இன்றும், என்றும் பொருத்தமாக இருக்கும் அம்பேத்கரின் மேற்கோள்கள்!
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேதையான Dr.அம்பேத்கர் இந்தியா தொடர்பாக தெரிவித்த தீர்கமான சிந்தனைகள் இன்றளவும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேதையான டாக்டர்.அம்பேத்கர் ஒரு தீர்கதரிசி. அவரது இந்த வரிகள், இந்தியா மற்றும் இந்தியாவின் சுதந்திரம் தொடர்பான அவரது கவலைகள் அடிப்படை இல்லாதவை அல்ல என்பதை தெளிவாக உணர்த்துகின்றன:
“1950, ஜனவரி 26ல் இந்தியா சுதந்திரமான நாடாக உருவாகும். இந்தியாவின் சுதந்திரம் என்னாகும்? இந்தியா தனது சுதந்திரத்தை காத்துக்கொள்ளுமா அல்லது அதை இழக்குமா? இது தான் என் மனதில் முதலில் தோன்றுகிறது.
இந்தியா, ஒருபோதும் சுதந்திரமான நாடாக இருந்ததில்லை என்று பொருள் இல்லை. இந்தியா தன்னிடம் இருந்த சுதந்திரத்தை ஒருமுறை இழந்துவிட்டது. இரண்டாவது முறையும் அதை இழக்குமா?
எதிர்காலம் குறித்து என்னை மிகவும் கவலைக் கொள்ள வைக்கும் எண்ணம் இது. இந்தியா இதற்கு முன் ஒரு முறை தன் சுதந்திரத்தை இழந்துள்ளது என்பது மட்டும் அல்ல, தன் சொந்த மக்கள் சிலரது துரோகம் காரணமாகவே சுதந்திரத்தை இழந்தது எனும் எண்ணம் தான் என்னை மிகவும் கலக்கம் கொள்ள வைக்கிறது...
வரலாறு மீண்டும் திரும்புமா? இந்த எண்ணம் தான் என்னை கவலையில் மூழ்க வைக்கிறது.
சாதி மற்றும் சமயம் ஆகிய நம்முடைய பழைய எதிரிகள் தவிர, பல்வேறுபட்ட மற்றும் எதிர் கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகளையும் நாம் பெற இருக்கிறோம் எனும் புரிதல் இந்த கவலையை மேலும் ஆழமாக்குகிறது.
”இந்தியர்கள் தங்கள் வேறுபாடுகளை விட நாட்டை உயர்வாக கருதுவார்களா அல்லது நாட்டைவிட தங்கள் வேறுபாடுகளை உயர்வாக கருதுவார்களா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் நாட்டைவிட தங்கள் வேறுபாடுகளை உயர்வானதாகக் கருதினால், நம்முடைய சுதந்திரம் இரண்டாவது முறை நெருக்கடிக்கு உள்ளாகி, நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாம் என்பது மட்டும் நிச்சயம். இந்த நிலை ஏற்படுவதற்கு எதிராக நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். நம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தை கொண்டு நம்முடைய சுதந்திரத்தை பேணிக்காக்க நாம் உறுதி கொள்ள வேண்டும்.”
1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த பாபாசாகிப் அம்பேத்கர், தலித்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக போராடிய சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். சட்ட மேதை மற்றும் பொருளாதார வல்லுனரான அம்பேத்கர், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக விளங்கினார்.
இன்றளவும் அவரது தொலைநோக்கு பார்வையும், கருத்துகளும் பொருத்தமாக இருக்கின்றன என்பதை உணர்த்தும் மேற்கோள்களை இங்கே பார்க்கலாம்.
”ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த நவீன இந்தியா நமக்குத்தேவை எனில், அனைத்து மத புனித நூல்களின் இறையாண்மை முடிவுக்கு வர வேண்டும்.”
“சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை கற்பிக்கும் மதத்தை நான் நேசிக்கிறேன்.”
“கணவன், மனைவி இடையிலான உறவு நெருக்கமான நண்பர்கள் இடையிலான உறவு போல இருக்க வேண்டும்.”
“சமத்துவம் என்பது புனையப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அதுவே நம்மை இயக்கும் கொள்கையாக இருக்க வேண்டும்.”
ஒரு சிறந்த சமூகமானது இயக்கம் மிக்கதாக, ஒரு பகுதியில் நடைபெறும் மாற்றத்தை மற்ற எல்லா பகுதிகளுக்கும் தெரிவிப்பதற்கான வழிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். சிறந்த சமூகத்தில் பல் வேறு நலன்கள் விரும்பி தெரிவிக்கப்பட்டு, பகிரப்பட வேண்டும்.”
“மனதை செம்மைப்படுத்துவதே மனித இருப்பின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்”.
நேர்மை என்பது அனைத்து தார்மீக நற்குணங்களின் மொத்த வடிவாகும்.
“இந்தியாவில் பக்தி அல்லது வழிபாட்டிற்கான பாதை அல்லது நாயக வழிபாடு என்பது உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதத்தில் உள்ள பக்தி என்பது ஆன்ம விடுதலைக்கான வழியாக இருக்கலாம். ஆனால் அரசியல் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது நிச்சயம் சீரழிவுக்கான பாதையாக அமைந்து, இறுதியில் சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும்”.
“நாம் முதலிலும், இறுதியிலும் இந்தியர்கள்.”
யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: சைபர்சிம்மன்