முடிந்தது டீல் - ஒரு வழியாக ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் முதலில் செய்தது என்ன?
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக மாறியுள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதன் உரிமையாளராக மாறியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களுடன் இப்போது ட்விட்டரையும் தனது சாம்ராஜ்யத்தின் கீழ் இணைந்துள்ளார் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், வந்த வேகத்திலேயே தன்னை தவறாக விமர்சித்த ட்விட்டர் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களை நீக்கம் செய்துள்ளார்.
44 மில்லியன் டாலர் டிவிட்டர் ஒப்பந்தம்:
முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டரை வாங்க இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஏப்ரல் 4 அன்று ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கியதன் மூலமாக அதன் பெரும் பங்குதாரராக மாறினார். இதனையடுத்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர் ட்விட்டரின் குழுவில் சேர ஒப்புக்கொண்டார். ஒரு பங்குக்கு $54.20 க்கு நிறுவனத்தை வாங்க முன்வந்தார்
எனினும், டிவிட்டர் தரப்பில் பொய் கணக்குகள் தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மஸ்க்- டிவிட்டர் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி நிதிமன்ற விவகாரமாகவும் மாறியது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் கெடுவும் விதித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமைக்குள் (அதாவது இன்று) அன்று டிவிட்டர் கையகப்படுத்தலை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
டிவிட்டர் கையகப்படுத்தலுக்காக அவருக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ள வங்கிகள், நிறுவனங்களுடனான வீடியோ உரையாடலில் மஸ்க் இந்த தகவல் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் நீதிமன்ற கெடுவுக்கு ஒருநாள் முன்னதாகவே 44 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தின் மூலமாக எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள எலான் மஸ்க்,
“ட்விட்டரை நான் ஏன் வாங்க விரும்பினேன் என்பதை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். நான் ஏன் ட்விட்டரை வாங்கினேன், விளம்பரம் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி நிறைய யூகங்கள் உள்ளன. அதில், பெரும்பாலானவை தவறானவை. நான் ட்விட்டரை வாங்கியதற்கான காரணம் நாகரீகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு பொதுவான டிஜிட்டல் ஊடகத்தை வைத்திருப்பது முக்கியம், அங்கு பலவிதமான நம்பிக்கைகளை ஆரோக்கியமான முறையில், வன்முறையை நாடாமல் விவாதிக்க முடியும். சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி எதிரொலி அறைகளாக பிரிந்து நமது சமூகத்தை அதிக வெறுப்பை உருவாக்கி பிளவுபடுத்தும் பெரும் ஆபத்து தற்போது உள்ளது,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் உயர் அதிகாரிகள் பணி நீக்கம்:
இந்தச் செய்தி வெளியான அடுத்த நொடியில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவால், ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் உள்ளிட்டோர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் எலான் மஸ்க் பதவியை விட்டு பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க் தரப்போ, ட்விட்டர் தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்களை உறுதி செய்யவில்லை.
ட்விட்டரை வாங்குவதற்கு முன்னரும், பின்னரும் எலான் மஸ்க் - பராக் அக்ரவால் இடையே கடும் வாக்குவாதங்கள் ட்விட்டரில் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக தான் ட்விட்டரை வாங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மஸ்க்.
“உண்மைக்குப் புறம்பான தகவல்கள், ஆதாரமற்ற அவதூறுகள், வசைகளை உள்ளடக்கிய கருத்துக்கள் சமூகத்தில் பரவுவதை தடுக்கவே நான் ட்விட்டரை வாங்கினேன். அதிக பணம் சம்பாதிக்க நான் அதைச் செய்யவில்லை. நான் நேசிக்கும் மனிதகுலத்திற்கு உதவ முயற்சிப்பதற்காக இதைச் செய்தேன். எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த இலக்கைத் தொடருவதில் தோல்வி என்பது மிகவும் உண்மையான சாத்தியம் என்பதை உணர்ந்து, பணிவுடன் அவ்வாறு செய்கிறேன்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் உங்கள் பிராண்டை வலுப்படுத்தும் மற்றும் உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் உலகின் மிகவும் மரியாதைக்குரிய விளம்பர தளமாக இருக்க விரும்புகிறது. எங்களுடன் கூட்டு சேர்ந்த அனைவருக்கும், நான் நன்றி கூறுகிறேன். நாம் ஒன்றாக அசாதாரணமான ஒன்றை உருவாக்குவோம் என ட்விட்டர் பயனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ட்விட்டர் ஊழியர்கள் நிலை என்ன?
எலான் மஸ்க் ட்விட்டரை கையக்கப்படுத்தினால் ட்விட்டர் ஊழியர்களில் 75% பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் ட்விட்டரில் பணியாற்றி வரும் 7,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ட்விட்டரை வெள்ளிக்கிழமைக்குள் வாங்குவதாக அறிவித்த எலான் மஸ்க், தனது ட்விட்டர் அக்கவுண்டில் chief twit என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தான் நேற்று (வியாழக்கிழமை) அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 'நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்' என்று பதிவிட்டது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது.
ஆனால், நேற்று ட்விட்டர் அலுவலகத்திற்குச் சென்ற எலான் மஸ்க் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதில்லை என உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.