உயர்ரக கைவினை நகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் 24 வயது கொச்சி பெண்!
கொச்சியை சேர்ந்த Stardom Accessories கைவினை நகைகளை கைவினைஞர்களிடம் வாங்கி நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இந்திய ஃபேஷன் ஜுவல்லரி என்றதும் தங்க நகைகள் மட்டுமே நினைவில் வந்த காலம் மாறிவிட்டது. தற்போது ஜுவல்லரி துறை மிகப்பெரிய மாற்றத்தைக் கடந்து வந்துள்ளது. சந்தையில் வைரம் மற்றும் தங்க நகைகளைக் காட்டிலும் செயற்கை நகைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இமிடேஷன் ஜுவல்லரிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்தியாவில் இமிடேஷன் ஜுவல்லரி பிரிவு 2022-ம் ஆண்டில் 656.2 மில்லியன் ரூபாயை எட்டும் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இளம் பெண்களை இமிடேஷன் ஜுவல்லரி வெகுவாகக் கவர்ந்துள்ளதால் இதற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் பல தொழில்முனைவோர் இமிடேஷன் ஜுவல்லரி தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தொடங்கியுள்ளனர்.
அத்தகையவர்களில் ஒருவர் கொச்சியைச் சேர்ந்த நீடா விஜய் குமார். இவரைப் பொருத்தவரை இந்தியாவில் கைவினை நகைகள் குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனவே இவர் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லியில் உள்ள கைவினைஞர்களிடமிருந்து நேரடியாக கைவினை நகைகளை வாங்கி விற்பனை செய்யும் Stardom Accessories என்கிற ஸ்டார்ட் அப்பைத் தொடங்கினார்.
“ஒவ்வொரு நகைக்கும் பின்னால் அதிக உழைப்பு உள்ளது. இதன் மதிப்பை நகைகள் வாங்கும் பலர் புரிந்துகொள்வதில்லை. மக்கள் இதை உணரவேண்டும். ஒவ்வொருவரும் நகைகளை வாங்குவதற்கு முன்பு அதன் மதிப்பையும் உருவான விதம் குறித்த பின்னணியையும் தெரிந்து கொள்ளவேண்டும். தனித்துவமான டிசைன் மூலம் என் பிராண்ட் இந்தியாவின் நகை கலாச்சாரத்தை எடுத்துரைக்கிறது,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் 24 வயது தொழில்முனைவர் நீடா.
ஸ்டார்ட் அப்
நீடாவிற்கு ஃபேஷனில் ஆர்வம் அதிகம். இவரது தொழில்முனைவு பயணம் கல்லூரி நாட்களிலேயே தொடங்கியது. கல்லூரி நண்பர்களுக்கு நகைகள் தயாரித்து விற்பனை செய்தார்.
“எனக்கு நகை தயாரிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. சுயமாகவே கற்றுக்கொண்டு விற்பனை செய்யத் தொடங்கினேன். வணிகம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. ஒருகட்டத்தில் ஜெய்ப்பூர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள கைவினைஞர்களை பணியமர்த்தினேன்,” என்கிறார் நீடா.
கல்லூரி படிப்பு முடித்த பிறகு ஒரு ஸ்டார்ட் அப்பில் கண்டெண்ட் மார்க்கெட்டராக பணியாற்றினார். இருப்பினும் சொந்தமாக வணிக முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதும் தனக்கான சுய அடையாளத்தை உருவாக்கவேண்டும் என்பதுமே இவரது விருப்பமாக இருந்து வந்தது.
இந்தியாவின் ஃபேஷன் மற்றும் ஆக்சசரி சந்தை குறித்து ஆய்வு செய்தார். இந்தப் பிரிவில் தனித்துவமான வகைகளை விற்பனை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தார்.
வணிக மாதிரி குறித்து பல கட்டங்களாக ஆய்வு செய்து இறுதியாக ஒன்றைத் தீர்மானித்தார். விநியோகஸ்தர்களையும் கைவினைஞர்களையும் பணியமர்த்தினார். 2018-ம் ஆண்டு Stardom Accessories தொடங்கினார்.
“என்னுடைய பிராண்ட் மூலம் இந்தியாவின் நகை கலாச்சாரத்தை வெளிப்படுத்தி அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன்,” என்கிறார் நீடா.
இவரது நகைகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு குறித்து இவரது வாடிக்கையாளர்கள் ஆர்வமாக கேட்டறிவதாக நீடா குறிப்பிடுகிறார்.
மிகப்பெரிய சந்தை
இந்தியாவின் கற்கள் மற்றும் நகைகள் பிரிவு உலகின் மிகப்பெரிய துறையாக செயல்படுகிறது. உலகளவிலான நகை கொள்முதலில் இந்தியா 29 சதவீதம் பங்களிக்கிறது. 2019-2023 ஆண்டுகளில் இதன் சந்தை அளவு 103.06 பில்லியன் டாலராக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக IBEF தெரிவிக்கிறது.
சந்தையில் தனது ஸ்டார்ட் அப் தனித்துவமாக செயல்படுவதாகவும் அதற்கான பிரத்யேக இடம் சந்தையில் இருப்பதாகவும் நீடா தெரிவிக்கிறார்.
கைவினைஞர்களால் முழுமையாக கைகளால் வடிவமைக்கபட்ட நகைகளே இவரது தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் தனது ஸ்டார்ட் அப் குறிப்பிட்ட பிரிவு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது என்கிறார்.
“என்னுடைய பிராண்ட் நகைகள் அனைவருக்கும் பிடிக்காது. இந்தியாவின் நகை கலாச்சாரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களுக்குத்தான் என் நகைகள் பிடிக்கும். கைவினைஞர்களின் உழைப்பையும் திறனையும் மதிப்பவர்கள் என் நகைகளில் ஆர்வம் காட்டுவார்கள்,” என்றார்.
இந்த பிராண்ட் குறைந்த விலையில் பிரீமியம் தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த பிராண்டின்கீழ் விற்பனை செய்யப்படும் நகைகளின் ஆரம்ப விலை 300 ரூபாய். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவே பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகிறது.
கம்மல், செயின் ஆகிய இரண்டும் இந்தத் தளத்தில் மிகவும் பிரபலமானவை. இவைதவிர அனைத்து வகை மோதிரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. Stardom இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஆர்டர் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 15-25 ஜுவல்லரி பீஸ் விற்பனை செய்கிறது.
உள்ளூர் கைவினை பிராண்டுகள் மற்றும் Ayesha, Voylla போன்ற பிரபல பிராண்டுகளுடன் Stardom போட்டியிடுகிறது.
செயல்முறை
கைவினைஞர்கள் நகைகளை வடிவமைத்து தயாரிக்கின்றனர். இவற்றிலிருந்து Stardom நகைகளைத் தேர்வு செய்து தொகுத்து தனது பிராண்டின்கீழ் விற்பனை செய்கிறது.
சந்தையில் பொதுவாகக் காணப்படும், வழக்கமான டிசைன்களை நீடா தேர்வு செய்வதில்லை. வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ற தயாரிப்புகளையும் இந்தத் தளத்தில் பெறலாம்.
ஆர்டர் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் டெலிவர் செய்யப்படுகிறது.
Stardom மூவர் அடங்கிய குழுவாக செயல்பட்டு வருகிறது. லாபத்தில் 30 சதவீதம் பெற்றுக்கொள்ளும் வகையில் வணிக மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை கைவினைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கிடைக்கிறது.
“கைவினைஞர்களுக்கு நான் கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஆர்டர் அடிப்படையிலேயே நான் அவர்களிடம் வாங்குகிறேன். நான் தனியாக ஸ்டாக் வைத்துக்கொள்வதில்லை என்பதால் எனக்கு எப்போதும் நஷ்டம் ஏற்படாது,” என்கிறார் நீடா.
மேலும் ஒவ்வொரு மாதமும் 30-40 சதவீத லாபத்தை தனது ஸ்டார்ட் அப் பெறுவதாக இவர் தெரிவிக்கிறார்.
இதுவரை சுயநிதியில் இயங்கி வரும் இந்நிறுவம் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஏராளமானவர்களை சென்றடையவேண்டும் என்பதும் பல்வேறு தயாரிப்புகளையும் கைவினைஞர்களையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதுமே Stardom Accessories விருப்பமாக உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா