கு, மருத்துவர்களுக்கு, என் குடும்பத்துக்கு புதிய சூழலை ஏற்படுத்தியது. எது செய்யலாம், செய்யக்கூடாது என்று கூட தெரியாத சமயம் அது. அதனால் முதலில் சற்று பதட்டமாக இருந்தது. எனக்கு உடலளவில் பாதிப்பு அதிகம் இல்லை.
நான் மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்கொண்டேன். நான் ஒருமுறை கூட இதை நினைத்து உடைந்து போகவில்லை.
கேள்வி: இது எல்லாருக்கும் இருக்கும் டவுட். மருத்துவமனையில் கொரோனா வார்டில் என்னென்ன பொருட்கள் உடன் எடுத்துச்செல்ல முடியும்?
தீபா: எனக்கு அறிகுறிகள் அதிகம் இல்லை. அதனால் குறிப்பாக எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. வீட்டில் இருந்து எனக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் உடன் எடுத்துச்செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
என் போன், லேப்டாப், துணிமணிகள் என்று எனக்குத் தேவையானவற்றை எடுத்துச் சென்றேன். கொரோனா வார்டை பொறுத்தவரை வெளியில் இருந்து உள்ளே பொருட்கள் வரலாம், ஆனால் மருத்துவமனையில் இருந்து எதுவும் வெளியில் செல்ல அனுமதி இல்லை.
மருத்துவமனையில் எனக்குக் கொடுக்கப்பட்ட உணவில் திருப்தியளிக்காத அம்சங்களை சுட்டிக்காட்டியதும் எனது கருத்துகளுக்கும் மதிப்பளித்து அதற்கேற்ப மாற்றியமைத்தனர். வீட்டுச் சாப்பாட்டையும் அனுமதித்தனர். பணத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தாலும் அதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் அதை நான் எடுத்துச் செல்லவில்லை. என் அறையை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவார்கள்.
கேள்வி: கொரோனா வார்டில் தனிமை எவ்வாறு இருந்தது? உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
தீபா: என்னை அடெண்ட் செய்யும் டாக்டர், நர்சுகள் அனைவரும் முழு கவச உடை, மாஸ்க், கண்ணாடி அணிந்து கொண்டு வருவார்கள். தேவையான டெஸ்ட், மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
மனித முகங்களையே பார்க்காத ஒரு புது சூழல் இது. நான் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் மனித முகங்களையே பார்க்கவில்லை. ஆம் டாக்டர்கள், நர்சுகள் முழு உடை, முகத்தை முழுவதும் மூடிக்கொண்டு வருவதால் ஒருவரது முகத்தையும் பார்க்காது ஒருவித புதிய மனநிலையை ஏற்படுத்தியது.
எல்லாவற்றையும் விட என் வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் வரும் வரை நான் ரொம்ப டென்ஷனாக இருந்தேன். அவர்களது சோதனை முடிவுகள் வரும்வரை சாப்பிடவோ, தூங்கவோ முடியாமல் தவித்தேன். அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படவில்லை என்று தெரிந்ததும் தான் ஒருவித ரிலீஃப் கிடைத்தது. அதன்பிறகே என்னைப் பற்றி யோசித்தேன். தனிமையில் இருக்க மனதளவில் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
கேள்வி: உங்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது தெரிந்து அருகில் வசிப்பவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள்?
தீபா: உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் ஆதரவாகவே இருந்தனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அவர்கள் என்னை வரவேற்று அக்கறையுடன் விசாரித்தனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி என்னுடன் பேசினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் நீங்கள் பயணம் மேற்கொண்டது பற்றி விமர்சனங்கள் எழுந்ததே?
தீபா: நான் வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்றேன். கொரோனா பரவல் தொடங்கிய சமயத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கவே நான் இந்தியா பயணம் மேற்கொண்டேன். பலர் தேவையற்ற கருத்துக்களை வெளிப்படுத்தி வதந்திகளையும் பரப்பியது வருத்தமளிக்கிறது. என்னைவிட என் பெற்றோர்கள் மனம் வருந்தும் அளவிற்கு பொய்யான செய்திகள் பரவியது.
என்னைப் பொருத்தவரை எனக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நான் வெளிநாட்டிலேயே இருந்திருந்தால் நோய் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கக்கூடும். எனவே என்னுடைய சூழலுக்கேற்ற முடிவுகளையே நான் எடுக்கவேண்டியிருந்தது. அதை மற்றவர்கள் அடிப்படை ஆதாரமின்றி விமர்சிப்பதையோ காயப்படுத்துவதையோ தவிர்க்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை நான் பொறுப்புடன் தான் செயல்பட்டேன்.
கேள்வி: நீங்கள் கிட்டத்தட்ட 18 நாட்கள் மருத்துவமனையில் தனிமையில் கழித்துள்ளீர்கள். அங்கு எவ்வாறு நேரத்தை செலவிட்டீர்கள்?
தீபா: என் பல்கலைகழக தேர்வுகளை ஆன்லைனில் எழுதினேன், அதற்காகப் படித்தேன். வேலைக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது, ஆன்லைனில் நேர்காணல் வழங்குவது என என்னுடைய படிப்புத் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அது தவிர குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் வெளி நிலவரம் குறித்து வீடியோ கால் மூலம் தெரிந்து கொள்வேன்.
கேள்வி: மருத்துவமனையில் தூங்கமுடிந்ததா? மற்ற வசதிகள் எப்படி இருந்தது?
தீபா: நான் பயணம் மேற்கொண்டு திரும்பியதால் வழக்கமான தூக்கம் தடைப்பட்டது இருப்பினும் பெரியளவில் பாதிப்பு இல்லை. நான் வழக்கம் போலவே மருத்துவமனையிலும் நேரத்தை செலவிட்டேன். கழிப்பறை வசதி மட்டுமே சற்று அசௌகரியமாக இருந்தது. என்னுடைய துணிகளை நானே துவைத்து சுத்தம் செய்துகொண்டேன். என்னுடைய அறையை சுத்தம் செய்துகொண்டேன். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியாக குறைகள் என்று ஏதுமில்லை.
கேள்வி: உங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் ஏதேனும் சிரமங்களை உணர்ந்தீர்களா?
தீபா: கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைரஸ் தொற்று சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மாத்திரையினால் எனக்கு குமட்டல் உணர்வு ஏற்பட்டது. முடி கொட்டும் பிரச்சனையும் இருந்து. அதற்காக வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்கினார்கள். எனக்கு ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ரிபோர்ட் செய்யவேண்டும். அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படும்.
ஒரே ஒரு குறை என்னவென்றால் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதமானது. தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்கள் முடிந்த பின்னர் இரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கோவிட் நெகடிவ் என்றால் மட்டுமே வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த நிலையில் சோதனை முடிவுகள் தாமதமாக வந்த காலகட்டத்தில் சற்று பதட்டமாக இருந்தது.
கேள்வி: கொரோனா காரணமாக நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் ஏதாவது பிரச்சனைகளைச் சந்தித்தீர்களா?
தீபா: நான் பொதுவாகவே மற்றவர்களின் அபிப்ராயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நபர் அல்ல. எனவே எனக்குத் தனிப்பட்ட விதத்தில் பாதிப்பு எதுவும் இல்லை. என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் பதட்டமடைந்து என்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர்.
என் குடும்பத்தார் வெளியில் செல்லும்போது சிலர் கேட்கும் கேள்விகள் மனதை புண்படுத்தியது. இந்த நேரத்தில் தேவையானது சமூகப்பொறுப்பும், சகமனித அக்கறை மட்டுமே, விமர்சனங்கள் அல்ல.
கேள்வி: தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உங்களது ஆலோசனை என்ன?
தீபா: நான் தியானப் பயிற்சியில் ஈடுபட்டேன். அது சிறந்த பலனளித்தது. இதற்கென பிரத்யேகமான செயலிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் மக்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடலாம்.
ஒருவேளை உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கோ கொரோனா ஏற்பட்டாலும் பயப்படவேண்டாம். பலர் குணமடைந்து வீடு திரும்புவதைப் பார்க்கிறோம். எனவே நேர்மறையான எண்ணங்களுடன் பணியைத் தொடருங்கள். முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம். ஆனால் அச்சப்படவேண்டிய அவசியமில்லை.
கேள்வி: வயதானவர்கள், குழந்தைகள், பெற்றோர் என பலரும் கொரோனா எப்போது தாக்கும் என்ற அச்சத்தில் தவிக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தீபா: மக்களின் அச்சத்தை போக்குவதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அவை பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியம். சில ஊடகங்கள் என் பகுதியில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் நான் மருத்துவமனையை விட்டு வெளியேறி தப்பித்துவிட்டதாகவும் தவறான செய்திகளை வெளியிட்டு அச்சத்தை ஏற்படுத்தினர்.
அரசாங்கத்தின் தரப்பில் சில சிறிய குறைகள் இருந்தாலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. உலக சுகாதார நிறுவனம், நாட்டின் சுகாதார அமைச்சகம், அரசாங்க வலைதளங்கள் போன்றவை மூலம் வெளியிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட, நம்பகமான தகவல்களை மட்டுமே மக்கள் நம்பவேண்டும். பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்களை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவதை தவிர்க்கலாம்.
அதேபோல் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவது அந்த குறிப்பிட்ட தனிநபரின் தவறினால் அல்ல. நோய்தொற்று ஏற்பட்டவரை குறைக்கூறும் போக்கு மக்களிடம் காணப்படுகிறது. இது மாறவேண்டும்.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் ஆதாரமற்ற தகவல்களை மக்கள் நம்பக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அதைவிட முக்கியமாக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்டால் மக்கள் பொறுப்புணர்ந்து வெளியில் நடமாடக்கூடாது. இதை முறையாக பின்பற்றினாலே நாம் இந்த நோயை வெல்ல முடியும்.
குறுகியகால தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், அதுவே நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும்.
இன்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த கொள்ளை நோயின் தாக்கத்துக்கு உண்டானவர்கள் நம் எல்லாரையும் போன்ற சகமனிதரே. அவர்களுக்கு இந்தத் தொற்று எப்படி வந்தது? ஏன் வந்தது? அவர்கள் வைரஸை பலருக்கு பரப்பியவர்கள், என்றெல்லாம் பழியும், தூற்றலும் போடுவதற்கு முன் நாம் சற்று யோசிக்கவேண்டியது, அவர்களின் மனநிலையை மட்டுமே.
ஏற்கனவே அக்கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களை மேலும் காயப்படுத்தாமல், உண்மைத் தகவல்களை தெரிந்து கொண்டு, அன்பையும், அறவணைப்பையும், (வித் சோஷியல் டிஸ்டன்சிங்) பாசிடிவ் எண்ணங்களையும் கொடுப்போம்.
(என் கேள்விகளை முடித்ததும் தீபாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு உங்களின் நிஜப் பெயர் என்ன என்று அப்போதுதான் கேட்டேன். அவரும் இனி எனக்கு பயமில்லை என் பெயரை வெளியிட்டாலும் கவலை இல்லை என்று தன் பெயரைச் சொன்னார். நான் எதற்கு தயங்கவேண்டும்? வேண்டுமென்றால் என் பெயரை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார் தன்னம்பிக்கையுடன். இருப்பினும் தனிநபர் பாதுகாப்புக் கருதி நான் பெயர் மாற்றம் செய்தே இக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன்.)