‘தொழிலதிபர் ஆன துறவி’ - SKOODLE நிறுவனரின் சுவாரஸ்ய வெற்றிப் பயணம்!
துறவியாக ரிஷிகேஷில் வலம் வந்த ஷோபித் சிங் பின்னர் தொழிலதிபராக ‘ஸ்கூடுல்’ நிறுவனம் மூலம் பொம்மை தயாரிப்பில் சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்த வெற்றிக் கதை.
இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்பவர்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், துறவறத்திலிருந்து இல்லறம் வந்து பிறகு தொழிலதிபரானவரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?
அதாவது, சாமியாராக இருந்து விட்டு வெற்றிகரமான தொழிலதிபராவதை கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை... ஆனால், இதைச் செய்து காட்டியிருப்பவர் ஷோபித் சிங். இவர் ஸ்டோன் சஃபையர் இந்தியா (Stone Sapphire India) இயக்குநராகவும், பிரபலமான ஸ்டேஷனரி மற்றும் பொம்மை பிராண்டான ’ஸ்கூடுல்’ (
) நிறுவனரும் ஆவார்.ஆரம்ப வாழ்க்கை:
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்த ஷோபித் சிங் எப்போதும் தத்துவம் மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டம் மற்றும் எம்பிஏ படித்த பிறகு, டெல்லியில் உள்ள ஜெர்மன் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இருப்பினும், அவருக்கு ஆன்மிக உணர்வு அதிகமாக இருந்தது. இதனையடுத்து, தனது 26-ஆம் வயதில் ரிஷிகேஷில் உள்ள ஒரு ஆசிரமத்திற்குச் சென்றார்.
துறவு வாழ்க்கை:
ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ஷோபித் சிங் சமய போதனைகளில் மூழ்கி, வேத மேலாண்மைத் திட்டத்தை முடித்தார். வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் பற்றிய தனது புரிதலை மேலும் செறிவும் ஆழமும் ஆக்கிக் கொண்டார்.
புதிய பாதை:
ஷோபித் சிங் குடும்ப அழுத்தத்தால் ஆசிரமத்தை விட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டு வணிக உலகில் நுழைந்தார். இவரது மனைவி நினா, வதோதராவில் உள்ள வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஷோபித் சிங் தனது மனைவியின் குடும்பத்தார்களுடன் சேர்ந்து, அமெரிக்காவிற்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்.
கதவைத் தட்டிய வாய்ப்பு:
2012-இல் சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தபோது, ஷோபித் சிங்கின் நிறுவனம் ஒரு வாய்ப்பைக் கண்டது. அவர்கள் தங்கள் உற்பத்தித் தளத்தை இந்தோனேசியாவுக்கு மாற்றினர். புதிய இயந்திரங்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களை அமைத்த பிறகு 2014ல் உற்பத்தியைத் தொடங்கினர்.
ஸ்கூடுல் தொடக்கம்:
2016-ஆம் ஆண்டில், சிங் ரூ.1.2 கோடி முதலீட்டில் 50 பேர் கொண்ட ஸ்கூடுல் நிறுவனத்தை நிறுவினார். ஷோபித் சிங்கின் தலைமையின் கீழ் இந்நிறுவனம் வளர்ந்தது. பொம்மைகள் மற்றும் எழுதுபொருட்களை தயாரித்து Play-Doh, My Little Pony மற்றும் Transformers போன்ற நன்கு அறியப்பட்ட பிராண்டுகளுடன் இணைந்து செயல்பட்டது.
சவால்களை வென்று அடக்கல்:
கோவிட்-19 பெருந்தொற்று சிரமங்கள் இருந்தபோதிலும், ஸ்கூடுல் தமது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை. மேலும், ஊதியக் குறைப்பையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, நிறுவனம் அதிக திறமையாளர்களை பணியமர்த்தியது. அத்துடன், தொற்றுநோய்க்கு பிந்தைய சந்தைக்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டது. இந்த உத்தி ஸ்கூடுல் மேலும் வளர உதவியது.
எதிர்கால இலக்குகள்:
தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் எஃப்எம்சிஜி துறையில் நுழைவது உள்ளிட்ட பிரிவுகளில் ஸ்கூடுல் நிறுவனர் ஷோபித் சிங் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளார்.
ஷோபித் சிங்கின் மனைவி நினா விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையை நிர்வகிக்கிறார். அதே நேரத்தில் ஷோபித் சிங் தனது ஓய்வு நேரத்தில் கவிதை மற்றும் தத்துவத்தையும் ருசித்து வருகிறார்.
துறவியாக இருந்து தொழிலதிபரான ஷோபித் சிங்கின் இந்தப் பயணம், மாற்றம் மற்றும் வாய்ப்பின் சக்திவாய்ந்த கதை.
ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் வணிகத்தை அணுகி நீண்ட காலத்துக்கு தங்கள் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அவரது அனுபவம் ஒரு பாடமாக அமைகிறது.
1 ரூபாய் மிட்டாய் டு ரூ.1,300 கோடி சாம்ராஜ்ஜியம் - இது ‘கோபால் ஸ்நாக்ஸ்’ வெற்றிக் கதை!
Edited by Induja Raghunathan