வலி,வாதம்,பரிதாபம்; இவற்றுகான பதிலை கண்டறிந்து அதை பிறருடன் பகிர்ந்து மகிழ்கிறார்...
அந்தப் பெண்ணின் உடம்பை போலியோ சூறையாடிய போது அவர் ஒரு கைவிடப்பட்ட குழந்தையாக இருந்தார். அவரைத் தாக்கிய காய்ச்சல், கழுத்துக்குக் கீழே செயலிழக்கச் செய்துவிட்டது. இரண்டு வருடம் மின் அதிர்ச்சி சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டார். எனினும் இடுப்புக்கு மேல்தான் பழைய நிலை திரும்பியது. அடுத்த 15 வருடங்கள் அவருக்கு ஆபரேஷனுக்கு மேல் ஆபரேஷன். பெற்றோர், மருத்துவர்கள், நண்பர்கள் என அனைவருமே நம்பிக்கை இழந்தனர். அவர் இடைவிடாமல் போராடினார் மாலதி என்ற அந்த பெண்.
சக்கர நாற்காலியில் இருந்த மாலதி, இன்று பத்மஸ்ரீ டாக்டர் மாலதி கே ஹொல்லா, அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை. நானூறுக்கும் மேல் மெடல்களுக்கு சொந்தக்காரராக உருமாறியது ஒரு அசாதாரணமான மன உறுதியின் கதைதான். இன்று அவர் பெங்களூருவில் மாத்ரு (Mathru Foundation) அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இது இந்திய கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இல்லம்.
டாக்டர் மாலதி கே ஹொல்லாவிடம் நீங்கள் அப்படி ஒரு உற்சாக ஊற்றை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள். இண்டியா இன்க்லூஷன் கருத்தரங்கில் யுவர்ஸ்டோரி மீடியா லேப்பிற்குள் அவர் சக்கர நாற்காலியில் நுழைந்த போது, இல்லை.. இல்லை.. புயலெனப் பிரவேசித்தபோது, அவரிடம் இருந்து வெளிப்பட்ட அந்த தன்னம்பிக்கை அங்கிருந்த அனைத்தையும், அனைவரையும் தொற்றிக் கொண்டது. அவர் எங்களிடம் சொன்னார், ”நான் ஒரு மாற்றுத் திறனாளி என்று நினைக்கவே இல்லை. ஆம், உடல் ரீதியில் நான் ஊனமுற்றிருக்கிறேன். ஆனால் அது எனது உடலில் ஒரு பாகம்தான். எனது தன்னம்பிக்கை செயலிழக்கவில்லை.”
விளையாட்டே மருந்தாக
1959ல், மாலதிக்கு ஒரு வயதிருக்கும்போது அவர் போலியோவால் தாக்கப்பட்ட போது அவரது பெற்றோரான கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி ஹொல்லா தம்பதியால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. மாலதி அவர்களின், நான்கு குழந்தைகளில் கடைசிக் குழந்தை. கிருஷ்ணமூர்த்தி பெங்களூரில் ஒரு சிறு ஓட்டல் நடத்தி வந்தார்.
ஆரம்பத்தில், இரண்டு வருடங்களுக்கு மாலதிக்கு மின் அதிர்ச்சி சிகிச்சைதான் தரப்பட்டது. அது அவரது உடலின் மேல்பாகம் பழைய நிலைக்கு திரும்ப உதவியது. ஆனால் இடுப்புக் கீழ் அப்படியேதான் இருந்தது. கனத்த இதயத்தோடு மாலதியின் பெற்றோர், அவரை சென்னையில் உள்ள ஈஸ்வரி பிரசாத் தத்தாத்ரேயா ஆர்த்தோபிடிக் சென்டரில் சேர்த்தனர். பதினைந்து வருடம் அங்கு கழித்தார் மாலதி. படிப்பு, அறுவைச் சிகிச்சை, உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்த கடினமான பயிற்சி என்று கழிந்தது. அப்போது அவரது பெருவிருப்பமாக இருந்தது விளையாட்டுத்தான். “விளையாட்டு எனக்கு ஒரு மருத்துவமாகவே இருந்தது. அது எனது வலியை மறக்கச் செய்தது” என நினைவு கூர்கிறார் மாலதி.
அது மற்றொரு உலகம். அங்கிருந்த ஒவ்வொருவரும் மாற்றுத் திறனாளிகள். அவர்களுடன்தான் மால்தி வளர்ந்தார். வலி, மருத்துவ நடைமுறைகள், தொடர்ச்சியான சிகிச்சை இதுவெல்லாம் அங்கு வழக்கமானதாக இருந்தது. “அங்கிருந்த பெரும்பாலான குழந்தைகள் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பெற்றோர் அங்கு விட்டுவிட்டுப் போன பின் திரும்பி வரவே இல்லை. அவர்களுக்கு உணவு, கல்வி, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை மையம்தான் வழங்கியது” என அவர் நினைவு கூறுகிறார். உடல் வலியும், மன வேதனையும் எங்களுக்கு வழக்கமானது. வலி மிகுந்த அறுவை சிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்டோம். அதைத் தொடர்ந்து வரும் பிசியோதெரபி அதை விட வலி மிகுந்தது. ஆனால் நான் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை.
வீட்டுக்கு வந்ததும் மாலதிக்கு அடுத்த போராட்டம் காத்திருந்தது. அங்கு அவர் தரையில் கிடந்த மீனாகத் துடித்தார். உடல் ஊனமுற்றவர் என்ற சமூகத்தின் பரிதாப பார்வையை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “உடல் ஊனமுற்ற ஒருவரின் மிகப் பெரிய மன வேதனை, அவரிடம் ஊர்ந்து கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மைதான். உண்மையில் அதுதான் ஊர்ந்து கொண்டிருந்தது. விளையாட்டு எனக்கு நம்பிக்கை தந்தது. எனது ஊனத்தை எதிர்கொள்வதற்கான பலத்தை அது எனக்குத் தந்தது.” என்கிறார் மாலதி.
தங்கக் குவியல்
பெங்களூரில் உள்ள மகாராணி கல்லூரியில் படிக்கும் போதும் மாலதி தனது விளையாட்டு பயிற்சியைத் தொடர்ந்தார். மும்பையில் 1975 மற்றும் 1981ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்குவதற்கான தேசிய சொசைட்டியால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் தொடர்ந்து விருதுகளை வென்று வந்தார். இதன் விளைவாக அவருக்கு 1981ல் சிண்டிகேட் வங்கியில் எழுத்தராக வேலை கிடைத்தது. அன்று முதல் அவர் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் அந்த வங்கியின் வண்ணத்தில் உடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். ஷாட்புட், டிஸ்கஸ், ஜாவ்லின், சக்கர நாற்காலி பந்தயம், தடை ஓட்டம் என பல்வேறு போட்டிகளில் அவர் மெடல்களைக் குவிப்பது தொடர்ந்தது.
1988ல் அவர் முதன்முதலாக சர்வதேச விளையாட்டுப் போட்டியில் -சியோலில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அதில் பங்கேற்ற வெளிநாட்டு தடகளப் போட்டியாளர்கள் தங்களுக்கெனப் பயிற்சியாளர்களை வைத்திருந்தனர். அவர்களது விளையாட்டில் அது எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மாலதி கண்டார். அதன்பிறகு விளையாட்டு நிபுணர்களின் கேசட்டுகளை வைத்துக் கொண்டு, அவை தரும் வழிகாட்டுதல் அடிப்படையில் அவரது பயிற்சி அமைந்தது. ஒரே வருடத்தில் சர்வதேச தங்க விருதுகளைப் பெற தொடங்கினார். 1989ல் டென்மார்க்கில் வேர்ல்ட் மாஸ்டர்ஸ் கேம்ஸ்சில் பங்கேற்ற அவர் அந்தப் போட்டியில், 200 மீட்டர், ஷாட்புட், டிஸ்கஸ், ஜாவ்லின் த்ரோ பந்தயங்களில் தங்கம் வென்றார்.
1996ல் அர்ஜூனா விருதையும் 2001ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். ராஜ்யோத்சவா விருது, ஏகலைவா விருது, தசரா விருது, பொதுத்துறை வங்கிகளின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் விருது, கே.கே.பிர்லா அறக்கட்டளை விருது, பிரதீபா ரத்னா விருது என மாலதி பெற்ற விருதுகளின் பட்டியல் மிக நீளமானது.
அவரது 56வது வயதிலும் சக்கர நாற்காலியில் வேகமாகச் செல்லும் இந்திய தடகள பெண்களில் முதல் இடத்தில்தான் இருக்கிறார். “இதுவரையில் 389 தங்கம், 27 வெள்ளி, 5 தாமிரப் பதக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் நான் வென்றிருக்கிறேன்.” என்று மாலதி சர்வசாதாரணமாகச் சொல்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் பெரும்பாலும் வெற்றி பெற்றதெல்லாம் வாடகை சக்கர நாற்காலியில்தான்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மையம்
“தற்போது ஒரு மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்கிறேன். நான் வெற்றிகரமான பெண்ணாகவும் பிரபலமானவளாகவும் இருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட வாய்ப்புகள் என்னைப் போல ஒரு சிலருக்குத் தான் கிடைத்திருக்கிறது.” இந்த எண்ணம்தான் அவரை 2002ல் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக "மாத்ரு" அறக்கட்டளையை ஏற்படுத்த தூண்டியது. நீண்ட நாட்கள், இதுபற்றி அவரது நண்பர் (இவரும் மாலதியைப் போல ஒரு பாரா அத்லெட்தான்) கிருஷ்ணா ரெட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது மற்ற நெருங்கிய நண்பர்களான கிரிக்கெட் ஆட்டக்காரர் வெங்கடேஷ் பிரசாத், அஸ்வினி நாச்சப்பா, எம்.கே.நாச்சப்பா ஆகியோர் இதற்கு உதவி செய்தனர்.
ஆரம்பத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையைப் படிக்க வைப்பதுதான் அவரது திட்டமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு எல்லா தொழில்முனைவோரைப் போல அவரது சிந்தனையும் மாறியது. படிப்போ மருத்துவ சிகிச்சையோ அளிக்க முடியாத கிராமப்புறப் பெற்றோர்களின், போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற திட்டம் உருவானது. மாத்ரு அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளைப் பற்றி கூறுகையில் “இரண்டு குழந்தைகளோடுதான் ஆரம்பித்தோம். தற்போது நான் 20 குழந்தைகளின் பெருமைமிகு தாய்.” என்கிறார் மாலதி. அந்தக் குழந்தைகள் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரையில் மாலதியுடன்தான் இருப்பார்கள். “அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்”
மாலதி சிண்டிகேட் வங்கியில் ஒரு மேலாளரும் கூட. 2009ல் அவரது சுயசரிதை “எ டிஃபரன்ட் ஸ்பிரிட்” (A Different Spirit) வெளியானது. அது ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளை அவநம்பிக்கையில் இருந்து வெளியேற்றி நம்பிக்கையைப் பெற வைத்தது.
மாத்ருவை நடத்துவது சுலபமல்ல. மாராத்தஹல்லியில் ஒரு சின்ன வீட்டில்தான் அதை அவர்கள் நடத்தி வருகிறார்கள். இரண்டு நிரந்தரப் பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர் யசோதம்மா, சமையல்காரர், மற்றொருவர் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிச் செல்வதில் இருந்து ஷாப்பிங் கூட்டிச் செல்வது வரை அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் குமார். குழந்தைகளின் மருத்துவச் செலவை கருணை மிகுந்த டாக்டர்கள் ஓரளவுக்குப் பார்த்துக் கொண்டனர். “அறக்கட்டளையில் உள்ள குழந்தைகள் போலியோ மற்றும் பெருமூளை வாத (cerebral palsy) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மிகவும் கஷ்டம். நாங்கள் அவர்களுக்கான மருத்துவ செலவுகளைக் கொடுக்கிறோம். அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை.” என்றார் மாலதி
பரந்த மனப்பான்மை உள்ள நன்கொடையாளர் ஒருவர் அறக்கட்டளை நடத்த, சர்ஜாபூரில் இரண்டு பிளாட் நிலம் கொடுத்திருக்கிறார். அங்கு அவர்கள் குழந்தைகளுக்காக ஒரு புதிய வீட்டை தற்போது கட்டிக் கொண்டிருக்கின்றனர். “எங்களுக்கு இரக்கம் தேவை இல்லை. சமூகம் எங்களை சரியாக புரிந்துகொண்டாலே போதும். எங்களின் திறனை வெளிப்படுத்த அதுதான் உதவியாக இருக்கும்.” என்கிறார் மாலதி மன உறுதியுடன்.
டாக்டர் மாலதி மின்னஞ்சல்தொடர்புக்கு: : [email protected] தொலைபேசி: 91 98800 80133