Elon Musk ட்விட்டரை வாங்கும் டீல் கேன்சல்: மஸ்க் மீது வழக்கு பாயுமா?
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து விலகி கொள்ள இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் Elon Musk, 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒப்பந்தத்தில் பல்வேறு மீறல்களை இதற்கான காரணமாகக் கூறியுள்ளார்.
உலகச் செல்வந்தரான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரை விலைக்கு வாங்க திட்டமிட்டிருப்பதாக அடுத்து ஏற்பட்ட பல்வேறு திருப்பங்களில் அண்மையில் ஏற்பட்ட திடீர் திருப்பமாக இது அமைகிறது.
ஸ்பேம் கணக்குகள் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்களை டிவிட்டர் அளிக்காதது தனது முடிவில் இருந்து பின் வாங்கக் காரணம் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை செயல்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது.
"மஸ்க் ஏற்றுக்கொண்ட அம்சங்கள் மற்றும் விலையில் ஒப்பந்தத்தை நிறைவேற்ற டிவிட்டர் இயக்குனர் குழு உறுதியாக இருக்கிறது,” என டிவிட்டர் தலைவர் பிரெட் டெய்லர் ஒரு டிவீட்டில் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விஷயம் இரு தரப்பிடையே சட்டப் போராட்டமாக மாற உள்ளது.
மூல ஒப்பந்தம் படி, இந்த மீறலுக்கு ஒரு பில்லியன் டாலர் கட்டணம் உண்டு.
போலிக் கணக்குகள்
டிவிட்டரில் உள்ள போலிக் கணக்குகள் (fake handles) மற்றும் ஸ்பேம் கணக்குகள் (Spam accounts) தொடர்பான தரவுகளை எதிர்நோக்குவதால் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மே மாதம் மஸ்க் தெரிவித்தார்.
போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் கணக்குகள் மொத்த பயனாளிகளில் 5 சதவீதத்திற்கும் குறைவு என டிவிட்டர் கூறியதற்கான ஆதாரங்களை அவர் கேட்டிருந்தார்.
இந்த தகவல்களை டிவிட்டர் அளிக்கவில்லை அல்லது மறுத்துவிட்டது என அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிற்கு எலான் மஸ்க் வழக்கறிஞர் தாக்கல் செய்த கடிதத்தில் கூறியிருந்தார்.
"சில நேரங்களில் டிவிட்டர் இந்த கோரிக்கையை அலட்சியம் செய்தது. சில நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி நிராகரித்தது. சில நேரங்களில் அறைகுறையான அல்லது பயனில்லாத தகவல்களை அளித்தது,” என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
பெரிய அளவில் பயனாளிகளுக்கு தகவல் அளித்து, இந்த மேடையை தவறாக பயன்படுத்தும் வகையில் ஸ்பேம் கணக்குகள் அமைகின்றன. இத்தகைய கணக்குகளை நாள்தோறும் ஒரு மில்லியன் அளவுக்கு நீக்குவதாக டிவிட்டர் அண்மையில் தெரிவித்தது.
ஸ்பேம் அல்லது பாட் கணக்குகள் (bot accounts) டிவிட்டர் பயனாளிகளில் 20 சதவீதத்திற்கு மேல் இருக்கலாம் என மஸ்க் கருதுகிறார்.
மஸ்கின் அண்மை அறிவிப்பை அடுத்து, டிவிட்டர் பங்குகள் 7 சதவீதம் சரிந்ததன. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க், கருத்து சுதந்திர ஆதரவாளராகக் கருதப்படுபவர், டிவிட்டர் தனது வசம் வந்த பிறகு அதை கருத்து கட்டுப்பாடுகளின் பிடியில் இருந்து விடுவிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கணக்கிற்கு தடை உள்ளிட்ட தடை நடவடிக்கைகளை அவர் விமர்சித்திருந்தார்.
தமிழில்: சைபர் சிம்மன்