Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தாக்க வந்தால் கரண்ட் ஷாக் கொடுக்கும் ’இ-ஸ்வார்டு’- பெண்களுக்கு தற்காப்புக் கருவி உருவாக்கிய ஈரோடு பொறியாளர்!

பெண்கள் ஆபத்து காலங்களில் தங்களை தாக்க வரும் வன்முறையாளரிடம் இருந்து தப்பிக்க அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கருவியை ஈரோட்டைச் சேர்ந்த பொறியாளர் மோகன்ராஜ் உருவாக்கியுள்ளார்.

தாக்க வந்தால் கரண்ட் ஷாக் கொடுக்கும் ’இ-ஸ்வார்டு’- பெண்களுக்கு தற்காப்புக் கருவி உருவாக்கிய ஈரோடு பொறியாளர்!

Friday January 18, 2019 , 4 min Read

பொறியியல் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது இறுதியாண்டில் செய்யும் ப்ராஜெக்ட் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தங்களது ப்ராஜெக்டுகளை திட்டமிடுகிறார்களா என்றால் அப்படியான சிந்தனையாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மதிப்பெண்ணிற்காக மட்டுமே ப்ராஜெக்ட் செய்யும் பொறியியல் பட்டதாரிகள் மத்தியில் ஈரோட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் மட்டும் வித்தியாசப்பட்டு காண்பதற்கு அவரது பயனுள்ள ப்ராஜெக்டே காரணம்.

ஈரோட்டிலேயே பிறந்து வளர்ந்த மோகன்ராஜ், தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ, ஈ.சி.ஈ படித்துள்ளார். 2015ம் ஆண்டில் தனது கல்லூரி இறுதியாண்டு ப்ராஜெக்டாக தற்காப்புக்காகப் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கருவியான எலக்ட்ரானிக் ஸ்வார்டை (e-sword) ஒன்றை உருவாக்கியுள்ளார். நான் என்னுடைய வகுப்புத் தோழிகள் மூன்று பேறும் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கினோம்.

“படித்து முடித்த பின்னர் வேலைக்குச் செல்வதை விட சொந்தமாக ஸ்டார்ட் அப் தொடங்கவே விரும்பினேன். அதிலும் ஆட்டோமேஷன் மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்புக் கருவிகளை செய்து கொடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார் மோகன்ராஜ்.

மோகன்ராஜ் இ-ஸ்வார்டு கருவி உடன்

பெண்கள் பாதுகாப்பை மையக்கருவாக வைத்து உருவாக்கியஇ-ஸ்வார்டு கருவியையே மேலும் பாதுகாப்பானதாக வடிவமைத்து 100 சதவீதம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தற்காப்புக் கருவியாக சந்தைப்படுத்த திட்டமிட்டு அதையே ஆதாரமாகக் காட்டி மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறேன் என்கிறார் மோகன்ராஜ்.

2016ம் ஆண்டிலேயே இந்தியாவின் சிறந்த கல்வி கண்டுபிடிப்பு என்ற விருதைஇ-ஸ்வார்டு பெற்றுள்ளது. படிப்பை முடித்த மோகன்ராஜ் ’ஸ்ரீ ஆதீஸ்வரன் டெக்னாலஜிஸ்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி பாதுகாப்பு தொடர்பான வேறு சில கருவிகளையும் சொந்தத் தயாரிப்புகளாக அவற்றை விற்பனை செய்து வருகிறார். இ-ஸ்வார்டு கருவியில் முழுக்கவனம் செலுத்திய மோகன்ராஜிற்கு அவரது குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்துள்ளனர். பொருளாதார காரணத்திற்காக வேலைக்குச் செல்ல வேண்டாம் உன்னுடைய கண்டுபிடிப்பில் கவனம் செலுத்து என்று அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.இ-ஸ்வார்டு கருவி கண்டுபிடிப்பை கையில் எடுத்த மோகன்ராஜ், தனது கல்லூரி பேராசிரியர் பீட்டர் ஸ்டான்லி பெபிங்டன் உதவியுடன் ஆய்வைத் தொடர்ந்துள்ளார்.

சிசு முதல் வயதான பாட்டி வரை என பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அச்சுறுத்தும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, ஒருதலைக் காதலால் பெண் கொடூரக் கொலை என்ற செய்திகள் வராமல் இருப்பதில்லை. பெண் என்பதாலேயே வன்முறைகளுக்கும், வழிப்பறிகளுக்கும், பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகிறவர்களால் எதிர்த்து அடிக்கும் தைரியம் இருப்பதில்லை, எல்லாப் பெண்களுமே தற்காப்பு கலைகளை கற்றிருப்பதுமில்லை.

”பெண்கள் ஆபத்தான காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக என்னென்ன பாதுகாப்பு கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன என்பதை முதலில் கணக்கெடுப்பு செய்தோம்,” என்கிறார் மோகன்ராஜ்.

சன் கண் என்ற கருவி சந்தையில் கிடைக்கிறது இதை வைத்து லேசான ஷாக் கொடுக்க முடியும். பெப்பர் ஸ்பிரே மழைக்காலங்களில் கைக் கொடுக்காது, மிளகாய்ப்பொடி ஸ்பிரேகளெல்லாம் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர்கள் மீது ஸ்பிரே செய்தாலும் அதனால் எதிராளியை செயலிழக்கவைத்து தப்பமுடியாது என்பதை உணர்ந்தோம். இதனால் முழுக்க முழுக்க தொழில்நுட்ப உதவியுடன் பெண்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கும் ஒரு கருவியை உருவாக்கத் திட்டமிட்டோம். அதனாலேயே இந்த கருவியின் பெயர் கூட(எலக்ட்ரானிக்) இ-ஸ்வார்டு என வைத்ததாகக் கூறுகிறார் மோகன்ராஜ்.

”மற்ற கருவிகளைப் பெண்கள் ஆபத்துக் காலங்களில் எடுத்து பயன்படுத்துவதற்குள் எதிராளி எளிதில் அவர்களை தாக்கிவிடுவர்.இ-ஸ்வார்டை பொறுத்தமட்டில் அதனை பயன்படுத்தும் பெண் தன்னுடைய விரல் ரேகையை வைத்தால் போதும் அந்த கருவி செயல்படத் தொடங்கி எதிராளிக்கு 200 வாட்ஸ் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து அவரை செயலிழக்கவைக்கும். அந்த கோல்டன் நொடியை பயன்படுத்தி பெண்கள் தப்பிக்க முடியும்.”

அதே சமயம் அந்தப் பெண் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற தகவல் அவரின் நெருங்கிய உறவினர் மற்றும் அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விடும் இவை இ-ஸ்வார்டின் பிளஸ் பாயின்ட்கள்.

நல்ல நோக்கத்திற்காக இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டாலும் இதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதற்கும் செக் வைத்து கருவியை வடிவமைத்துள்ளார் மோகன்ராஜ். பொதுவாக தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்திருந்தாலும் உரிமையாளருக்கு தெரியாமல் அதனை யாரேனும் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது, இந்த கேட்ஜெட்டை வாங்கும் போதே பயன்படுத்தும் நபரின் கைரேகையானது அதில் பதிவு செய்யப்படும் எனவே அவரைத் தவிர வேறு யாரும் இதை பயன்படுத்த முடியாது.

மேலும் பயன்படுத்துபவரின் செயல்கள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படும் என்பதால் தப்பு நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார் மோகன்ராஜ்.

இ-ஸ்வார்டு கருவி முழு வடிவம் பெற்று மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அரசின் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுவிட்டது. எனினும் 30 நாட்கள் கழித்தே அதனை எங்களின் பிராண்டிற்கு கீழ் அறிமுகம் செய்ய முடியும் என்பதால் அதற்காக காத்திருக்கிறார் மோகன்ராஜ்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் ஏற்கனவே இ-ஸ்வார்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி அவர்களுடன் இணைந்து செயல்பட அணுகியுள்ளோம், அரசின் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு இ-ஸ்வார்டின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும என்கிறார் மோகன்ராஜ்.

மோகன்ராஜின் இக்கண்டுபிடிப்புக் கருவி உருவாக்கத்திற்கு கருவாக அமைந்தது 2014ம் ஆண்டு உலகையே உலுக்கிப் போட்ட டெல்லி நிர்பயா சம்பவம். மருத்துவ மாணவிக்கு ஓடும் பேருந்தில் நடந்த அந்த கொடூரமான மனிதாபிமானமற்ற சம்பவம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்தியது. அதே ஆண்டு மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்.

2015 தேசிய குற்றப்பதிவுகள் ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி நிமிடத்திற்கு 10 முதல் 14 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக கூறுகின்றன. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தபடியே இருப்பதால் பெண்களின் தற்காப்பிற்காக ஒரு கருவி தேவை என்று எண்ணியே இந்த திட்டத்தை கையில் எடுத்ததாக கூறுகிறார் மோகன்ராஜ்.

பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள் அனைவருக்குமே இ-ஸ்வார்டு ஒரு பாதுகாவலன் என்று சுருக்கமாக சொல்கிறார் இவர்.

இ-ஸ்வார்டு உருவாக்கப்பட்டதன் நோக்கமே குற்றச்செயல்கள் குறைய வேண்டும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே என்றும் அந்த நோக்கம் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சாத்தியமாகியுள்ளதாக கூறுகிறார் மோகன்ராஜ். அதிக அளவில் இக்கருவியை உற்பத்தி செய்யும் பட்சத்தில் சந்தையில் ரூ. 2,500 விலைக்கு இதனை விற்பனை செய்யலாம் என திட்டமிட்டுள்ளார் இவர்.

அரசு மானியம் கொடுத்தாலோ அல்லது அரசே முழுவதையும் கொள்முதல் செய்து பாதுகாப்பு தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தும் பட்சத்தில் விலையை மேலும் குறைத்து உற்பத்தி செய்து கொடுக்க முடியும் என்கிறார்.

பெண்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தும் கருவி மட்டுமல்ல கனரக ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில் ராணுவ வீரர்கள் இந்த கருவியை பயன்படுத்தும் போது எதிராளிக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து செயலிழக்க செய்ய முடியும் என்பதோடு ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தை எளிதில் கண்டறிய முடியும் என்றும் கூறுகிறார் மோகன்ராஜ். அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தக் கருவியை மேலும் பாதுகாப்பு அதிகரிக்கும் கருவியாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளார் இவர்.