TechSparks Delhi - 'நாம் ஒவ்வொருவரும் நமக்கான சொந்த வழியை வரையறுக்க வேண்டும்' - ஷ்ரத்தா சர்மா!
யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ., ஷரத்தா சர்மா, யுவர்ஸ்டோரியின் புகழ்பெற்ற டெக்ஸ்பார்க்ஸ் மாநாட்டின் முதல் தில்லி பதிப்பை, நம் ஒவ்வொருவருக்குமான கொண்டாட்டமாக சமர்பித்தார்.
யுவர்ஸ்டோரி நிறுவனர், மற்றும் சி.இ.ஓ., ஷ்ரத்தா சர்மா, ஸ்டார்ட் அப் உலகில் தனது பயணம் துவங்கிய விதத்தையும், இந்தியாவின் வெற்றிகரமான, மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவிடம் முதலீட்டிற்கான கோரிக்கை முன்வைத்தது பற்றியும் பகிர்ந்து கொண்டு, டெக்ஸ்பார்க்ஸ் தில்லியின் முதல் பதிப்பிற்கான உற்சாகத்தை உண்டாக்கினார்.
2015ல் நம்பிக்கையை உண்டாக்கிக் கொண்டு, ரத்தன் டாடாவை அணுகிய விதம் பற்றி ஷ்ரத்தா சர்மா பகிர்ந்து கொண்டார். யுவர்ஸ்டோரிக்கான எண்ணம் பற்றி அவர் ரத்தன் டாடாவிடம் எளிமையாகவும், நேரடியாகவும் முன்வைத்தார். யுவர்ஸ்டோரி; பின்னணி அல்லது சமூக அந்தஸ்து பற்றி கவலை இல்லாமல், எல்லோரும் சமமாக விளங்கும், சமவாய்ப்பு பெற்று தங்களுக்கான கதைகளை பகிர்ந்து கொள்ளும் மேடை என எடுத்துரைத்தார்.
மீடியாவுக்கும், தனக்கும் சரியாக வருவதில்லை என ரத்தன் டாடா கூறிய போது,
“உங்களுக்கும் எனக்கும் சரியாக வரும் என உறுதி அளித்து யுவர்ஸ்டோரியில் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக ஷரத்தா தெரிவித்தார்.
அதன் பிறகு, நடந்தவை அனைவருக்கும் தெரியும். ரத்தன் டாடா யுவர்ஸ்டோரியில் முதலீடு செய்யத் தீர்மானித்தார்.
“நிதி திரட்ட சரியான வழி என்று எதுவும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கான சொந்த வழியை கண்டறிய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம் வழியை வரையறுக்க வேண்டும்,” என்று ஷரத்தா சர்மா தெரிவித்தார்.
யுவர்ஸ்டோர் மூலம் அனைத்து மக்களும் தங்கள் கதைகளை சொல்ல வேண்டும் என விரும்புகிறோம், என்று டெக்ஸ்பார்க்ஸ்-இன் டெல்லி பதிப்பை தொடங்கிவைத்து முக்கிய உரை நிகழ்த்திய போது ஷ்ரத்தா சர்மா கூறினார்.
பெங்களூருவில் வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு, 14வது ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சி முதல் முறையாக தில்லியில் நடைபெறுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய, செல்வாக்குமிக்க ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப மாநாடான டெக்ஸ்பார்க்சின் தில்லி முதல் பதிப்பு, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், தலைவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட முன்னணி பேச்சாளர்களை கொண்டுள்ளது.
“இந்த இறைச்சலில், பொறியில், நாம் கற்கிறோம், கொண்டாடுகிறோம், வாழ்கிறோம், நம் சொந்த பயணத்தை அனுபவிக்கிறோம். இது தான் எனக்கு டெக்ஸ்பார்க்சாக தோன்றுகிறது,” என்று ஷ்ரத்தா சர்மா கூறினார். எனவே தான் நம் ஒவ்வொருடனும் கொண்டாட தில்லியில் இருக்கிறோம் என்றார்.
"உங்களை பாராட்டி, கொண்டாடுங்கள். இது தான் டெக்ஸ்பார்க்சின் தன்மை. அறிவை கிரகித்துக்கொள்வதில் வெட்கம் கொள்ள வேண்டாம் என்பதே தொழில்முனைவோர்களுக்கு என் அறிவுரை,” என்றார்.
தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி, கொள்கை, சுகாதாரம்- நலம், ரீடைல், தொழில் 4.0, டி2சி, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட ஸ்டார்ட் அப் சூழலின் முக்கிய தலைப்புகள் குறித்து கவனம் செலுத்த உள்ளது.
இரண்டு நாள் நிகழ்வில், ’கிரேட் இந்தியன் டெக்கேட்’இல் இருந்து பெறக்கூடிய உள்ளொளி, மற்றும் பாடங்களை பெறுவதோடு, துடிப்பான உரையாடல்கள், குழு உரையாடல்கள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளலாம்.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan