சிஏ கனவை கைவிட்டு நகை பிராண்ட் தொடங்கிய பெண்: 2 வருடத்தில் ரூ.2 கோடிக்கு விற்பனை!
அதிதி கார்க் 2018-ம் ஆண்டு தொடங்கிய Adwitiya Collection இரண்டாண்டுகளில் 2 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.
அதிதி கார்க் சிஏ படிக்க விரும்பினார். ஆனால், இவரது பயணம் திசை மாறியது. தொழில் முனைவு முயற்சியைத் தொடங்கினார். Adwitiya Collection என்கிற நகை வணிகத்தை 2018-ம் ஆண்டு தொடங்கினார். 2020-2021 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு 2.78 கோடி ரூபாய்.
நொய்டாவைச் சேர்ந்த இந்நிறுவனம் இந்தப் பண்டிகைக் காலத்தில் 400 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
சிஏ கனவு
“நான் சிஏ தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி செய்தேன். ஆனால் கடினமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டாக கடந்துகொண்டே இருந்தது. தேர்ச்சி பெறமுடியவில்லை. சிஏ முடிக்காமல் வேலையும் கிடைக்காது. குடும்பத்தினரை அதிகம் சார்ந்திருப்பது போல் இருந்தது. இந்த நிலையில்தான் சொந்தமாக வருமானம் ஈட்ட செயற்கை நகைகள் வணிகத்தில் பகுதி நேரமாக ஈடுபட நினைத்தேன்,” என்கிறார் அதிதி.
2013ம் ஆண்டு நகைகளை மறுவிற்பனை செய்யத் தொடங்கினார். சிறியளவில் தொடங்கப்பட்ட இந்த வணிக முயற்சி பெரியளவில் கனவு காண்பதற்கான நம்பிக்கையைக் கொடுத்தது.
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் மூலம் ஆன்லைனில் நகைகளை விற்பனை செய்யத் தொடங்கினார். வணிகத்தில் நல்ல லாபம் கிடைத்தது. இருப்பினும் சிஏ தேர்விற்குத் தயாராகி வந்தததால், முழுமையான கவனத்தை வணிகத்தில் செலுத்த முடியாமல் போனது.
நான்காண்டுகள் கடந்தன. அதிதி மொத்த விற்பனையாளர்களிடமிருந்து 17,000 ரூபாய்க்கு நகைகளை வாங்கி இருப்பு வைத்திருந்தார். இந்த நகைகள் அப்படியே தேங்கிக் கிடந்தன.
ஒருபுறம் சிஏ தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. மற்றொரு புறம் வணிகத்திற்காக வாங்கி வைத்த நகைகள் விற்பனையாகவில்லை.
இரண்டிலும் ஒருசேர கவனம் செலுத்த முடியாமல் தவித்த அதிதி 2018-ம் ஆண்டு சிஏ முயற்சியைக் கைவிட்டு வணிகத்தில் முழு கவனம் செலுத்தத் தீர்மானித்தார். Adwitiya Collection என்கிற பெயரில் நகைகளைப் பட்டியலிட்டார்.
இந்த சமயத்தில் Myntra புதிய பிராண்டுகளைக் களமிறக்குவதில் மும்முரம் காட்டியது. அதிதி இந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். Adwitiya தயாரிப்புகளை சந்தைப்படுத்தினார்.
“Myntra தளத்தில் தயாரிப்புகளை பட்டியலிட்டேன். முதல் நாளிலேயே 25 ஆர்டர்கள் கிடைத்தன. அதுவரை அத்தனை ஆர்டர்கள் வந்ததில்லை. அந்த சமயத்தில் அது மிகப்பெரிய விஷயமாக இருந்தது,” என்று மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று Adwitiya நகைகளின் ஒட்டுமொத்த விற்பனையில் 90 சதவீதம் Myntra தளத்தில் இருந்தே பெறப்படுகின்றன. நாள் ஒன்றிற்கு 350-400 ஆர்டர்கள் கிடைக்கின்றன.
2021-22 நிதியாண்டில் 5 கோடி ரூபாய் அளவில் விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிதி தெரிவிக்கிறார்.
இந்த பண்டிகைக் காலத்தில் மட்டுமே Adwitiya Collection 9,000 ஆர்டர்களைப் பெற்று 75 லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.
அதிதி வணிகத்தை தனியாகவே நிர்வகித்து வருகிறார். பேக்கேஜ் செய்வதற்கு மட்டும் ஆட்களை நியமித்திருக்கிறார். இந்தியா முழுவதும், குறிப்பாக முதல் நிலை நகரங்களில் இருந்து அதிக ஆர்டர்கள் கிடைப்பதாக அதிதி குறிப்பிடுகிறார்.
நகை வகைகளில் வளையல்கள் அதிகம் விற்பனை ஆகின்றன. Adwitiya Collection நகைகள் 399 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
போட்டி மற்றும் சவால்கள்
ஆரம்பத்தில் அதிதி பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். நகைகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள முடியாமல் போனது. நிதி பற்றாக்குறை இருந்துள்ளது. குறிப்பிட்ட டிசைன் தேவைகளை மொத்த விற்பனையாளர்கள் பூர்த்தி செய்யாதது சிக்கலாக இருந்துள்ளது.
“ஒரு குறிப்பிட்ட டிசைனில் குறைந்தபட்ச அளவில் வாங்குவேன். ஆனால் பல வாடிக்கையாளர்கள் அதே டிசைனைக் கேட்கும்போது இருப்பு இல்லாமல் போவதுண்டு. இதுபோன்ற சூழல்களில் மொத்த விற்பனையாளர்களால் இந்தத் தேவைகளப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது. வணிகத்தை வளர்ச்சியடையச் செய்யும்போது நேரடியாக தயாரிப்பாளர்களிடமிருந்தே வாங்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்கிறார்.
இவைதவிர செயற்கை நகைகளை விற்பனை செய்யும் அதிதியின் முயற்சிக்கு குடும்பத்தினர் ஆதரவளிக்கவில்லை. இதனால் தனிப்பட்ட வகையிலும் சவால்களை சந்தித்தார். ஆனால் அவரது விடாமுயற்சி பலனளித்தது.
கம்மல், நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்ற நகைகளை விற்பனை செய்யும் Adwitiya Collection Ajio, Mirraw போன்ற ஆன்லைன் சந்தைப்பகுதிகளிலும் கிடைக்கின்றன.
வருங்காலத் திட்டங்கள்
தொடந்து அழகழகான நகைத்தொகுப்புகளை வழங்கவேண்டும் என்பதே அதிதியின் நோக்கம்.
ஆன்லைன் சானலில் மேலும் விரிவடைய திட்டமிட்டிருக்கும் நிலையில் டி2சி சானலில் செயல்படத் தொடங்கும் திட்டமும் இருப்பதாகத் தெரிவிக்கிறார். சிஏ முடிக்கவில்லை என்றாலும் அந்தக் கற்றல் நிச்சயம் வீணாகாது என்கிறார் அதிதி.
“நான் சிஏ முடிக்கவில்லை. இருப்பினும் வணிக நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள அந்தப் பயிற்சி எனக்கு உதவியது,” என்கிறார் அதிதி.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா