எலன் மஸ்க்-ன் கனவு நினைவாகியது: 4 விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு புறப்பட்ட SpaceX டிராகன்!
நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்கிற பெருமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்’ விண்கலம் 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பயணித்த 4 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
எலான் மஸ்க் 2002-ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன் முதலில் உருவாக்கி விண்ணுக்கு அனுப்பிய விண்கலம்தான் 'டிராகன்’. இந்த விண்கலம் புளோரிடா மாகாணத்தின் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இதன் மூலம் நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்கிற பெருமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
’டிராகன்’ விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் நாசாவின் விண்வெளி வீரர்கள் 3 பேர், ஒரு ஜப்பான் விண்வெளி வீரர் என நான்கு பேர் பயணம் மேற்கொண்டனர்.
இந்த விண்கலம் சுமார் 27 மணி நேர பயணத்திற்குப் பின் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பயணித்த விண்வெளி வீரர்கள் நான்கு பேரும் 6 மாதங்கள் அங்கு தங்கி ஆய்வுகள் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நான்கு வீரர்களும் விண்கலத்துக்குள் இருப்பது போன்ற வீடியோவை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மேலும் 2 விண்கலங்களை விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தகவல் உதவி: தி இந்து