தொழில் அனுபவத்தை மைக்கெல் டெல் இடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!
மைக்கேல் டெல் இளம் வயதான 27 வயதிலேயே நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றி அந்நிறுவனத்தை ஃபோர்ப்ஸ் டாப் 500 நிறுவனங்களில் இடம்பெறச் செய்தார். உலகின் மிகப்பெரிய பெர்சனல் கணிணி (PC) தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்.
"நீங்கள் வெற்றி பெற ஒரு மேதையாகவோ, தொலைநோக்கு பார்வை கொண்டவராகவோ அல்லது பட்டப்படிப்பு படித்தவராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. முறையான கட்டமைப்பும் கனவும் இருந்தால் போதும்” என்று ஒரு முறை அவர் குறிப்பிட்டிருந்தார்.
மைக்கேல் டெல் தனிநபருக்கென திருத்தியமைக்கப்படும் பர்சனல் கம்ப்யூட்டரை விற்பனை செய்யும் சாதாரண யோசனையை பின்பற்ற விரும்பினார். இதனால் அவர்களின் தேவையை சிறப்பாக புரிந்துகொண்டு கம்ப்யூட்டிங் தீர்வுகளை தேவைக்கேற்ப வழங்கமுடியும் என்று நம்பினார்.
மற்றவர்களை காட்டிலும் தனித்தன்மையுடன் செயல்படும் இவரிடமிருந்து சில படிப்பினைகள்:
ஆபத்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
சமாளிக்கக்கூடிய ஆபத்துகளை மைக்கேல் டெல் ஏற்றுக்கொள்வார். ஆபத்துகள் சரியான காரணங்களுடன் பொருந்தி இருக்குமெனில் அவற்றை ஏற்றுக்கொள்ள அவரது நிர்வாகிகளையும் வலியுறுத்துவார். டெல் கூறுகையில்,
“மக்கள் மேலும் புதுமைகளை கண்டறிய அவர்களை ஊக்குவிக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள தேவையான பாதுகாப்பை நீங்கள் வழங்கவேண்டும். தொடர்ச்சியான திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் எங்களது கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளோம். மக்கள் ஆய்வு செய்து பார்க்க உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.”
Entrepreneurial Genius : The Power of Passion, இதில் Gene N. Landrum குறிப்பிட்டுள்ளது போன்ற கருத்துக்களையே இவரும் பதிவு செய்கிறார்.
வலுவான சுய பிம்பத்துடன் இருங்கள்
ஒருவர் வெற்றியடைவதற்கு தன்னுடைய கனவை நம்பவேண்டும். 1983-ல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மைக்கேல் டெல் தன்னால் ஐபிஎம்மை வெல்ல முடியும் என்று நம்பினார். அவரது பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது புத்தகங்களுக்கு பதிலாக கணிணியின் பாகங்கள் இருந்தது. அவர் தனது தந்தையிடம் தான் ஐபிஎம்முடன் போட்டியிட விரும்புவதாகவும் அவர்கள் வழங்குவதைவிட சிறந்த கணிணியை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
லட்சியத்தை அடைய தனக்கிருக்கும் திறன் குறித்து அவர் ஒருபோதும் சந்தேகப்படவில்லை. அப்படிப்பட்ட நம்பிக்கை நிறைந்த மன நிலையில் இருந்தார். மக்களை ஒருங்கிணைத்துக் கொள்ளுங்கள் ”தானாக உருவாக்கும் வெற்றியைப் போல எதுவுமில்லை” என்றார் டெல்.
சிறிய அளவில் இருக்கும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய நன்கு ஒருங்கிணைவது தான் சிறந்த வாய்ப்பாக அமையும். உலகெங்கிலுமுள்ள டெல் குழுவினர் பகிர்ந்துகொண்ட அறிவு மற்றும் கடின உழைப்பு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பு மற்றும் ஆதரவு போன்றவை கிடைக்காமல் போயிருந்தால் எந்தவிதமான வளர்ச்சியையும் அடைந்திருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.
புதிய அல்லது கடினமான சூழ்நிலைகளை திறம்பட கையாளவேண்டும் டெல்லுக்கு 16 வயது இருக்கும்போது செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. தொலைபேசி மூலமாக செய்தித்தாளின் சந்தாதாரர்களைப் பெறவேண்டியது அவருடைய வேலை. அப்போது செய்தித்தாள்களை வாங்குவோர்களிடம் இரண்டு பொதுவான விஷயங்கள் இருப்பதை டெல் கவனித்தார். ஒன்று புது வீட்டிற்கு மாறுபவர்களாக இருப்பார்கள் அல்லது திருமணம் செய்துகொள்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் குறித்த தகவல்கள் பலவற்றை பெற முடிந்தது. அவர் வசித்த டெக்சாஸ் மாநிலத்தில் திருமண உரிமத்தை பெற மாநிலத்தில் பதிவு செய்து பொதுப்படையாக அறிவிக்கவேண்டும். குறிப்பாக உரிமம் அனுப்பப்படவேண்டிய முகவரியை தெரியப்படுத்தவேண்டும். ஆகையால் அவரது நண்பர்களின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று திருமண உரிமத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முகவரியை சேகரித்தார். செய்தித்தாளை இலவசமாக சோதனை செய்ய அனுப்புவதாகவும் பின்னர் சந்தாதாரராகலாம் என்றும் குறிப்பிட்டு அவர்களுக்கு நேரடியாக மெயில் அனுப்பினார். இறுதியில் கணிசமான அளவிலான டீன்ஏஜ் சந்தாதாரர்களை பெற்றார்.
மிகச்சிறந்த நபர்களின் அருகிலேயே இருங்கள்
ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பார்ட்னர்கள், சப்ளையர்கள் அல்லது எந்தவித தொழில் சார்ந்த உறவுகளாக இருப்பினும் அவர்களில் மிகச்சிறந்த மனிதர்களின் நட்பிலேயே நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர் இருப்பது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் என்று அறிவுரை வழங்கினார் டெல். இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகள் நிறுவனத்திற்கு சவால் விட்டு வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டுவார்கள்.
”மக்கள் நிறைந்திருக்கும் ஒரு அறையில் எப்போதும் சாமர்த்தியமாக இருக்க முயற்சிக்காதீர்கள். அப்படி முயற்சி செய்தால் அதிக சாமர்த்தியசாலியான ஒருவரை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அல்லது உங்களுக்கான அறையை மாற்ற வேண்டியிருக்கும்.” என்று 2003-ல் டெல் குறிப்பிட்டார்.
கடினமாக சமயங்கள் வாய்ப்புகளை அளிக்கும்
சில சமயம் மக்கள் தங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் கிடைப்பதற்கு வேறு யாரும் எந்த வேலையும் செய்யாதுதான் காரணம் என்று குழம்புகிறார்கள். டெல்லைப் பொருத்தவரை இப்படிப்பட்ட தருணங்களில்தான் வெற்றிகரமான தொழில்கள் உருவாவதற்கான விதை விதைக்கப்படுகிறது. துறையில் மிகவும் கடினமான நேரம் நிலவும்போதுதான் பல சிறந்த நிறுவனங்கள் உருவாகி இருப்பதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு 1980 களின் தொடக்கத்தில் டெல் துவங்கியபோது அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. பெர்சனல் கணிணி துறை கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த நேரம். அனைத்து மின்சார சாதனங்களும் ஜப்பானியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததாக நம்பப்பட்டது. அதற்குப்பின் பெர்சனல் கம்ப்யூட்டரின் அறிமுகம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியது.