தங்கம் விலை உயர்வால் வங்கிகளில் தங்கக் கடன் வழங்கலும் அதிகரிப்பு!
கடந்த மார்ச் 2024ல் ரூ.1,02,652 கோடியாக இருந்த வங்கிகளின் தங்கத்தின் மீதான கடன் செப்டம்பர் 2024-ல் ரூ.1,47,081 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஆர்.பி.ஐ தரவுகள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் 6 மாதக் காலக்கட்டத்தில் தங்கத்தின் மீதான வங்கிக் கடன் 43.4% அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதிகரிப்பினால் மக்கள் தங்கத்தை அதன் மூலம் பயனடைய முடிவெடுத்து வங்கிகளில் தங்க நகைகளை வைத்து கடன் பெறுதல் அதிகமாகியுள்ளது.
இதனால் கடந்த மார்ச் 2024-ல் ரூ.1,02,652 கோடியாக இருந்த வங்கிகளின் தங்கத்தின் மீதான கடன் வழங்கல் தொகை செப்டம்பர் 2024-ல் ரூ.1,47,081 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஆர்.பி.ஐ தரவுகள் தெரிவிக்கின்றன. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் தங்கக் கடன் சொத்துக்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ரூ.3 லட்சம் கோடி அளவை தங்கக் கடன் கடந்துள்ளது. முத்தூட் பைனான்ஸின் தங்கநகைக் கடன் வழங்கல் ரூ.75,827 கோடியாக உள்ளது. மார்ச் 2024 கணக்கின் படி முத்தூட் பைனான்ஸ் வாடிக்கையாளர்களிடமிருந்து 188 டன்கள் தங்க நகைகளை அடகு பிடித்துள்ளது.
தங்க நகைக்கடனில் ஏற்பட்டுள்ள இத்தகைய வளர்ச்சியின் நிமித்தமாக தங்க நகை கடன் அளிப்பவர்கள் தங்கள் கொள்கைகளை மறுமதிப்பீடு செய்யவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
ஆர்பிஐ சில முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளது, அதாவது, கடன்களை வாங்குவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள், வாடிக்கையாளர் முன்னிலையில் இல்லாமல் தங்கத்தை மதிப்பீடு செய்தல், தங்கத்தின் மீதான கடன்களை அளிக்கும் போது அந்தத் தொகையின் இறுதிப் பயன்பாடு என்ன என்பதை கண்காணிக்காமல் விடுவது, வாடிக்கையாளர்கள் தங்கத்தின் மீதான கடன்களைத் திருப்பிச் செலுத்தாத போது அவர்கள் அடகு வைத்த நகைகளை, ஆபரணங்களை ஏலத்தில் விடும்போது வெளிப்படைத்தன்மை இன்மை ஆகியவை குறித்து ஆர்பிஐ சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
சில தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களில், ரொக்கமாக வழங்கப்பட்ட தங்கக் கடன்களின் பங்கு, வழங்கப்பட்ட மொத்த தங்கக் கடன்களின் பங்கை விட அதிகமாக இருப்பதையும் ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. மேலும், வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ரொக்கப் பணப் பரிவர்த்தனை முறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரம்பு பல சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்கப்படவில்லை.
பல கடன் கணக்குகள் அனுமதிக்கப்பட்டதிலிருந்து குறுகிய காலத்திற்குள் மூடப்பட்டன, அதாவது, ஒரு சில நாட்களுக்குள் அத்தகைய நடவடிக்கைக்கான பொருளாதாரத் தர்க்கம் குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் ஆர்பிஐக் கண்டறிந்துள்ளது.
மொத்தத்தில் தங்கம் விலை உயர்வுப்போக்குகளை சாதகமாக்கிக் கொள்ள நகைகளை அடகு வைத்து கடன் பெறும் போக்கு அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தரவுகள் சூசகமாகத் தெரிவிக்கின்றன.