'இதை செய்யாவிட்டால் வெளியேறுங்கள்' - ட்விட்டர் ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!
“முன்பை விட அதிக தீவிரமாக நீண்ட நேரம் வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்” என ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.
“முன்பை விட அதிக தீவிரமாக நீண்ட நேரம் வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்...” என ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.
ட்விட்டர் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய பிரபல நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், 44 பில்லியன்களைக் கொட்டிக்கொடுத்து ட்விட்டரை விலைக்கு வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கினால் புதிது புதிதாக நிறைய அப்டேட்கள் கிடைக்கும் எனக் காத்திருந்த பயனர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அடுத்தடுத்து பல விஷயங்களை செய்து வருகிறார்.
குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை எலான் மஸ்க் வேலையை விட்டு நீக்கி வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"நீங்கள் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தால்... அல்லது அலுவலகத்தில் இருந்தால்... தயவுசெய்து வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்..." என ஒற்றை பெயிலை அனுப்பி ட்விட்டர் நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்கள், அதாவது 4,400 ஒப்பந்த பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.
அத்துடன் உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூட உள்ளதாகவும், அங்கு வர பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை விட, பணியில் இருப்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதிக வேலை நேரம், வேலைப்பளு, விடுமுறை கிடையாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் விதித்து வருவதாகக் கூறப்பட்டது.
அதனை நிரூபிக்கும் வகையில் ட்விட்டர் ஊழியர்கள் பாய், தலையணையுடன் அலுவலகத்திலேயே படுத்துறங்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
எலான் மஸ்க் எச்சரிக்கை:
சமீபத்தில் எலான் மஸ்கிற்கும் ட்விட்டரில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த எரிக் என்பவருக்கும் இடையே ட்விட்டரில் வெடித்த வாக்குவாதம் சோசியல் மீடியாவில் வைரலானது.
பல நாடுகளில் ட்விட்டர் மெதுவாக இருப்பதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இந்தச் செயலியானது ஆயிரத்திற்கும் மேற்பட்ட RPCகளை (ரிமோட் ப்ரொசீசர் கால்கள்) ஹோம் டைம்லைனை (sic) வழங்குவதற்காக உருவாக்குகிறது' என்று மஸ்க் பதிவிட்டிருந்தார்.
இதற்கு அந்நிறுவனத்தின் ஊழியரான எரிக் கோட் என்பவர்,
‘நான் ட்விட்டரில் கிட்டத்தட்ட 6 வருடங்களாக ஆண்ட்ராய்டு டெவலப்மென்ட் ஆய்வு வேலை செய்கிறேன். மஸ்க் சொன்னது தவறு,’ என பதிவிட்டார். இதனால் கடுப்பான எலான் மஸ்க் எரிக்கை பணிநீக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், இதுபோல் ஊழியர்கள் பொதுத்தளத்தில் தன்னை எதிர்த்து பேசுவதை விரும்பாத எலான் மஸ்க், சமீபத்தில் மின்னஞ்சல் மூலமாக ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அதிக தீவிரத்துடன் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டுமா அல்லது பணியை விட்டு வெளியேறுவதற்கான செட்டில்மெண்ட் முடிவை எடுக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ட்விட்டர் ஊழியர்கள் இடையே பதற்றத்தையும், பயனர்கள் இடையே வெறுப்பையும் உருவாக்கியுள்ளது.
ட்விட்டர் ஊழியர்கள் மீது எலான் மஸ்க் நடத்தி வரும் இந்த அடக்குமுறைக்கு எதிராக ட்விட்டரிலேயே விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ட்விட்டர் அலுவலக ஊழியர்கள் கூண்டோடு பணிநீக்கம் - ‘வேறு வழியில்லை’ - கைவிரித்த எலான் மஸ்க்!