மஸ்க் Vs மார்க் - நேரடி சண்டைக்கு அழைத்த மார்க்; வராமல் தள்ளிப்போட்ட மஸ்க் - சூடான விவாதம்!
மார்க் ஸூகர்பெர்க்குடன் சண்டையிடுவதற்கு உடலை தயார் செய்து வருவதாக எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதில் இருந்தே இவர்களுக்குள்ளான சண்டை சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. அப்படி என்ன தான் இவர்களுக்குள் பிரச்சனை? என விரிவாக பார்க்கலாம்...
மார்க் ஸூகர்பெர்க்குடன் சண்டையிடுவதற்கு உடலை தயார் செய்து வருவதாக எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதில் இருந்தே இவர்களுக்குள்ளான சண்டை சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அப்படி என்ன தான் இவர்களுக்குள் பிரச்சனை? என விரிவாகப் பார்க்கலாம்...
ட்விட்டர் Vs த்ரெட்ஸ்:
சர்வதேச சமூக வலைதள ஜாம்பவான்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையே சில காலமாக வெடித்துள்ள வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், சமீபத்தில் அதன் பெயரை X என மாற்றியதோடு, நீல நிற பறவைக்கு பதிலாக எக்ஸ் மார்க் சிம்பலையும் மாற்றினார். ஏற்கனவே எலான் மஸ்கின் பல்வேறு கட்டுபாடுகளால் கடுப்பில் இருந்த ட்விட்டர் பயனர்களுக்கு இந்த மாற்றம் பெரும் அதிருப்தியைக் கொடுத்தது.
இந்தத் தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மெட்டா நிறுவனம், மெட்டா த்ரெட்ஸ் என்ற பெயரில் உரையை பதிவிடக்கூடிய சோசியல் மீடியா ஆப்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கானோர் பின்பற்ற தொடங்கினர். இதனால் ட்விட்டர் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதனால் இருவருக்கும் இடையே போட்டி மேலும் வலுத்தது. தற்போது இருவருக்கும் இடையிலானா வார்த்தை போர் முற்ற ஆரம்பித்துள்ளது.
மேலும், ட்விட்டரை அப்படியே காப்பி அடித்து தான் த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க், த்ரெட்ஸை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனிடையே, தான் மார்க் உடன் நேருக்கு நேர் கூண்டில் சண்டையிடத் தயாராகி வருவதாக கடந்த ஜூன் மாதம் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்த மோதலுக்கு தானும் தயார் என சோசியல் மீடியாவில் அறிவித்தார்.
ட்விட்டரில் நேரலை:
தொழில்நுட்ப ஜாம்பாவன்கள் இடையிலான இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வந்த சமயத்தில், எலான் மஸ்க் மற்றொரு ட்வீட்டை பதிவிட்டார். அதில் தான் மார்க்குடன் சண்டையிடப் போவதை ட்விட்டரில் நேரலை செய்ய உள்ளதாகவும், ஆண்களுக்கு போர் செய்ய பிடிக்கும், போர் மூலம் கிடைக்கும் வருமானம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு செல்லும் என அறிவித்திருந்தார்.
நேரடி சண்டைக்கு இருவரும் சம்மதித்ததையடுத்து அது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியது. இதுதொடர்பாக மார்க் மற்றும் எலான் இருவருமே தங்களது சோசியல் மீடியாவில் அவ்வப்போது அப்டேட்களை செய்து வந்தனர்.
மார்க் தனது த்ரெட்ஸில்,
“எலான் உடனான கூண்டு சண்டையை ஆகஸ்ட் 26ம் தேதி நடத்தலாம் என பரிந்துரைத்திருந்தேன். ஆனால், தற்போது வரை அதனை அவர் உறுதி செய்யவில்லை. என்னால் காத்திருக்க முடியவில்லை. அதுவும் சண்டை மூலம் கிடைக்கும் வருவாய் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சண்டையின் நேரலையை எக்ஸ் செயலியை தவிர பிரபலமான வேறொரு தளத்தில் வைத்துக்கொள்ளலாம்,” என அறிவித்திருந்தார்.
இதன் மூலம் எலான் மஸ்கின் எக்ஸ் தளம் பிரபலமானதாக இல்லை என்பதை மறைமுகமாக கூறி மார்க் கிண்டல் செய்திருந்தார்.
எலான் மஸ்க் Vs மார்க் ஜுக்கர்பெர்க்:
தற்போது எலான் மஸ்க் இந்த விஷயத்தில் தீவிரமாக இல்லாததால் சண்டையை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் பதிவிட்டுள்ள த்ரெட்ஸ் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள மார்க்,
“எலான் மஸ்க் இந்த விவகாரத்தில் தீவிரமாக இல்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன், மேலும் இது முன்னேற வேண்டிய நேரம். நான் போட்டிக்கான தேதியை பரிந்துரைத்தேன். ஆனால், எலான் மஸ்க் அந்த தேதியை உறுதிப்படுத்தவில்லை. அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகக் கூறினார். இப்போது அதற்குப் பதிலாக எனது கொல்லைப்புறத்தில் சண்டையிட அழைக்கிறார். உண்மையான தேதி மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வைப் பற்றி எலோன் எப்போதாவது தீவிரமாகப் பேசினால், என்னை எப்படி அணுகுவது என்பது அவருக்குத் தெரியும். விளையாட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர்களுடன் போட்டியிடுவதில் கவனம் செலுத்தப் போகிறேன்,” என பதிவிட்டுள்ளார்.
அதாவது, எலான் மஸ்க் ட்வீட் செய்வதோடு சரியே தவிர தன்னுடன் நேரடியாக கூண்டு சண்டையில் களமிறங்க துணியவில்லை என்பது போல் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள இந்த பதிவு எலான் மஸ்க்கை கோபமடைய வைத்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க்கை ’சிக்கன்’ என கமெண்ட் செய்துள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
‘நான் மோடி ரசிகன்’ - பிரதமரை சந்தித்த பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!