10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்; ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!
உலக அளவில் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலாண்டுகள் லாபகரமாக இல்லாததால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் முதல் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு செலவுகளைக் குறைப்பதாக காரணம் காட்டி ட்விட்டர் 50 சதவீத ஊழியர்களையும், மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தது. தற்போது அந்த வரிசையில் அமேசான் நிறுவனமும் இணைந்துள்ளது தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் உலக அளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் அல்லது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த லே ஆஃப் குறிப்பாக அமேசானின் அலெக்ஸ் வாய்ஸ் அசிஸ்டென்ட், சில சில்லறை வர்த்தகப் பிரிவு, மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.
அமேசான் நிறுவனம் கடந்த ஒரு மாத கால மதிப்பாய்விற்குப் பிறகு, சில லாபமற்ற யூனிட்களில் உள்ள ஊழியர்களை வேறு வேலை தேடிக்கொள்ளும் படி எச்சரித்ததாக கூறப்படுகிறது. அமேசான் நிறுவனம் பண்டிகை மற்றும் விடுமுறைக்கால விற்பனையை இலக்காகக் கொண்டே செயல்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த விடுமுறை காலத்தில் இ-காமர்ஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வருவாய் ஈட்டவில்லை எனக்கூறப்படுகிறது.
தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளிலும் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக நுகர்வோர் பொருட்களை வாங்குவது குறைந்துள்ளது. எனவே, செலவுகளைக் குறைப்பதற்காக லே ஆஃப் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு மக்கள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குச் சென்று பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. இதனால் அமேசான் வியாபாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து புதிய கிடங்குகளை திறப்பதையும், சில்லறை விற்பனை குழுவில் பணியமர்த்துவதை தாமதப்படுத்துவதையும் அமேசான் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.
தொகுப்பு - கனிமொழி
இந்திய ட்விட்டர் அலுவலக ஊழியர்கள் கூண்டோடு பணிநீக்கம் - ‘வேறு வழியில்லை’ - கைவிரித்த எலான் மஸ்க்!