எலான் மஸ்க் பகிர்ந்த ஒற்றை டிவீட்: சர்வதேச அளவில் பிரபலமான தமிழ் படத்தின் மீம்!
எக்ஸ் தளம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மீம்ஸ் ஒன்றின் மூலம், தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி சர்வதேச அளவில் பிரபலமாகி இருக்கிறது.
ரேடியோக்களில் செய்திகள் கேட்ட காலம் போய், தொலைக்காட்சியின் ஆதிக்கம் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதுவும் 24 மணி நேர செய்திகள் மூலம் உலக நடப்புகள் உடனுக்குடன் நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்தன. இப்போது தொலைக்காட்சியையும் தூக்கி சாப்பிட்டு, இணைய உலகில் புதிய புரட்சியைச் செய்து வருகின்றன சமூகவலைதளப் பக்கங்கள்.
சமூகவலைதளங்களில் பேசப்படும் கருத்துகள்தான் இன்று இணைய உலகின் டாக் ஆப் தி டவுன். அதிலும், ஏதேனும் ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ டிரெண்டிங் ஆகி விட்டால் போதும், அது பற்றிய பேச்சுதான் இணையத்தைத்தாண்டி, மற்ற ஊடகங்களிலும் எதிரொலிக்கும்.
தற்போதும் அப்படித்தான், 2017ம் ஆண்டு தமிழில் வெளியான தப்பாட்டம் படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்து, எக்ஸ் தளம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் மீம்ஸ் ஒன்றைப் பகிர, அது சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது.
எலான் மஸ்க் பகிர்ந்த மீம்
உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தங்களது மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால், இதற்கு எலான் மஸ்க் தனது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆப்பிள் சாதன பயனர்களின் தரவு சார்ந்த விவரங்களை, ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்கிறது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
கூடவே, இந்த விவகாரத்தைக் கலாய்க்கும் வகையில், தற்போது மீம்ஸ் ஒன்றையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தமிழ்ப்படமான தப்பாட்டாத்தின் இமேஜ் மீம்ஸ் டெம்ப்ளேட்டாக பகிரப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் அந்த மீம்ஸும், கூடவே தப்பாட்டம் படமும் கவனம் பெற்றுள்ளது.
இதுவரை இந்த போஸ்டை 93.4 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். 62.6 ஆயிரம் பேர் ரீபோஸ்ட் செய்துள்ளனர். இந்த மீம்ஸ் லைக்குகளையும் குவித்து வருகிறது.
பிரபலமான மீம்ஸ் டெம்ப்ளேட்
2017ம் ஆண்டு தமிழில் வெளியான 'தப்பாட்டம்' எனும் இப்படத்தை முஜிபூர் ரஹ்மான் இயக்க, துரை சுதாகர் நாயகனாகவும், டோனா ரொசாலியோ நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில், ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, மற்றொரு ஸ்டிராவால் அந்த நாயகியின் வாயிலிருந்து நாயகன் இளநீரைக் குடிப்பார். இந்தக் காட்சி ஏற்கனவே மீம்ஸ் உலகில் பிரபலமான டெம்ப்ளேட்டாக உள்ளது.
இந்த டெம்ப்ளேட்டை வைத்து பலரும் பலவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வர, தற்போது ஐபோன், ஆப்பிள், டேட்டா ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் புதிதாக ஒரு மீம்ஸ் உருவாக்கியுள்ளார். இதனை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர, வழக்கம்போல் இந்த மீம்ஸும் சமூக வலைதளப் பக்கங்களில் பேசுபொருளாகி விட்டது.
நன்றி தெரிவித்த தப்பாட்டம் நடிகர்
இது ஒருபுறம் இருக்க, தங்களது தப்பாட்டம் படத்தின் புகைப்படத்தை மீம்ஸாக எலான் மஸ்க் பகிர்ந்திருப்பதற்கு, அப்படத்தில் நாயகனாக நடித்த நடிகர் துரை சுதாகர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர்,
“நான் ‘களவாணி 2’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இன்று எலன் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் நான் நடித்த ‘தப்பாட்டம்’ திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது உலக நாடுகள் முழுவதும் பரவி, அங்கிருக்கும் தமிழ் மக்கள் இந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்துள்ளார்கள்.
இதை தமிழ் திரைப்படத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் ‘தப்பாட்டம்’. அதன் புகைப்படம் உலக அளவில் பரவியிருக்கிறது. அதற்காக எலன் மஸ்க்குக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை அவர் கவனத்து கொண்டு செல்ல உதவியாக இருந்த சமூக வலைதளங்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி.
இந்தப் படம் பறையிசை பற்றியும், கணவன், மனைவியிடத்தில் சந்தேகம் வந்தால் வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதை பற்றியும் பேசுகிறது. இந்தப் படத்தில் நடித்த பிறகு எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.
இளநீரின் அம்பாசிட்டராக ஆக போகிறீர்களா? எனப் பலரும் கேட்டார்கள். இதை ஆபாசமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது கணவன், மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை விளக்கும் புகைப்படம்தான், எனத் தெரிவித்துள்ளார்.
‘அசோக் இல்லைன்னா டெஸ்லா இல்லை…' - எலான் மஸ்க் புகழ்ந்த தமிழக பொறியாளர் யார்?