‘12 வயதில் வீடுவீடாக ஸ்னாக்ஸ் விற்றேன்’ - உற்பத்தித் தொழிலில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டும் தமிழ் இனியன்!
உற்பத்தித் துறை தொடர்பாக என்ன தேவையாக இருந்தாலும் தயாரித்துக் கொடுக்கும் ஸ்டார்ட்-அப் Frigate தொடங்கி, அண்மையில் ரூ.1.3 கோடி நிதி திரட்டியுள்ளனர்.
நிதி திரட்டுதல் என்றாலே அது டெக்னாலஜி நிறுவனங்களுக்குத்தான் பெரும்பாலும் கிடைக்கும் அதுவும் நல்ல ஒரு முதலீட்டுத் தொகை என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால், உற்பத்தித் துறையை ஒருங்கிணைக்கும் சென்னை நிறுவனமான ஃபிரிகேட், சமீபத்தில் $1,75,000 (ரூ.1.3 கோடிக்கு மேல்) நிதியை திரட்டியது.
பல முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்திருக்கின்றனர். ஜெட்வொர்க் நிறுவனர் ஸ்ரீநாத், முதலீட்டாளர்கள் வேல் கன்னியப்பன், எம்2பி நிறுவனர்கள், இப்போ பே நிறுவனர்கள் என பலர் இந்நிறுவனத்தில் முதலீட்டை செய்திருக்கின்றனர்.
-இன் நிறுவனர் தமிழ் இனியன் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவர் வாழ்க்கை முதல் தொழில் வரை பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவரின் சுவாரசியமான அதேசமயம் ஊக்கம் மிகுந்த கதையை பார்ப்போம்.ஆரம்பகாலம்
அப்பா கோவையில் பல தொழில்களை செய்திருக்கிறார். ஆனால், அனைத்து தொழில்களும் சிறப்பாக இருந்தாலும் சரியாக நிர்வாகம் இல்லாததால் பெரிய வெற்றியடைய முடியவில்லை. மேட்டுப்பாளையம், ஈரோடு அருகே இருக்கும் முத்தூர் என பல ஊர்களில் படித்திருக்கிறேன். அப்பா செய்யாத தொழிலே இல்லை.
சைக்கிள் கடை வைத்திருந்தார். பள்ளி முடித்ததும் சைக்கிள் கடையில் வேலை செய்திருக்கிறேன். அப்பாவின் இறைச்சி கடையில் வேலை செய்திருக்கிறேன். அதுவும் சரியில்லை என்பதால் திண்பண்டங்களை தயாரிக்கத் தொடங்கினார்.
“அப்போது எனக்கு 12 வயது இருக்கும். பள்ளியில் இருந்து வந்தவுடன், அப்பாவுக்கு உதவியாக நானும் அந்த ஸ்னாக்ஸ்களை வீடு வீடாக எடுத்துச் சென்று கதவைத் தட்டி விற்பனை செய்வேன். இப்போது என் பிசினசுக்காக கதவுகளை தட்டுவது சுலபமாக உள்ளது. தோல்வியை கண்டு அஞ்சியதில்லை,” என்கிறார்.
பல தொழில்கள் செய்தாலும் எதிலும் பெரிய வெற்றி அடைய முடியவில்லை. வளரமுடியவில்லை. அம்மா பள்ளி ஆசிரியராக இருந்ததால் பள்ளிக்கட்டணம் பெரிதாக இல்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல். அப்பா தன்னுடைய இறுதி நாட்களில் டிரைவராக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார்.
12-ம் வகுப்பு முடித்தவுடன் Mechatronics Engineering படித்தேன். கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கேம்பஸில் இருக்கும்போதே வேலை கிடைத்தது. ஓர் ஆண்டுக்கு பிறகு அங்கு இருக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து கோவைக்கு வந்துவிட்டேன்.
அங்கு ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை. அங்கு இருக்கும் போதுதான் நண்பன் படத்தில் உள்ள குழந்தைகள் செய்யும் பல புராஜட்கள் தேவை எனக் கேட்டார்கள். அதில் சிலவற்றை இரண்டே நாட்களில் செய்தேன். குறிப்பாக ஸ்கூட்டரில் மாவு அறைக்கும் இயந்திரம் நான் வடிவமைத்ததுதான்.
அந்த நிறுவனத்திலிருந்து சிஆர்ஐ பம்ப் நிறுவனத்துக்கு வேலை மாறினேன். அப்போது கோவை ரேசிங் பிரபலமாக இருந்தது. பல ரேசிங் குழுகள் இருந்தன. நண்பர்கள் இணைந்து ஃபிரிகேட் ரேசிங் டீம்’ என்று நாங்கள் வைத்திருந்தோம்.
“என்னால் ரேஸுக்கு ஏற்றது போல பைக்கை மறு சீரமைப்பு செய்ய முடியும். அதனால் வாகனம் மறு சீரமைப்பு தொடர்பான பல விசாரணைகள் வந்தன. அதனால் நண்பருடைய வொர்க்ஷாப்பில் இதுபோல பல மெக்கானிக்கல் வேலைகளை நான் செய்திருக்கிறேன்.
’ஃபிரிகேட்’ ’Frigate' என்பது வேகமாக பறக்கும் பறவை என்பதால் அந்த பெயர் வைத்தோம். அதேபெயரில் ஃபேஸ்புக் பக்கம் வைத்திருந்தோம். 2012ம் ஆண்டே 5000 ஃபாலோயர்ஸ் இருந்தார்கள். இந்த நிலையில், 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவிக்கு திருச்சியில் வேலை என்பதால், கோவையில் இருந்து திருச்சிக்கு வந்தோம்.
திருச்சிக்கு வந்த பிறகுதான், ’ஃபிரிகேட்’ என்னும் பெயரில் சில புராஜக்ட்கள் செய்தாலும் ஸ்டார்ட் அப் குறித்து தெரிந்துகொண்டேன். சிஐஐ அமைப்பு மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தியது. அதில், தமிழகத்தின் பல முக்கியமான நபர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அப்போது ஸ்டார்ட் அப் குறித்தும் நிதி திரட்டல் குறித்து தெரிந்துகொண்டேன். அப்படியே ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கற்றேன்.
அப்பா டிரைவராக இருந்தார். அவர் ஓலா நிறுவனத்துக்காக ஓட்டினார். ஓலா என்பது கார்களை வாடிக்கைக்கு விடும் நிறுவனம் கிடையாது. அது டெக்னாலஜி நிறுவனம் என்பது புரிந்தது. அதனால் 2018-19 ஆண்டுகளில் இது தொடர்பாக நிறைய நபர்களை சந்தித்தேன்.
நேட்டீவ் லீட் அமைப்பு ஒரு பூட்கேம்ப் நடத்தியது. மூன்று நாட்கள் நடந்தது. என்னிடம் பெரிய ஐடியா இல்லை. ஆனாலும் கலந்துகொண்டேன். ஒரு தெளிவு பிறந்தது. 2020 பிப்ரவரியில் வேலையை விட்டேன். மார்ச் மாதத்தில் கோவிட் லாக்டவுன் தொடங்கியது.
இருந்தாலும் சமூக வலைதளத்தை தொடர்ந்து கவனமாக பயன்படுத்தினேன். இதனால் எனக்கு பல ஊர்களில் இருந்து உற்பத்தி தொடர்பாக ஆர்டர் வந்தது. அப்போதுதான் கேமரா கார் தயாரித்தோம். இது பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடங்கி திட்டத்தை உருவாக்கினேன், என்றார் தமிழ் இனியன்.
உற்பத்தித் துறை தொடர்பாக என்ன தேவையாக இருந்தாலும் தயாரிக்கக் கொடுக்கலாம் என்னும் திட்டத்தை உருவாக்கினேன். இந்தியா முழுக்க பயணம் செய்து சிறு, குறு நிறுவனங்களை எங்களுடன் இணைத்தோம். எங்களது நெட்வொர்க்கில் சுமார் 150 எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் மூன்றாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட நகரங்களில் உள்ள நிறுவனங்கள்.
அதைத் தொடர்ந்து 2021ல் Frigate எனும் பெயரில் நிறுவனத்தை தொடங்கினேன்.
இந்த நிறுவனங்களில் ஒரு ஆர்டர் முடிந்துவிட்டால் அடுத்த ஆர்டருக்கு அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்காக அவர்கள் மெனக்கெட வேண்டும். ஆனால், எங்களுடன் இணைந்ததால், நாங்கள் அவர்களுக்குத் தேவையான ஆர்டர்களைக் கொடுப்போம்.
எங்கள் வசம் ஆர்டர் இருப்பதால் அவர்களிடம் எந்தவித வேலையையும் வாங்கிக்கொள்ள முடியும். தவிர இந்தியா முழுவதும் எங்களுக்கு நெட்வொர்க் இருக்கிறது, என தமிழ் கூறினார்.
ஏற்கெனவே ஒவ்வொரு பெரிய நிறுவனத்துக்கும் ஒரு ’வென்டார்’ இருப்பார். அவர் ஏன் ஃபிரிகேட் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் கேள்விக்கு விளக்கமாக பதில் அளித்தார் தமிழ்.
உற்பத்தித் துறையில் உள்ள முக்கியமான சிக்கலே ஒரு புராஜக்ட் எப்போது முடியும் என்பது குறித்து தெரியாது. அதேபோல, எவ்வளவு செலவாகும் என்பதும் தெரியாது. ஆனால்,
“எங்களிடம் வந்தால் ஒரு பொருளை எவ்வளவு செலவில் எவ்வளவு நேரத்தில் தயாரித்து கொடுக்க முடியும் என்பதை சொல்ல முடியும். கிட்டத்தட்ட ஒரு பர்சேஸ் மேனேஜர் செய்யும் வேலையை எங்களால் செய்ய முடியும். தவிர புதிதாக ஒரு இன்னொவேஷன் / டிசைன் செய்ய வேண்டும், ஒரு புதிய பொருளை தயாரிக்க வேண்டும் என்றால் எங்களிடம் வரும்போது அவற்றை எளிதாக்குவோம்,” என தமிழ் கூறினார்.
நிதி நிலைமை
உற்பத்தித் துறையில் இருக்கும் எஸ்.எம்.இ நிறுவனங்களை இணைக்கிறீர்கள், தேவைப்படும் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வருவார்கள். இதற்கு எதற்கு நிதி என்று கேட்டதற்கு,
”டெக்னாலஜியை தரமாக்க வேண்டும். தற்போது 23 ஊழியர்கள் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதற்காக நிதி திரட்டினோம். விரைவில் மற்றொருமொரு நிதி திரட்டும் திட்டமும் இருக்கிறது என்றவர் வருமானம் குறித்து சொல்லத் தொடங்கினார்.”
கடந்த நிதி ஆண்டில் 50 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டினோம். நடப்பு நிதி ஆண்டில் 4 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட திட்டமிட்டிருக்கிறோம். தற்போது ரூ.2 கோடி அளவுகான ஆர்டர்கள் எங்கள் வசம் உள்ளன. அதனால் நான்கு கோடி ரூபாய் வருமானம் என்பது சாத்தியம் என கருதுகிறேன். அடுத்த நிதி ஆண்டில் ரூ.18 கோடி அளவுக்கு வருமானம் ஈட்ட் வேண்டும். பல திட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் இனியன் விடை கொடுத்தார்.
சிறு உற்பத்தி நிறுவனங்களுகான முக்கியப் பிரச்சினையே போதுமான அளவுக்கு ஆர்டர் கிடைக்காததுதான். ஆர்டர் கிடைக்காததால்தான் பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அந்த சிக்கலைத் தீர்ப்பதில் ஃபிரிகேட் முக்கியப் பங்கு வகிக்கிறது.