மண்பாண்டங்களுக்கு உயிரோட்டம் கொடுத்து லட்சங்களில் வருமானம் ஈட்டும் ஷகிலா ஃபரூக்!
ஏளனப்பேச்சுகள், கேலி செய்த மண்பாண்டக் கலையை அமெரிக்கா, இத்தாலி வரை எடுத்துச் சென்று வெற்றி தொழில் முனைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த விழுப்புரம் ஷகிலா.
மண்பாண்டத் தொழிலில் என்ன புதுமைகளை செய்துவிட முடியும் என்ற சமூகத்தின் ஏளனங்கள், கஷ்டப்பட்டு உருவாக்கிய அழகுக்கலைப் பொருட்களை விற்பனை செய்ய தயக்கம் காட்டிய விற்பனை அங்காடிகள் என தொடர்ந்து கேலிகள் துரத்திய போதும் அவற்றை தகர்த்தெரிந்து இன்று வெற்றிப் பெற்ற பெண் தொழில்முனைவராக வலம் வந்து கொடிருக்கிறார் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஷகிலா ஃபரூக்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஷகிலாவின் ’ஷபானா ஆர்ட் பாட்டரீஸ்’. விழுப்புரத்திலேயே பிறந்து வளர்ந்த ஷகிலாவிற்கு 12ம் வகுப்பு முடித்த உடனேயே திருமணமானது. இல்லற வாழ்வில் நுழைந்தவருக்கு சிறிது காலத்திலேயே பொருளாதார நெருக்கடி துரத்தத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் அவரது கணவரின் பீங்கான் உற்பத்தி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம். இதனால் மண்பாண்டக்கலையில் ஏதேனும் புதிதாக செய்யலாம் என்று திட்டமிட்டு வங்கிக் கடன் வாங்கித் தொழில் தொடங்க எத்தனித்திருக்கிறார்.
வங்கியில் கடன் வாங்குவதற்கு என்னுடைய பள்ளிச் சான்றிதழ்கள் தேவைப்பட்டதால் பள்ளிக்குச் சென்று சான்றிதழ்களைக் கேட்டேன். திருமணம் முடிந்த பின்னர் எதற்காக சான்றிதழ் வாங்க வந்திருக்கிறேன் என்று கேட்டவர்களிடம் மண்பாண்டத் தொழில் தொடங்கப் போகிறேன் என்று கூறினேன்.
“இதைக் கேட்டவர்கள் மண்பானைத் தொழிலா அதில் என்ன வருமானம் வந்து விடும் என்று கேலி செய்தார்கள். ஆனால் அந்த கேலிப் பேச்சுகள் தான் எனக்கு ஊன்றுகோலாக இருந்தது. நிச்சயமாக மண்பாண்டத் தொழிலில் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும்,” என்ற உறுதி எடுத்தேன்.
படிக்கும் காலத்தில் இருந்தே ஓவியம், வரைகலை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. மண்பாண்டப் பொருட்களை அப்படியே வடிவம் கொடுத்து சுட்டெடுப்பதை விட அதில் எனது எண்ணங்களையும், வண்ணங்களையும் சேர்த்து அழகிய கலைப்பொருட்களை உருவாக்கினேன் என்கிறார் ஷகிலா.
முதன்முதலில் நான் உற்பத்தி செய்த மண்பாண்ட அழுகுக்கலை பொருட்களை விற்பனைக்காக வைக்க அங்காடிகளை அணுகிய போது, பொருட்களை வைத்து விட்டு செல்லுங்கள் விற்றால் பணம் தருகிறோம் என்று தான் கூறினார்கள். இதனால் என்னுடைய தொழில்முனைவு கனவு தகர்ந்து விடுமோ என்று அஞ்சினேன்.
எனினும் ஒரு நம்பிக்கை ஒளி உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருந்தது, பொருட்களை விற்பனைக்காக வைத்த கடைகளுக்குச் சில நாட்களுக்குப் பிறகு சென்ற போது அவற்றில் சில விற்பனையாகி இருந்தது. அந்தப் பணத்தை விற்பனையாளர்கள் முதன்முதலில் என்னிடம் தந்த போது தான் என்னாலும் சம்பாதிக்க முடியும் என்ற தைரியம் கிடைத்தது என்கிறார் ஷகிலா.
பெண்கள் என்றாலே பள்ளிப்படிப்பு, அதை முடித்ததும் திருமணம், குழந்தைகள் என வீட்டோடு முடங்கி விடுவது தான் வாழ்க்கை. நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்னால் சம்பாதிக்க முடியுமா என்று பல கேள்விகள் என்னை துளைத்துக் கொண்டே இருந்தது. இந்த குழப்பத்திற்கு தெளிவு தந்தது அரசு நடத்தும் தொழில்முனைவோர் பயிற்சி. 25 நாட்கள் நான் பங்கேற்ற பயிற்சிப் பட்டறை, தொழில் செய்ய கல்வி தடையில்லை, திறமையும், கடின உழைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் புதிதாக தொழில் தொடங்கலாம் என்ற ஊக்கத்தைத் தந்தது என்று கூறுகிறார் இவர்.
மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்த பின்னர் அவற்றை மார்க்கெட்டிங் செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இப்போது இருப்பது போன்ற விழிப்புணர்வு 4 ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது என்பதால் மண்பாண்ட பொருளுக்கு இவ்வளவு விலையா என்று தான் பலரும் என்னைக் கேட்டார்கள். ஆனால் இப்போது என்னுடைய பொருட்களின் அழகைப் பார்த்துவிட்டு எவ்வளவு விலையாக இருந்தாலும் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
மண்பாண்டம் செய்யும் சக்கரத்தில் மண்ணை வைத்து அழகிய பொருட்களை உருவாக்குவதில் இருந்து அவற்றிற்கு வண்ணங்கள் சேர்த்து உயிரோட்டமுள்ள பொருளாக மாற்றவது வரையிலான அனைத்து வித்தையையும் கற்று வைத்திருக்கிறார் ஷகிலா.
குடும்ப நண்பர் ஒருவர் மூலம் மலேசியாவிற்கு மண்பாண்ட அழகுக்கலைப் பொருட்களை அனுப்பும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. மலேசியா முருகன் கோவிலுக்கு அருகே கடை வைத்திருக்கும் அவருக்கு முதலில் அனுப்பிய ஒரு கண்டெய்னர் பொருட்கள் அனைத்துமே விற்றுத் தீர்ந்தது. இதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மாதத்திற்கு 2 கன்டெய்னர்கள் கலைபொருட்களை அனுப்பி வருகிறார் ஷகிலா.
மலேசியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்களை பார்த்து அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் விற்பனைக்கான ஆர்டர்களைப் பெற்று தற்போது பிஸியாக இருக்கிறார்.
12ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார், ஆங்கிலம் அவ்வளவு சரளமாக பேசத் தெரியாது. ஏற்றுமதி தொழில்வாய்ப்புகளைப் பெறுவதில் இது தடையாக இருப்பதால் ஸ்போகன் இங்கிலீஷ் கற்றுக் கொண்டிருக்கிறார் ஷகிலா. மேலும் கார் ஓட்ட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக கார் ஓட்டக் கற்றுக் கொண்டு தன்னுடைய 2 மகள்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார் இவர்.
ஷகிலா, தான் மட்டுமே பொருளாதார வளர்ச்சி பெற்ற பெண்மணியாக இல்லாமல் சமுதாயத்தில் பின்தங்கிய படிப்பறிவில்லாத பல பெண்களுக்கு சுயபொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறார்.
“என்னிடம் வேலை செய்யும் இளம் பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அதிக படிப்பறிவு இல்லாதவர்கள் தான். ஆனால் அவர்களின் கலைத் திறனை படித்த அனுபவசாளிகளாலும் கூட செய்ய முடியாது. நான் எப்போதுமே தொழிலாளர்களுடன் தொழிலாளராக இருக்கவே விரும்புவேன். அவர்களின் வலி நமக்குப் புரிய வேண்டும். அதே போன்று ஒரு தொழிலைத் தொடங்கும் போது அதில் அ முதல் ஃ வரை எல்லாவற்றையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் வராத போதும் கூட பணியில் எந்தத் தொய்வும் இன்றி நடக்கும்,” என்கிறார்.
குயவர்கள் மட்டுமின்றி அந்த சமூகத்தை சேராத இளைஞர்களும் குயவுத் தொழிலைக் கற்றக் கொண்டு தன்னிடம் வேலை செய்து வருவதாகக் கூறுகிறார் மண்ணை, கலையாக்கி பொன்னாக்கும் தொழில் முனைவர்.