கடலூர் வெள்ளம்- மீட்பு பணியில் பல்வேறு குழுக்கள்!
மழையால் சென்னையைவிட பலமடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது கடலூர். மீட்புப்பணிக்காக இந்திய ராணுவம் அங்கே விரைந்திருக்கிறது. அரசாங்க ஊழியர்கள் தீபாவளியிலிருந்து இன்றுவரை இடையறாது பணியாற்றி வருகிறார்கள். இன்னமும் நிலைமை சீரானபாடில்லை.
இந்தநிலையில் சென்னையை அடுத்து கடலூருக்கு பல்வேறு களப்பணியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அங்கே படையெடுத்திருக்கிறார்கள். எனினும் சென்னை அளவிற்கு கடலூருக்கு நிவாரணம் சென்றடையவில்லை என பலர் கூறத்தொடங்கியுள்ளனர். அங்கே எத்தனை கிராமங்கள் இருக்கிறது? எங்கெல்லாம் வெள்ள பாதிப்பும் மழை பாதிப்பும் அதிகம்? அந்த கிராமங்களுக்கு எந்த வழியில் செல்வது என்றெல்லாம் எதுவும் தெரியாமல், ஆயிரக்கணக்கான உணவு பொட்டலங்களோடு அங்கே சென்றவர்கள் திக்கு தெரியாமல் விழித்தனர் என்பது தான் உண்மை.
“ஒரு பத்து பதினைந்து கிராமத்துக்கு தான் வழி தெரிந்து போனோம். எல்லாரும் சில கிராமங்களின் பெயரை மட்டும் தெரிந்துவைத்திருக்கிறார்கள் ஆனால் போவதற்கான வழி தெரியவில்லை. எனவே இன்னும் பல ஊர்களுக்கு உணவும் அத்தியாவசிய தேவைகளும் சென்று அடையவில்லை என்பது உண்மை தான்” என்கிறார் அங்கே பணியாற்றிக்கொண்டிருக்கும் பாஸ்கர் ஆறுமுகம் என்னும் தன்னார்வலர். இவர் ஒரு பதினைந்து பேர் கொண்ட குழுவோடு கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பணியாற்றி வருகிறார்.
"நான் பார்த்த வரை, இயற்கை உபாதை கழிக்கக்கூட கழிவறை இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலை உள்ளது, குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என்கிறார் பாஸ்கர் ஆறுமுகம். இது பற்றி அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பதிவிட்டும் வருகிறார்.
நரேன் ராஜகோபாலன் என்பவர் ஒரு தொழில்நுட்ப வல்லுனர், சென்னையை சேர்ந்தவர். சென்னையில் பல்வேறு உதவிகள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில் தன் சேவை கடலூருக்கு தான் உடனடியாக தேவை என்கிறார். அங்கே உதவும் பலரையும் ஒருங்கிணைத்து வருகிறார். பாதிக்கப்பட்ட பல கிராமங்களை திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆழி செந்தில்நாதன் என்பவர் 'மக்கள் இணையம்' அமைப்பை சேர்ந்தவர். கடலூர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 நாட்களுக்கான அடிப்படை தேவைகளை அளிக்கும் முயற்சியில் மக்கள் இணையம் அமைப்பு ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1000ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக கடலூரில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.
கார்த்திகேயன் குணசேகரன் என்பவர் தன் நண்பர்களோடு அடிப்படை மருந்துகளோடு கடலூருக்கு விரைந்திருக்கிறார். இவர் ஃபேஸ்புக்கில் இயங்கும் சாதாரண மனிதர். இவர் போலவே ஃபேஸ்புக்கில் இருக்கும் பலரும் நிவாரண தேவைகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ப்ரதீப் என்பவர் கடலூரை சேர்ந்தவர். கடந்த ஐந்து நாட்களாக கடலூரில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 5 நாட்களாக வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கி கடுமையாக பணியாற்றியவர். மிகவும் சோர்வுற்றிருப்பதாகவும், வேறு யாராவது உதவ முடியுமா என்று கேட்டும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
"இப்போது கடலூருக்கு நாலாபுறம் இருந்தும் நிவாரணப்பொருட்கள் வந்தவண்ணமே உள்ளன. அதிலும் உணவு கிட்டத்தட்ட எல்லோருமே அனுப்புகிறார்கள். ஏற்கனவே தேவையான அளவு உணவும், தண்ணீரும் அங்கு கிடைக்கிறது. கடலூரில் அரசாங்கமும் தொடர்ந்து உணவு தயாரித்து கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆக இப்போது நிவாரண பொருட்கள் அனுப்பும் நல்லுள்ளங்கள் அதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கத் தேவையான பொருட்களான ஸ்டவ், டார்ச்லைட்கள், உடைகள், போர்வைகள் போன்றவைகளை அதிக அளவில் அனுப்பலாம். இதுதான் வெள்ளம் வடிந்தபின் அவர்கள் எப்போதும்போல தங்கள் வாழ்க்கையை தொடர ஓரளவேனும் உதவும்.தொடர்ந்து அனுப்பப்படும் உணவுகள் வீணாவதை தடுக்க இது ஒன்றே வழி.” என்பதாக தெரிவிக்கிறார்.
ஓசை செல்லா என்பவர் 200 டீசர்டுகளுடன் கோயம்பத்தூரில் இருந்து தன் குழுவோடு கடலூர் விரைந்திருக்கிறார்.
தனிகை எழிலன் என்பவர் 800கிலோ உணவு மற்றும் பிஸ்கெட்டுகளை பல்வேறு தரப்பட்டவர்களிடமிருந்து திரட்டி காரமடையிலிருந்து கடலூருக்கு விரைந்திருக்கிறார்.
வினோத் குமார் என்பவர் 30 பேர் உள்ளடக்கிய குழுவினரோடு உணவு மற்றும் மருத்துவ பொருட்களோடு ஆயிரம் பேருக்கு உதவும் நோக்கோடு கடலூர் விரைந்திருக்கிறார்.
இவையெல்லாம் நம் பார்வைக்கு கிடைத்த ஒரு துளி. பலரும் இது போல் கடலூருக்கும் உதவ பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஊராக இருந்தாலும் மனிதர்களும் மனித உயிர்களும் ஒன்றே, எல்லாருடைய தேவைகளை பூர்த்து செய்ய உலகெங்கும் மக்கள் அளித்துவரும் உதவி, பிரமிப்பையும் மனிதநேயத்தின் சக்தியையும் நமக்கு உணர்த்துகின்றது.
(படங்கள் உதவி: Milaap.org)