இந்திய ட்விட்டர் அலுவலக ஊழியர்கள் கூண்டோடு பணிநீக்கம் - ‘வேறு வழியில்லை’ - கைவிரித்த எலான் மஸ்க்!
ட்விட்டர் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ள எலான் மஸ்க், நிறுவனம் தினசரி மில்லியன் டாலர்கள் அளவிற்கு நஷ்டத்தை சந்திக்கும் என்பதால் பணி நீக்கத்தை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ள எலான் மஸ்க், நிறுவனம் தினசரி மில்லியன் டாலர்கள் அளவிற்கு நஷ்டத்தை சந்திக்கும் என்பதால் 'பணி நீக்கத்தை தவிர வேறு வழியில்லை,' எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து பிரபலமான சோசியல் மீடியா தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய முதல் நாளே ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த பராக் அக்ரவால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை பதவியை விட்டு தூக்கினார்.
அதனையடுத்து, நிறுவனத்தின் விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் மனித வளப் பிரிவுகளில் அமர்ந்திருப்பவர்கள் உட்பட மற்றவர்கள் கடந்த வாரம் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம்:
ட்விட்டர் ஊழியர்கள் அச்சத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த அதிர்ச்சிகரமான தகவலையும் எலான் மஸ்க் கடந்த வியாழன் கிழமை வெளியிட்டார். அதன்படி, ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில்,
"நீங்கள் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தால்... அல்லது அலுவலகத்தில் இருந்தால்... தயவுசெய்து வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்..." எனக் குறிப்பிடப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூட உள்ளதாகவும், அங்கு வர பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா உட்பட உலகெங்கிலும் ட்விட்டரில் பெரும் பணிநீக்கங்கள் மற்றும் அடுத்தடுத்த பின்னடைவுகளுக்கு மத்தியில், மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் தனதுநடவடிக்கையை நியாப்படுத்தியுள்ளார். ட்விட்டர் நிறுவனம் தினசரி மில்லியன் கணக்கான டாலர்களை இழக்க நேரிடும் என்பதால், "வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ட்விட்டர் நிர்வாகம் 66 மில்லியன்கள் மட்டுமே நஷ்டமடைந்த நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் 30ம் தேதி வெளியான இரண்டாவது காலாண்டு அறிக்கையில் 270 மில்லியன் டாலர்கள் நிகர இழப்பை சந்தித்துள்ளது.
ட்விட்டர் ஊழியர்கள் குறித்து ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க்,
“துரதிர்ஷ்டவசமாக, நிறுவனம் ஒரு நாளைக்கு $4M டாலர்கள் வரை இழக்கக்கூடும் என்பதால், ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை..." என பதிவிட்டுள்ளார்.
மேலும், வெளியேற்றப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும், இது சட்டப்பூர்வமான அளவை விட 50 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊழியர்களின் நிலை என்ன?
இந்நிலையில், நேற்று முதல் ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்திய ஊழியர்களில் பெரும்பாலானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் மட்டுமே வேலையில் நீடிப்பதாகவும் மின்னஞ்சல்களைப் பெற்றுள்ளனர்.
இந்திய பணியாளர்களில் 180 முதல் 230 ஊழியர்கள் வரை உடனே பணியை விட்டுச் செல்லும் படி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்துள்ளார் எலான் மஸ்க். பொறியியல், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு குழுக்களில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஊழியர்களுக்கு 60 நாட்களான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 7,500 பணியாளர்களில் 3,738 பேரை பணிநீக்கம் செய்வதாக கூறப்படுகிறது.
தகவல் உதவி: பிடிஐ
ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ : அதலாம் குறைக்க முடியாது’ - எலான் மஸ்க் கறார் பதில்!