அன்று ஆட்கடத்தலுக்கு இலக்கான நசிமா, இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஆர்வலர் - சர்வைவர் பெண்ணின் கதை!
நஸீமா கெய்ன் 13 வயதில் கடத்தப்பட்டு, பத்து மாதம் கழித்து மீட்கப்பட்டார். 2016 ல், ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உத்தம் குழுவை துவங்கி நடத்தி வருகிறார்.
நஸீமா கெய்ன் (Nasima Gain), 2010ல் 13 வயதாக இருந்த போது, மேற்குவங்கத்தில் உள்ள மஸ்லண்டாபூர் பள்ளியில் இருந்து சக மாணவி ஒருவருடன், கடத்தப்பட்டு காரில் பீஹார் கொண்டு செல்லப்பட்டார். சரஸ்வதி பூஜை தினத்தன்று இது நிகழ்ந்ததால், அந்த நாள் அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
நஸீமாவுக்கு தான் கட்டத்தப்பட்டடதை நினைவு கூர்வது வலி மிகுந்ததாக இருக்கிறது. ஆள்கடத்தலுக்கு எதிரான இந்திய தலைமை அமைப்பின் (ILFAT) ருமித் காம்பீர் உதவிக்கு வருகிறார்.
இந்த அமைப்பில் தான், மீண்டு வந்தவர்களின் தலைவராக நஸீமா இருக்கிறார். நஸீமாவை கடத்தியது அதே ஊரில் உறவினரை கொண்ட தெரிந்தவர் தான் என்றும், கடத்திய பின், சிவான் மாவட்டத்தில் உள்ள நடனக்குழுவிடம் சிறுமிகளை விற்றுவிட்டார் என்றும் அவரது நண்பர் தெரிவிக்கிறார்.
தற்போது 26 வயது செயற்பாட்டாளராக இருக்கும் நஸீமாவுக்கு இந்த நினைவுகளை மீண்டும் சொல்வது வேதனையானது எனப் புரிகிரது. எனினும், சிறு வயது தொடர்பாக மகிழ்ச்சியான அனுபவங்களை அவர் நினைவில் கொண்டுள்ளார்.
கடத்தப்பட்ட பத்து மாதங்களுக்கு பின், நஸீமா மீட்கப்பட்டார். எனினும் இதன் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
“விட்டிற்கு திரும்பியதும், என் பெற்றோர் ஆதரவாக இருந்தாலும் சமூகத்தினரிடம் இருந்த மனத்தடையை உணர்ந்தேன். பள்ளியில் சேர்ந்த போது, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை ஒதுக்கி வைத்தனர். எனவே வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன்,” என்கிறார்.
மற்றவர்களுடன் இணைந்து ஆட்கடத்தலை குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான தனது முயற்சி மற்றும் தொழில்முனைவு ஆர்வம் பற்றி மட்டுமே நஸீமா பேச விரும்புவது தெளிவாக தெரிந்தது.
2016ல் பாதிப்பில் இருந்து மீண்ட 56 பேருடம் அவர் பயிலறங்கில் பங்கேற்றார். அப்போது தான், வேறு பல பிரச்சனைகள் இருப்பதை உணர்ந்தார். இந்த பயிலறங்கம் Sanjog எனும் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. வாழக்கைத்திறன்கள் பயிற்சி அளித்ததோடு, மனச்சோர்வில் இருந்து இந்த அமைப்பு ஆலோசனையும் வழங்கியது.
உடனடியாக கவனிக்க வேண்டிய பல பிரச்சனைகள் இருப்பதையும், வெற்றிகரமான மீட்சிக்கு சமூகத்தின் ஆதரவு தேவை என்றும் உணர்ந்தோம் என்கிறார் நஸீமா.
சமூக ஆதரவு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 56 பெண்களில் 12 பேர், சேர்ந்து உத்தம் குழு என்பதை துவங்கி, சமூகம் சார்ந்து செயல்பட தீர்மானித்தனர்.
“பாதிப்பில் இருந்து மீண்டவர்களை மாதம் 5 -6 முறை சந்தித்து உரையாடி எங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வோம். அவர்கள் வழக்கு தொடுக்க விரும்பினால், காவல் துறை அல்லது வழக்கறிஞரை தொடர்பு கொண்டு உதவி செய்வோம். அவர்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வோம். சிலருக்கு தங்குமிடமும் அளித்து, தேவையான பொருட்களையும் உறுதி செய்வோம்,” என்கிறார் நஸீமா.
இந்த குழு, மேற்குவங்கத்தில் உள்ள 150 பெண்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. நஸீமா, ILFAT அமைப்பின் உறுப்பினர்கள் துணையோடு, இந்தியா முழுவதும் 2500 உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். ஆட்கடத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கான தேசிய அமைப்பாக ILFAT செயல்பட்டு வருகிறது என்கிறார். மற்ற மாநிலங்களில் உள்ள பெண்களுடன் இணைந்து செயல்பட்டு அவர்கள் குரலை வலுவாக கேட்கச்செய்யும் நோக்கத்துடன் துவக்கப்பட்டதாக கூறுகிறார்.
பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் இணைவதோடு, மறுவாழ்வு முடிந்துவிடுவதில்லை என்கிறார் அவர்.
“மேற்கு வங்கம் மற்றும் மும்பையில் உள்ள இரண்டு பாதுகாப்பு இல்லங்களுக்கு சென்று பார்த்தோம். பெண்களுக்கு அழகுக் கலை மற்றும் தையல் கலையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அவர்கள் மனத்தடையை எதிர்கொள்வதோடு, தங்கள் வாழ்க்கையை மீண்டும் துவங்குவதற்கான பொருளாதார வழியும் இல்லாமல் தடுமாறுகின்றனர். அவர்களுக்கு தையல் இயந்திரம் அல்லது அழகு கலை சாதங்களை யார் வாங்கித்தருவார்கள்? அவர்களிடம் தேவையான ஆவணங்களும் கிடையாது,” என்கிறார்.
எட்டு மண்டலங்களில் செயல்படும் உத்தம் குழு 20 பெண்களுக்கு தங்கிட வசதி ஏற்பாடு செய்துள்ளதோடு, 11-12 பேர்களை கொண்ட சுய உதவி குழுக்களையும் துவக்கியுள்ளது. இவர்களுக்கு அரசு திட்டம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், ஆட்கடத்தலை ஆரம்பத்திலேயே தடுக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்ச்சிகளையும் நடத்துகிறது.
இந்த முயற்சிகளுக்கு நல்ல பயன் கிடைத்து வருகிறது. இதற்கு இரண்டு உதாரணங்களை கூறுகிறார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வந்த கிராமத்தில், 12 வயது சிறுமி, அவ்வப்போது ஒரு 24 வயது மனிதரால் தொடர்பு கொள்ளப்பட்டார். நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பெற்றிருந்த கிராமத்தினர் இதை கவனித்து, அந்த மனிதரை கண்காணித்து வந்தனர். ஒரு நாள் சிறுமியை அவர் நெருங்கிய போது கிராமவாசிகள் சுற்றி வளைத்தனர்.
அவர் தப்பிச்சென்றுவிட்டாலும் திரும்பி வரவேயில்லை. மற்றொரு சம்பவத்தில், மும்பையில் சமையல் வேலை வாங்கித்தருவதாக சொல்லப்பட்ட சிறுவன் அங்கு சென்று பார்த்தார். அது ஒரு பாராக இருந்தது மற்றும் விழிப்புணர்வு முகாமில் எச்சரிக்கப்பட்ட பல அம்சங்களை கண்டார். அவர் அங்கிருந்து தப்பி வந்துவிட்டார்.
இப்போது திருமணமாகிவிட்ட நஸீமா, தனது குடும்பத்தினரின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அவர் ஒரு தொழில்முனைவோராகவும் இருக்கிறார். கொஞ்சம் விவசாயம் செய்வதோடு, சுய உதவிக் குழு பெண்களுடன் இணைந்து ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்கிறார். இரண்டாவது முயற்சி இன்னமும் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றாலும் அவர் வெற்றியில் உறுதியாக இருக்கிறார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். விழிப்புணர்வு திட்டம் மேலும் பலரை சென்றடையும் என்றும் நம்புகிறார்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்
'சர்வைவர் தொடர்' - வருங்காலக் கணவரால் இழைக்கப்பட்ட அநீதி; வேதனையை பகிரும் சரிஃபா!
Edited by Induja Raghunathan