Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வீடில்லாமல் சுற்றியவரை கோடீஸ்வரர் ஆக்கிய யூடியூப்!

குடியிருக்க வீடு கூட இல்லாமல் பழைய காரில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்த அமெரிக்கர் ஒருவர், யூடியூப் சேனல் மூலம் கோடீஸ்வரரான கதை இது.

வீடில்லாமல் சுற்றியவரை கோடீஸ்வரர்  ஆக்கிய யூடியூப்!

Friday May 13, 2022 , 3 min Read

ஒரு செயலை அல்லது தொழிலை ஆரம்பிக்கும் போது நமது நோக்கம் பணம் சம்பாதிப்பது, புகழ் பெறுவது, சமூகத்திற்கு நல்லது செய்வது என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நமது முயற்சிகள் தீவிரமாகவும், செயல்கள் நேர்மையாகவும் இருக்கும்பட்சத்தில் இவை அனைத்துமே ஒரு கட்டத்தில் நம் வசமாகும். அதற்கு நல்லதொரு உதாரணம்தான் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் லியோனல் பார்னஸ்.

Lionel Barnes

குடியிருக்க ஒரு வீடுகூட இல்லாத சூழலில் பழைய பென்ஸ் காரில் மகனுடன் தங்கி வாழ்க்கை நடத்தி வந்த லியோனல், இன்று உலகம் முழுவதும் பிரபலமான யூடியூபர். இசை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.

லியோனல் பார்னஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை சேர்ந்தவர். பிளான்ட் நகரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு திடீரென வேலை பறிபோய்விட்டது. இதனால், வறுமையின் பிடியில் சிக்கிய லியோனல், தனது பதின்வயது மகனுடன், இருபது வருடம் பழமையான ஒரு பென்ஸ் காரில் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடியிருக்க வீடு கூட இல்லாமல் தந்தையும், மகனும் காரிலேயே தங்களுடைய வாழ்க்கையை நகர்த்தினர். இரவு நேரங்களில் ஓட்டல்கள் இருக்கும் பகுதிகளில் சென்று, கூட்டத்தோடு கூட்டமாக தங்களது காரை நிறுத்திவிட்டு அங்கேயே தூங்கி, எழுந்து வாழ்க்கை நடத்தி வந்தனர். கார் நிறுத்தும் இடங்களில் கிடைக்கும் இலவச இணைய சேவையை பயன்படுத்தி, லியோனல் வேலைக்கு விண்ணபித்து வந்தார். ஆனால் எதுவும் கைக்கூடவில்லை.

நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க, கையில் பணமில்லாமல் லியோனலும், அவரது மகனும் மிகுந்த கஷ்டத்தை சந்தித்து வந்தனர். ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதே பெரிய சவாலாக இருந்தது.

Lionel

இந்த நிலையில், தான் எப்போதோ ஆரம்பித்த தனது யூடியூப் சேனலின் நினைவு லியோனலுக்கு வந்தது. அதில் தனது கணக்கில் ரூ.2924.29, அதாவது 38 அமெரிக்க டாலர் இருந்தது தெரியவந்தது. அதை எடுத்து செலவுக்கு பயன்படுத்தலாம் என்றால், 100 டாலர்கள் சேர்ந்தால் மட்டுமே அதை எடுக்க முடியும் என்ற விதிமுறை அதனைத் தடுத்தது. இதையடுத்து,அவர் மேலும் 62 டாலர்களை சம்பாதிக்கும் யோசனையில் இறங்கினார். உடனடியாக சில வீடியோக்களை அப்லோட் செய்யும் வேலையையும் ஆரம்பித்தார்.

’தி லியோனல் ஷோ’ எனும் தனது சேனலில் முதலில் சில ஹிப்பாப் மியூசிக் வீடியோக்கள், பிரபலங்கள் பற்றிய கிசுகிசுக்கள், மற்ற பல்வேறு விஷயங்களை பற்றிய தனது கருத்துகள் உள்ளிட்டவைகளை லியோனல் பதிவேற்ற ஆரம்பித்தார். செல்போனில் படமெடுத்து, ஓட்டல்களில் கிடைக்கும் இலவச இணைய வசதியை பயன்படுத்தி வீடியோக்களை யூடியூப்பில் அவர் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார். ஆனாலும் அதற்கு பெரிய பலன் ஏதும் இல்லை.

இந்தச்சூழலில் தான் அமெரிக்க புகழ்பெற்ற ஹிப்பாப் பாடகர் ஜெய்-சி பற்றிய ஒரு வீடியோவை லியோனல் தனது சேனலில் பதிவேற்றம் செய்தார். ஜெய்-சிக்கும், அவரது காதல் மனைவியும், பிரபல பாடகருமான பியான்சேவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்த அந்த வீடியோ அமெரிக்காவில் வைரலானது. இதையடுத்து, லியோனில் யூடியூப் சேனலுக்கும் மக்களிடைய வரவேற்பு கூடியது.

பதிவேற்றப்பட்ட இரண்டு மாதங்களில் அந்த வீடியோ சுமார் 60 லட்சம் பார்வைகளைக் கடந்து லியோனலில் வாழ்வில் பெரிய திருப்பதை ஏற்படுத்தியது. அந்த வீடியோவின் மூலம் லியோனலின் சேனலை பின்தொடர்பவர்களும் அதிகரித்தனர். இதன் மூலம் அவருக்கு ரூ.7,69,550, அதாவது, 10000 அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைத்தது. வெறும் 100 டாலருக்காக வீடியோ பதிவிட ஆரம்பித்த லியோனலின் வாழ்வில் இந்த வீடியோ பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது.

தற்போது லியோனல் பார்னஸ் அமெரிக்காவின் பிரபல யூடியூபர்களில் ஒருவர். அவரது சேனலை 3,94,000 பேர் பின்தொடர்கிறார்கள். தி லியோனல் பி ஷோ சேனல் தவிர, ஐ நீட் மை காயின்ஸ் (I Need my coins), லியோனல் பி டூன்ஸ் (Lionel B Toons), லியோனல் பி விவோ (Lionel B Vevo) ஆகிய சேனல்களையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

Lionel Barnes

இதைத்தவிர, சொந்தமாக இசை நிறுவனம் ஒன்றையும் லியோனல் ஆரம்பித்துள்ளார். தனது நிறுவனம் மூலம் ரியாலிட்டி ஷோக்களையும் தயாரித்து ஒளிபரப்பி வருகிறார் லியோனல். மேலும், சொந்த வீடு வாங்கி சந்தோஷமாக வாழ்வை நடத்தி வருகிறார்.

யூடியூப் தவிர இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்பட பல சமூக வலைதளங்களிலும் லியோனல் தீவிரமாக இயங்கி வருகிறார். அங்கும் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. லியோனலின் சேனல்களில் பெரும்பாலும் இசைப் பிரபலங்கள் பற்றிய கிசுகிசுக்கள் தான் நிறைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ம் ஆண்டு வரை ஒரு பழைய பென்ஸ் காரில் வாழ்க்கை நடத்தி வந்த லியோனலின் வாழ்க்கைத்தரம் இன்று பல பென்ஸ் கார்களை வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அவரது விடாமுயற்சியும், உழைப்பும் தான்.

நம் எல்லோரின் வாழ்விலும் ஏற்றத்தாழ்வுகள் வருவது சகஜம் தான். தாழ்வுகள் வரும் போது அதில் இருந்து மீண்டு வர வாழ்க்கை ஒரு சந்தர்ப்பதை வழங்கும். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முயற்சித்தால் நிச்சயம் ஏற்றம் பெறலாம் என்பதற்கு லியோனல் ஒரு பெரிய எடுத்ததுக்காட்டு.