பங்குகளில் முதலீடு செய்வது எப்படி முதலீட்டாளர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த ஐடியா!
எலான் மஸ்க் நம்பிக்கை வாய்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குமாறு தனது பாலோயர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குமாறு தனது ஃபாலோயர்களுக்கு எலான் மஸ்க் அறிவுரை கூறியுள்ளார்.
ட்விட்டரில் ஆக்டிவாக வலம் வந்த கொண்டிருந்த எலான் மஸ்க் சமீபத்தில் அதனை $43 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை 73.5 மில்லியன் கொடுத்து வாங்கினார். இந்த அதிரடி நடவடிக்கையால் எலான் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறினார்.
இதனையடுத்து, நிர்வாகக்குழுவில் சேருவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்காத மஸ்க் ட்விட்டரின் 100 சதவிகித பங்குகளையும் $43 பில்லியன் வாங்க விரும்புவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ட்விட்டர் நிறுவனம் தனது பங்குதாரர்களிடம் இருந்து மிகப்பெரிய அழுத்தத்தை சந்திக்க நேர்ந்தது. பின்னர், எலான் மஸ்க்கின் டீலை ஏற்றுக்கொண்டு, ட்விட்டரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ட்விட்டரின் 100 சதவீத பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது, சுமார் ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்கினார். இதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். இதனையடுத்து, ட்விட்டரின் முதலீட்டாளர்கள் பலரும் எலான் மஸ்க்கிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். அதற்கு எலான் மஸ்க் முதன் முறையாக பதில் அளித்துள்ளார்.
முதலீட்டாளர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க்,
"என்னிடம் இது பற்றி அதிகமுறை கேட்கப்பட்டு விட்டன. அதனால் இதற்கு பதில் கூறுகின்றேன். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பல நிறுவனங்களின் பங்குகளை வாங்குங்கள். அதே நேரத்தில் அந்தந்த நிறுவனத்தின் நிலைமை மோசமடையும் போது மட்டும் அதன் பங்குகளை விற்று விடுங்கள். அதற்காக சந்தையில் அதன் மதிப்பு இறங்கும் போது பதற்றம் அடையாதீர்கள். இது உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பலன் தரும்," எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.