தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தொடங்கியது!
கொரோனாவை அழிக்க, பரவாமல் தடுக்க 300 ட்ரோன்கள் மற்றும் 500 பைலட்கள் தயாராகி விட்டது.
தமிழகத்தில் காட்டுத் தீ போல பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவிட்-19 க்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடங்கி நடத்தி வருகிறது மாநில அரசு.
கொரோனா சமூகத் தொற்றாக மாறி வருவதை கட்டுப்படுத்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவதற்கு மாற்றாக ட்ரோன்கள் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளத் தொடங்கப்பட்டுள்ளது.
‘கரூடா ஏரோஸ்பேஸ் மற்றும் அக்னி பொறியியல் கல்லூரி’ தொழில்நுட்பப் பிரிவு பொறியாளர்களின் கண்டுபிடிப்பான ட்ரோன்கள் இந்த சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளன.
பொது சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோய் பரவலைத் தடுக்கும் விதமாக 300 ட்ரோன்கள் மற்றும் 500 பைலட்களைக் கொண்டு இந்த சானிடைசிங் பணி தொடங்கியுள்ளது. சோதனை முயற்சியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தி பார்க்கப்பட்டது.
சானிடைசிங் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள 300 ட்ரோன்களில் 10–15 லிட்டர் வரையிலான கிருமி நாசினி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறந்த பைலட்கள், தன்னார்வலர்கள், ஏர்லைன்ஸில் பணியாற்றியவர்கள் உள்ளிட்ட 500 பேர் பைலட்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமூகத் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் இந்த ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.
மருத்துவமனைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் என தமிழகம் முழுவதும் பல முக்கிய இடங்களில் ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது.
அடுத்த 1 மாத காலத்திற்கு அந்த பைலட்டுகள் நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் என திட்டமிட்டு சுமார் 6000 கி.மீட்டருக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது மிகச்சவாலான பணி என்றாலும், கோவிட் – 19 வைரஸ் பரவல் இந்தியாவில் 3வது கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்தத் தொழில்நுட்பம் சமூகத் தொற்றை கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ட்ரோன் பயன்படுத்துவதில் இருக்கும் நன்மைகள்
- சுகாதாரப்பணியாளர் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கி.மீ வரையிலேயே கிருமி நாசினி தெளிக்க முடியும். ஒரு ட்ரோன் மூலம் நாளொன்றிக்கு எளிதில் 20 கி.மீட்டருக்கு கிருமி நாசினி தெளிக்க முடியும், 300 ட்ரோன்களை பயன்படுத்தினால் எளிதில் ஒரு நாளைக்கு 6,000 கி.மீட்டருக்கு சானிடேசன் செய்ய முடியும்.
- மனிதர்களால் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும், ட்ரோன்களை 12 மணி நேரம் தொடர்ந்து இயக்க முடியும். அதுமட்டுமின்றி சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய் பரவல் ஏற்படுவதம் தடுக்கப்படும்.
- தரைப்பகுதியில் மட்டுமே கிருமி நாசினியானது தெளிக்கப்படும் உயர்ந்த கட்டிடங்களில் பணியாளர்கள் ஏறி சானிடைஸ் செய்வது சாத்தியமில்லை. ட்ரோன்கள் 400 அடி வரை பறந்து உயர் அடுக்குமாடிகளிலும் சானிடைஸ் செய்ய முடியும்.
- மருத்துவமனைகள், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்கள் அச்சமின்றி பணியாற்ற கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவ்வபோது கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துவது அவசியம், அதனை ட்ரோன்கள் கொண்டு எளிதில் செய்ய முடியும்.
இயற்கை பேரிடர் காலங்களில் அரசுக்கு கைக்கொடுத்து உதவி வருகிறது ட்ரோன் தொழில்நுட்பம். ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற கருடா ஏரோஸ்பேஸ், வனத்துறை, காவல்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கண்காணிப்பு மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை பார்வையிடும் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.