13 வயதில் யூடியூப் ஸ்டார்: லட்சங்களில் சம்பாதிக்கும் டிஸ்லெக்சியா பாதித்த சிறுவன்!
13 வயதில் ‘கணக்குப் புக் புல்லா ப்ராப்ளம்ஸ்..’ என சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா மாதிரி மற்ற குழந்தைகள் புலம்பிக் கொண்டிருக்க, அவர்களில் இருந்து வேறுபட்டு ஆறு இலக்கத்தில் சம்பாதித்து அசத்தி வருகிறார் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன்.
எதிர்கால வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை தருவதில் கல்வி இன்றியமையாதது. கல்வி கற்கும் வயதில் மனதை பணத்தின் மீது சிதறடிக்கக்கூடாது என்ற காரணத்தால், நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருசில வெளிநாடுகளில் அப்படியில்லை. படித்துக் கொண்டே குழந்தைகள் தங்களால் இயன்ற அளவு, ஏதாவது தொழில் செய்து வருமானம் ஈட்டவும் செய்கிறார்கள்.
அப்படிப்பட்டச் சிறுவர்களில் ஒருவர் தான் லண்டனைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒமரி மெக்வீன். பிரபல யூடியூபரான இந்தச் சிறுவன் செய்யும் ‘வீகன்’ சமையலுக்கு இணையத்தில் ரசிகர்கள் ஏராளம். பன்னீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்த்து முற்றிலும் தாவரங்களை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய பிரத்யேக சமையற்கலையில் இளம் மாஸ்டராக திகழ்ந்து வருகிறார் ஒமரி.

இவரது யூடியூப் சேனலின் பெயர் ’ஒமரி கோஸ் வைல்ட்’ (Omari Goes Wild). யூடியூப் மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீகன் சமையல் பற்றிய குறிப்புகள் மற்றும் ரெசிபிக்களைப் பகிர்ந்து வருகிறார் ஒமரி. இதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வரும் இச்சிறுவன், சிறுவயதிலேயே ’டிபாலிசியஸ் டிப்ஸ்’ (Dipalicious dips) என்ற நிறுவனத்தின் சிஇஓவாகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிறுவனம் மூலமாக ஆரோக்கியமான, சுவையான ஸ்நாக்ஸ் மற்றும் அதற்கு ஏற்ற சாஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஒமரி. அதோடு, குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வீகன் உணவுகளை எப்படித் தயார் செய்ய வேண்டும் என்ற சமையல் புத்தகங்களையும் எழுதி வருகிறார். பிரிட்டனின் இளம் விருது வென்ற டிவி செஃப் மற்றும் குக் புக் ஆத்தர் என்ற பெருமையும் ஒமரிக்கு உள்ளது.

சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர், இளம் வயது செஃப், இளம் தொழில்முனைவோர் என 13 வயதிலேயே பன்முக திறமைகளோடு உள்ள ஒமரி மற்ற குழந்தைகளைப் போல் கிடையாது. அவர் கற்றல் குறைபாடு உள்ள குழந்தை ஆவார். அவருக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளது. அதாவது, எந்த ஒரு தகவலையும் உடனே புரிந்து படிக்க இயலாத பாதிப்பு. எழுத்துக்களை அடையாளம் காண்பது, தனது தாய் மொழியை பேசுவது போன்ற பல விஷயங்களில்கூட இவர்களுக்கு சிரமங்கள் இருக்கும்.
டிஸ்லெக்ஸியா காரணமாக ஒமரியால் பள்ளிப் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆனால் இதையெல்லாம் நினைத்து சோர்ந்துவிடவில்லை ஒமரியின் பெற்றோர். மகனின் ஒவ்வொரு முயற்சிக்கும் அவர்கள் உறுதுணையாக உள்ளனர். சமூகவலைதளங்கள், டிபாலிசியஸ் டிப்ஸ் நிறுவனம் மற்றும் தனது சமையல் புத்தகங்கள் மூலம் இப்போதே 6 இலக்க வருமானத்தை ஈட்டு வருகிறார் ஒமர்.

“8 வயதில் இருந்தே சமூகவலைதளங்கலில் ஓமரி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறான். பணத்திற்காக மட்டும் இந்த யூடியூப் சேனல்களை ஓமரி நடத்தவில்லை. அவன் ஒரு வேகன் சமையல் கலைஞர். மக்களை ஒருங்கிணைத்து விலங்குகளைத் துன்புறுத்தாமல் சாப்பிடும் உணவு முறையைக் கொண்டு வர வேண்டும் என அவன் விரும்புகிறான்,” என்கிறார் அவரது அம்மா.
மேலும், தங்களது மகனின் இந்த வருமானத்தைக் கொண்டு, உலகம் முழுவதும் பிரத்யேக வீகன் உணவகங்களை திறக்கும் திட்டம் இருப்பதாகவும் ஒமரியின் அம்மா பெருமையுடன் கூறுகிறார்.