பிட்காயின் மதிப்பு சரிந்தால் ஒரு நாடே கடும் சிக்கலை சந்திக்கும்: எந்த நாடு தெரியுமா?
எல் சால்வடாரின் பொருளாதாரமானது பிட்காயினின் மதிப்பு ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நேரடி விகிதாசாரத்தை சந்தித்து வருகிறது.
பிரபல கிரிப்டோகரன்சி மதிப்பு கடந்த சில நாட்களாக சரிவை மட்டுமே சந்தித்து உலகெங்கிலும் உள்ள கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
டெர்ரா, கார்டானோ உள்ளிட்ட பல கிரிப்டோகரன்சி மதிப்புகள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கின்றன. இது அனைத்தும் ஒருபுறம் இருக்க பிட்காயின் மதிப்பு குறைந்தால் ஒரு நாடே கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. அது மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார் நாடாகும்.
பிட்காயினில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையை எடுத்த நாடு எல் சால்வடார். ஆனால் நிலையற்ற மதிப்பைக் கொண்டிருக்கும் கிரிப்டோவில் முதலீடு செய்வதில் குறிப்பிட்ட அளவிலான தீமைகளும் இருக்கின்றன.
பிட்காயின் மதிப்பு சரிந்தால் எந்த நிலையிலும் பொருளாதார சரிவை சந்திக்கும் நிலையில் எல் சால்வடார் இருக்கிறது. அப்படி பிட்காயின் மதிப்பு சரியும் பட்சத்தில் எல் சால்வடார் புதிய திட்டங்களை கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல் சால்வடார் நாட்டு ஜனாதிபதி நயிப் புகேலே, தனது நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ தேசிய நாணயமாக அறிவித்தார். இந்த முயற்சியில் எல் சால்வடார் நாட்டு ஜனாதிபதியின் தோல்வி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றது.
எல் சால்வடாரில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக பிட்காயின் அறிவிக்கப்பட்டது. பொதுவாக எல் சால்வடார் நாட்டில் புழக்கத்தில் பயன்படுத்தப்படும் நாணயம் அமெரிக்க டாலர் ஆகும். இதையடுத்து, எல் சால்வடார் நாட்டில் சுமார் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 400 பிட்காயின்களை வாங்கி புழக்கத்தில் விட முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, முதற்கட்டமாக 200 பிட்காயின்கள் வாங்கப்பட்டது. பிட்காயின் புழக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்தனை அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட பிட்காயின் மதிப்பு திடீரென கடுமையான சரிவை சந்தித்து வரும் நிலையில் எல் சால்வடார் கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள தயாராகிறது.
பிட்காயின் விலை வீழ்ச்சி காரணமாக தற்போது எல் சால்வடார் எந்த ஒரு சிறு பரிவர்த்தனைகளில் கூட லாபம் ஈட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிட்காயின் தொடர்பான எந்த ஒரு புதிய திட்டத்தையும் அந்நாட்டு ஜனாதிபதி முன்வைக்கப்படாத பட்சத்தில் எல் சால்வடார் பேரழிவை சந்திக்கும் என கூறப்படுகிறது.
பிட்காயினின் 12 ஆண்டு கால வரலாற்றில் இதை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக் கொண்ட முதல் நாடு எல் சால்வடார். எங்கள் நாட்டின் பிட்காயின் புழக்க சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் பிற நாடுகளும் எங்கள் நாட்டை போலவே பிட்காயினை ஏற்றுக் கொள்வார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும், வணிக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும், வரி செலுத்துவதற்கும் அரசாங்கம் பிட் காயினை ஏற்றுக் கொள்ளும் என அந்நாட்டு ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். பிட்காயினின் சொர்க்கம் என்றே இந்த நாடு அழைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த நாடு சந்தித்து வரும் சிக்கல் பல்வேறு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
இருப்பினும் பாரம்பரிய நிதி அமைப்புக்கே ஆர்வம் காட்டும் அந்நாட்டின் பெரும்பாலான குடிமக்கள் பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. காரணம் அமெரிக்க டாலர் நிலையானது என்றும் பிட்காயின் நிலையற்றது என்றும் நன்கு புரிந்துக் கொண்டது. அந்நாட்டு ஜனாதிபதி அறிவிப்புக்கு ஏற்ப பலரும் பரிவர்த்தனை செய்யத் தொடங்கி இருப்பதால் அந்நாட்டு பெரும் பொருளாதார சிக்கலை சந்திக்காமல் இருக்க புதிய வியூகம் வகுக்க வேண்டியது கட்டாயம் என கூறப்படுகிறது.