லாக்டவுனில் தொழில் முனைவர் ஆன ஆசிரியை: சிறுதொழில் தொடங்கி ஒரே வருடத்தில் ரூ.4 லட்சம் டர்ன்ஓவர்!
கொரோனா ஊரடங்கில் பலர் வேலைவாய்ப்பை இழந்த போதிலும், சூழ்நிலைகள் எப்போதுமே தடையாக இருக்க முடியாது என மாற்றி யோசித்து புதிய தொழில் தொடங்கி வெற்றி பெற்ற எத்தனையோ பேர் பற்றி யுவர்ஸ்டோரி தமிழிலேயே பல வெற்றிக்கதைகளை வெளியிட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் சென்னையைச் சேர்ந்த பவானி.
கொரோனா ஊரடங்கில் பலர் வேலைவாய்ப்பை இழந்த போதிலும், சூழ்நிலைகள் எப்போதுமே தடையாக இருக்க முடியாது என மாற்றி யோசித்து புதிய தொழில் தொடங்கி வெற்றி பெற்ற எத்தனையோ பேரின் வெற்றிக் கதைகள் பற்றி யுவர்ஸ்டோரி தமிழில் வெளியிட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் சென்னையைச் சேர்ந்த பவானி சாய் வெங்கட்.
ஆசிரியையாக இருந்த பவானி, கொரோனா ஊரடங்கின் போது தொழில்முனைவராக மாறி, மிகக் குறுகிய கட்டத்தில் நல்லதொரு தொழில் வளர்ச்சியைக் கண்டுள்ளார். கடந்தாண்டு ஏப்ரலில் ஆரம்பித்த இவரது வியாபாரம், ஒரே ஆண்டில் இருமடங்கு டர்ன் ஓவரை எட்டியுள்ளது. வேறு வேலையாட்கள் யாரும் இல்லாம, தனி ஒருவராக தனது தொழிலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி வருகிறார் பவானி.
இதோ பவானியின் கதை...!
“தூத்துக்குடிதான் எனது சொந்த ஊர். திருமணத்திற்குப் பிறகுதான் சென்னை வந்தோம். சில ஆண்டுகள் நர்சரி ஸ்கூலில் வேலை பார்த்து வந்தேன். ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது, சில சொந்தக் காரணங்களுக்காக வேலையை விட வேண்டியதாயிற்று.
வேலைக்கு சென்று விட்டு வீட்டில் சும்மா இருக்க மனது வரவில்லை. அதனால் ஏதாவது பிசினஸ் செய்யலாம் என முடிவு செய்தேன். ஏற்கனவே லாக்டவுன் காரணமாக பலர் தொழிலில் நஷ்டத்தைச் சந்தித்து வரும் வேளையில், புதிதாக ஒரு தொழில் தொடங்குவது எந்தளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்கும் என்பது பற்றி குடும்பத்தினரிடம் ஆலோசித்தேன். அவர்கள் தந்த நம்பிக்கையின் பேரில்தான் தொழிலை தொடங்க முடிவு செய்தேன்.
”ஆடை, அணிகலன், உணவுப் பொருட்கள் என எல்லோரும் செய்யும் தொழிலையே மீண்டும் செய்ய எனக்கு விருப்பமில்லை. எனவே, பூஜை பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பிக்க முடிவு செய்தேன்,” என தொழில்முனைவர் ஆன கதையை விவரிக்கிறார் பவானி.
முதலில் நேரடி கடையாக ஆரம்பிக்காமல், வாட்ஸ்-அப் மூலம் பூஜை பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளார் பவானி. அதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே, தான் குடியிருக்கும் பகுதியிலேயே ’கல்பதரு’ (kalpataru) என்ற பெயரில் கடை ஒன்றை தனியாக ஆரம்பிக்க அவர் முடிவெடுத்தார். கடை திறப்பு விழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்த போது, சரியாக கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி, மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மனம் தளரவில்லை பவானி.
“கடை ஆரம்பிப்பது என முடிவு செய்து விட்டோம். ஆனால் அதனை உடனடியாக திறக்க முடியவில்லையே என வருத்தமாக இருந்தது. ஆனாலும் ஆரம்பித்த தொழிலை அப்படியே விட்டுவிட மனது வரவில்லை. நாங்கள் குடியிருக்கும் பகுதியில் நேரடியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, எங்களது கடை பற்றி எடுத்துக் கூறினோம். பூஜைப் பொருள் தேவைப் படுவோருக்கு நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுத்தோம். இதனால் நஷ்டமில்லாமல், தொழில் அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பித்தது,” என்கிறார்.
கடை ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே, தனது பொருட்களை ஆன்லைனிலும் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார் பவானி. ஆன்லைனில் கடை ஆரம்பிப்பதன் மூலம் தனது வாடிக்கையாளர் வட்டத்தை அவர் மேலும் விரிவு படுத்த நினைத்தார்.
“ஆனால் ஆன்லைனில் கடை ஆரம்பிக்கும்போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எப்படியாக இருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டால்தான், தனது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என நினைத்துள்ளார். அப்போதுதான் ஜோஹோ ஆப்களைப் (zoho app) பற்றி அவருக்கு தெரிய வந்துள்ளது.”
“தொழில்நுட்பங்களைப் பற்றி அதிகம் அறிமுகமில்லாத ஆள் நான். எனக்கு ஜோஹோ ஆப்கள் பயன்படுத்த எளிதாக இருந்தது. அதன் மூலம் வியாபார நுணுக்களைக் கற்றுக் கொண்டேன். ’கல்பதரு டிரேடிங்’ (kalpatarutrading.com) என்ற எனது இணையதளத்தை மேலும் மக்களிடம் கொண்டு செல்ல, மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும், என நினைத்தேன்.”
அதற்காக நவராத்திரி சமயத்தில் ’ஜோஹோ மீட்டிங்’ மூலம் குழந்தைகளுக்கு ஆன்லைனிலேயே போட்டிகள் நடத்தினேன். இதுதவிர தனியாக ஒரு யூடியூப் சேனலும் ஆரம்பித்து, அதில் இவற்றை ஒளிபரப்பவும் செய்தேன். இது எனது ஆன்லைன் ஸ்டோரை அதிக மக்களிடம் கொண்டு செல்ல உதவியது.
முதலில் இருந்ததற்கும், ஜோஹோவைப் பயன்படுத்தியதற்குப் பிறகும் எனது இணையதளத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் வியாபாரமும் மெல்ல மெல்ல அதிகமானது, என்கிறார் பவானி.
கடந்தாண்டு ஏப்ரலில் இரண்டு லட்சம் முதலீட்டில் இந்த தொழிலை சிறிய அளவில் ஆரம்பித்த பவானிக்கு, இப்போது இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் தொழில் ஆரம்பித்து ஓராண்டிற்குள் ஆண்டிற்கு 4 லட்சம் வரை டர்ன் ஓவர் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார் பவானி.
தற்போது தனது வியாபாரத்தை மேலும் விரிவு படுத்தும் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். பூஜை பொருட்கள், சிலைகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான பென்சில் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை நேரடியாகவும், ஆன்லைனிலும் விற்பதோடு, சிறிய அளவில் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்டும் பவானி செய்யத் தொடங்கியுள்ளார்.
“எனது குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவர் நான் தான். அதனால் அடிப்படையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாக கற்றுக் கொள்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இப்போது வரை தனி ஒருத்தியாகத்தான் இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறேன்.
”நேரடி கடையாகட்டும், ஆன்லைன் ஸ்டோராகட்டும், இரண்டிற்கும் தேவையான பொருட்களை வாங்குவது, வாடிக்கையாளருக்கு விற்பனை செய்வது என அனைத்தையும் நானே செய்து வருகிறேன். எனக்கு என் கணவரும், குடும்பத்தாரும் மிகவும் ஒத்துழைப்பாக உள்ளனர். இப்போது சிறிய குடும்ப விழாக்களை நடத்தி தரும் வேலைகளையும் தொடங்கியுள்ளேன். இன்னும் வரும் நாட்களில் இதனை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை” என்கிறார் இந்த சிறுதொழிலில் சிறக்கும் பவானி.