‘அசோக் இல்லைன்னா டெஸ்லா இல்லை…' - எலான் மஸ்க் புகழ்ந்த தமிழக பொறியாளர் யார்?
சென்னை அண்ணா பல்கலையில் பயின்ற அசோக் எல்லுசாமியின்டெஸ்லாவின் வளர்ச்சியில் அசோக்கின் பங்கு அளப்பரியது என்று எலான் மஸ்க் புகழ்ந்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் என்ஜினியரான அசோக் எல்லுசாமி, எலான் மஸ்கின் டெஸ்லா ஆட்டோபைலட் குழுவிற்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார்.
உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ, நியூரோலிங்க், தி போரிங் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரின் நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் உள்ளனர். உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக எலானின் டெஸ்லா விளங்குகிறது.
உலக அளவில் பலரின் கவனத்தை ஈர்த்த டெஸ்லா காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் கார் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா சார்பில் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட ஆட்டோபைலட் மென்பொருள் வெற்றியடைந்த நிலையில், இந்த வெற்றிக்கு முக்கியk காரணமான தமிழகத்தைச் சேர்ந்த ரோபோடிக் என்ஜினியர் அசோக் எல்லுசாமியை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.
டெஸ்லாவின் வளர்ச்சியில் அசோக்கின் பங்கு அளப்பரியது என்று அங்கீகரித்துள்ள மஸ்க், இது குறித்து தனது X தளத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
“நன்றி அசோக்! டெஸ்லாவின் AI ஆட்டோபைலட் குழுவில் முதலில் சேர்ந்தவர் அசோக் பின்னர் ஏஐ ஆட்டோபைலட் மென்பொருளை உருவாக்கும் குழுவை வழிநடத்தும் தலைவராக உயர்ந்தார். அவரும் எங்களின் அற்புதமான குழுவினரும் இல்லாவிட்டால் டெஸ்லா இல்லை. இவர்கள் இல்லாவிட்டால் மற்ற கார் கம்பெனிகளைப் போல தானியங்கி காருக்கான தொழில்நுட்பத்துக்காக தேடி அலைந்து கொண்டு இருந்திருப்போம். ஆனால், அத்தகைய நவீன தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம் இப்போதைக்கு இல்லை,” என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
அசோக் எல்லுசாமியும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்கை புகழ்ந்துள்ளார். டெஸ்லாவின் ஏஐ வெற்றியில் மிகவும் தீவிரமாக இருந்தவர் மஸ்க் என்று அசோக் கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தில் கார் உருவாக்க வேண்டும் என்று மஸ்க் இலக்கு கொண்டிருக்காவிட்டால், டெஸ்லா கூட மற்ற நிறுவனங்களைப் போலவே கார் உற்பத்தி செய்திருக்கும்.
"எதிர்காலத்தில், தானியங்கி கார்கள் மற்றும் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தும் ரோபோக்கள் சர்வ சாதாரணமாக பயன்பாட்டில் இருக்கும். உலக செயல்பாடுகளும் அவற்றைச் சார்ந்தே இருக்கப் போகின்றன. அது வரையில் எலான் மஸ்க் போன்ற ஒருவரின் உந்துதல் தேவை, ஏனெனில் அவர் அந்த வளர்ச்சியை ஏற்கனவே அனுமானித்து வைத்திருக்கிறார்,” என்று எலானை அசோக் பாராட்டியுள்ளார்.
தொழில்நுட்பம் குறித்த ஆழ்ந்த புரிதல் மற்றும் தொய்வில்லாத கடினஉழைப்பே டெஸ்லாவை ஏஐ உலகில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இது நடைமுறைக்கு ஒத்துவராதது என்று மற்றவர்கள் சிந்திக்கும் போது எலானின் தொழில்நுட்பம் உள்ளுணர்வு ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திகளைச் செய்வதற்கான முக்கிய முடிவை எடுக்க வைக்கிறது என்று அசோக் குறிப்பிட்டுள்ளார்.
அசோக் எல்லுசாமி யார்?
டெஸ்லா ஆட்டோபைலட் குழுவிற்கு ஆட்கள் தேவை என்று மஸ்க் போட்ட ட்வீட்டை பார்த்து அணுகிய அசோக் எல்லுசாமி அந்தக் குழுவில் முதல் நபராக சேர்க்கப்பட்டார். 2014 முதல் 10 ஆண்டுகளாக டெஸ்லாவில் அசோக் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் பிறந்த அசோக், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் (2005-2009) மின்னணு, தகவல்தொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக் சிஸ்டம்ஸ் படிப்பில் 2012-2013ல் முதுநிலை பட்டம் பெற்றார்.
WABCO Vehicle Control Systems மற்றும் வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தில் அசோக் பணியாற்றி இருக்கிறார். 2022-ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனம் ஓட்டுநர் இல்லாத காரை தயாரிக்க சிறப்பு ஆட்டோ பைலட் குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டார். அசோக் தலைமையிலான குழுவின் அயராத உழைப்பின் பலனாக வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்காவில் அறிமுகமாக உள்ளது.