‘பெரிய டி.வி., ஃப்ரிட்ஜ் வாங்கி பணத்தை வீணடிக்காதீங்க...’ - ஜெப் பெசோஸ் அபாய எச்சரிக்கை!
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கலாம் என்பதால் கையில் உள்ள பணத்தை பொருட்களை வாங்கி வீணடிக்காதீர்கள் என மக்களை எச்சரித்துள்ளார்.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கலாம் என்பதால் கையில் உள்ள பணத்தை பொருட்களை வாங்கி வீணடிக்காதீர்கள் என மக்களை எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் நிலவும் மந்தமான பொருளாதாரம் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற வல்லரசுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. பணவீக்கம் காரணமாக பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்து வருகின்றனர்.
ட்விட்டர் நிறுவனத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மெட்டாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அமேசானில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என பணி நீக்கங்கள் பற்றி வெளியாகும் தகவல்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக மக்களை எச்சரிக்கும் விதமாக வெளியிட்டுள்ள தகவல் பேரதிச்சியை உருவாக்கியுள்ளது.
நெருங்கி வரும் ஆபத்து:
அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை நம்பியுள்ளனர். இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மக்களின் கார், வீடு, தனிநபர் கடன்கள் ஆகியவற்றின் வட்டி விகிதம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. போதாக்குறைக்கு மற்றொருபுறம் பணி நீக்க நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் பெரும் ஆபத்தில் சிக்கி வருகின்றனர்.
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக வீட்டுக்கடன் மட்டும் $16.5 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் விரைவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்ட உள்ளது. அத்துடன் விடுமுறையும் வர உள்ளதால், அமெரிக்கர்கள் தங்களது சேமிப்பு மற்றும் போனஸ் பணத்தைக் கொண்டு வீட்டில் உள்ள ஹோம் அப்ளையன்ஸ், வாகனங்கள் உள்ளிட்டவற்றை புதுப்பிப்பது உண்டு.
மேலும், இதற்கு ஏற்றார் போல் மேலைநாடுகளில் பிரத்யேகமான சேல்களும் நடைபெறும். இந்த சமயத்தில் ஆஃபரில் கிடைப்பதால் டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை அமெரிக்கர்கள் வாங்கிக் குவிப்பார்கள்.
இதனிடையே, பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்பதால் வரும் மாதங்களில் அதிக விலையுள்ள பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எச்சரித்துள்ளார்.
அமேசான் நிறுவனரின் எச்சரிக்கை:
உலக பெரும் பணக்காரர்களின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளவரும், முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ், கடந்த நவம்பர் 14ம் தேதி, சிஎன்என் செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில், அமெரிக்க மக்களுக்காக எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
"மக்களுக்கு எனது அறிவுரை, ஆபத்தான நிலை வர உள்ளது. எனவே, நீங்கள் புதிதாக எதையாவது வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை நிறுத்துங்கள். கையில் உள்ள பணத்தை பத்திரமாக சேமித்து வையுங்கள். நீங்கள் ஒரு பெரிய திரை டிவியை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், கையில் இருக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். புதிய வாகனங்கள், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பெரிய விலை கொண்ட பொருட்களை வாங்குவதை அமெரிக்கக் குடும்பங்கள் தவிர்க்க வேண்டும். பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை. இதனால் பல்வேறு துறைகளில் பணி நீக்கங்களை சந்தித்து வருகிறோம். எனவே, கையில் உள்ள பணத்தை செலவழிக்க வேண்டாம்,” என அறிவுரை வழங்கியுள்ளார்.
அமேசான் நிறுவனரின் இந்த எச்சரிக்கை அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு பொருந்தும் என்றாலும், உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெரிய விலை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள் என எச்சரித்திருப்பது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
தொகுப்பு - கனிமொழி
10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்; ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!