(YS Exclusive)- ரத்தன் டாடாவின் இல்லம் மற்றும் இதயத்திற்குள் ஒரு பார்வை!
மிகவும் தனிப்பட்ட முறையிலான, மனம் திறந்த நேர்காணலில், ரத்தன் டாடா, தன்னைப் பற்றி, சம வாய்ப்பு கொண்ட இந்தியாவுக்கான தனது கனவு பற்றி, இளம் தலைமுறையினருக்கான அறிவுரை பற்றி எல்லாம், யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷர்த்தா சர்மாவுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நவம்பர் மாதத்தின் குளிர்கால காலை ஒன்றில், மும்பைக்கான அதிகாலை விமானத்தை பிடிக்கப் புறப்பட்டேன். குளிர் என் மனநிலையை பாதிக்கவில்லை. மாறாக, காலை நேரம் காற்றின் துடிதுடிப்பு என்னுடைய நடைக்கு உற்சாகத்தை அளித்தது.
காலையில் என் முன் காத்திருந்த வாய்ப்பிற்கான, நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த டாடா சன்ஸ் கவுரவத் தலைவர் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் ரத்தன் டாடாவை நேர்காணல் காண்பதற்கான வாய்ப்பிற்கான உற்சாகத்தை இது அதிகமாக்கியது.
சில ஆண்டுகளுக்கு முன் ரத்தன் டாடாவை நான் பேட்டி கண்டிருக்கிறேன். சரியாக சொல்வது என்றால் நான்கு ஆண்டுகளுக்கு முன். அப்போது, அவர் எத்தனை அறிவார்ந்த ஆனால், பணிவும், கனிவும் மிக்க அருமையான மனிதர் என்பதை அறிவதற்கான அரிய வாய்ப்பை டாடா அளித்திருந்தார்.
இன்றைய சந்திப்புடன், திரு.டாடாவை ஒரு முறை அல்ல இரு முறை பேட்டி காணும் வாய்ப்பு கொண்ட அதிர்ஷ்டசாலிகளில் சிலராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
ஏனோ, இந்த சந்திப்பு மிகவும் விஷேசமானதாக, மேலும் தனிப்பட்டதாக, தனித்தன்மை வாய்ந்ததாகத் தோன்றியது. இந்த முறை நேர்காணல், டாடா குழுமத்தின் வழிகாட்டியான 81 வயது முன்னோடி- தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகியிருந்த, இந்தியாவின் செல்வாக்கு மிக்க வர்த்தகத் தலைவர்களில் ஒருவரான ரத்தன் டாடா இல்லத்தில் நடைபெற்றது.
அதனால் தான், தனது இல்லத்தில், தனது சொந்த இடத்தில் என்னை அனுமதித்ததற்காக மிகவும் நன்றி உணர்வு கொண்டிருந்தேன். அரபிக்கடலை எதிர்நோக்கியபடி இருந்த ரத்தன் டாடாவின் கவர்ந்திழுக்கும் வெண்மை வீட்டிற்குள் நுழைந்ததும், அதன் எளிமை மற்றும் மகத்தான அமைதியை கண்டு வியந்தேன்.
அந்த இல்லத்தின் சுவர்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்ததும், வெள்ளை சுவர்கள் இன்ஸ்டாகிராம் தங்கம் என வர்ணிக்கப்படுகிறது என்பதையும், இன்றைய இளம் தலைமுறையினர் மற்றும் சமூக ஊடக செல்வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ரசனை என்பதையும் ரத்தன் டாடா அறிவாரோ என நினைத்துப்பார்த்தேன்.
டாடா இல்லத்தின் வெள்ளை நிற சுவர்கள், அந்த சூழலுக்கு ஒரு பழைய கால அழகை ஏற்படுத்தியிருந்தது. கடல் அலைகள் மோதும் ஒலி, இதற்கு இன்னும் அழகு சேர்த்தது.
குறைந்த பட்ச அலங்காரம் மற்றும் பளபளப்பான பர்னீச்சர் கொண்ட வரவேற்பறையில் இருந்து வெளியே பார்த்தேன். அரபிக்கடலில் நீல நிற தண்ணீர் இந்தத் தருணத்தின் மகத்தான தன்மைக்கு வலு சேர்த்தது.
வெளியே நீச்சல் குளம் ஒன்றை பார்த்தேன். நன்றாக பராமரிக்கப்பட்டு, நன்றாக பயன்படுத்தப்பட்டு வரும் நீச்சல் குளம். ரத்தன் டாடா நீந்துவாரா என நான் உரக்க சிந்தித்தேன். அவரது உதவியாளர், இதற்கு பதில் அளித்தார். இந்த நீச்சல் குளம், டாடாவின் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கானது என்றார்.
நாய்கள் மீதான ரத்தன் டாடாவின் பிரியம் நன்கறியப்பட்டது தான். நானே ஒரு செல்லப்பிராணி பிரியர் என்ற முறையில், லேசான பொறாமையோடு, நான் வளர்க்கும் நாய்களுக்கு இத்தகைய வசதி அளிக்கவில்லையே என வருத்தம் கொள்கிறேன்.
இவற்றைத்தவிர, அந்த வீட்டில் ஆடம்பரத்திற்கு எந்த அறிகுறியும் இல்லை. அமைதியான மற்றும் நாகரீகமான ரம்யத்தை அளிக்கும் தாக்கம் செலுத்தக்கூடிய எளிமைத்தன்மையே காணப்படுகிறது.
இன்னமும் சூழலையே உள்வாங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்த பழைய கால இடத்திற்கு மேலும் வசீகரம் அளிக்கும் வகையில் ரத்தன் டாடா உள்ளே நுழைந்தார். காக்கி நிற பேண்ட் மற்றும் வெள்ளைச் சட்டையில் எளிமையாகக் காட்சி அளித்தவர், தனக்கே உரிய அமைதியான, நேர்த்தியான பாணியில் வணக்கம் தெரிவித்தார்.
அவரை சந்தித்தவுடன் உணரும் வகையில் ரத்தன் டாடாவிடம் தவிர்க்க இயலாத பணிவு, பரிவு இருக்கிறது. டாடா வாரிசாக அவரது அடையாளமாகக் கருதப்படும் அம்சங்களாக அவரது நேர்த்தி மற்றும் நேர்மையான தன்மை அமைந்திருக்கிறது.
மனிதத் தன்மை
வரவேற்பறையில் அவருக்கு எதிரே அமர்ந்ததுமே, ஒரு கணத்தையும் வீணாக்காமல் நேராக விஷயத்திற்கு வந்தேன். அவரை வரையறைக்கும் ஒரு குணமாக எதை அவர் கருதுகிறார் என நான் கேட்டேன்.
அவர் யோசித்தபடி, நேர்மையான மற்றும் நெகிழ வைக்கும் பதிலை அளிக்கிறார்.
“அனைத்து மக்களையும் சமமாக நடத்த முயற்சித்து இருக்கிறேன் என்பது தவிர, எதையும் சொல்ல எனக்குக் கடினமாக இருக்கிறது,” என்று தனது உணர்வுகளை பிரதிபலிக்க சரியான வார்த்தைகளை தேடுபவர் போல திட்டமிட்டு மெதுவாக பேசுகிறார்.
“தெருவில் உள்ள ஏழை அல்லது சாலையில் பத்திரிகை விற்கும் சிறுவன் அல்லது லட்சாதிபதி/ கோடீஸ்வரர் என யாராக இருந்தாலும், அவர்களுடன் நான் ஒரே விதமாக பேசுகிறேன். அவர்களை ஒரே விதமாக நடத்துகிறேன். இதை செய்வதை உணர்ந்து செய்கிறேன். இதை வெளிப்பூச்சுக்காக செய்யவில்லை ஆனால் ஒவ்வொருவரும் மனிதராக நடத்தப்பட வேண்டும் என்று உணர்வதால் செய்கிறேன்,” என்கிறார் அவர்.
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையில், ஒரு அழுத்தமும், நோக்கமும் இருக்கிறது. உண்மையில், அவரது குரலில் அந்த கேள்வியை என்னால் கிட்டத்தட்ட உணர முடிந்தது- பரிவும், கருணையும், அக்கறையும் உள்ள மனதை கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி தான்: அனைத்து மக்களும் சமமாக தானே நடத்தப்பட வேண்டும்? வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சம வாய்ப்பிற்கு தகுதி உடையவர் தானே?
தனது வார்த்தைகளின் ஆழம் உள்வாங்கிக் கொள்ளப்பட அவகாசம் அளித்து அவர் தனக்குத்தானே கொஞ்சம் மவுனமான இருந்துவிட்டு, தொடர்ந்து விளக்குகிறார்.
“ஒரு சிலர் இன்னல் விளைவிப்பதில் அல்லது அதை பார்ப்பதில் சிறந்து விளங்குகின்றனர். நான் மற்றவர்கள் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது உற்சாகம் கொள்கிறேன்,” என்கிறார் அவர்.
“சாலையில் காய்கறி விற்பவர் என்றாலும் கூட, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி அல்லது நகைச்சுவை இருந்தால் அது என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது,” என்கிறார் அவர்.
எங்களுடைய ஒரு மணி நேர உரையாடலில், அவரது இந்த மனிதத் தன்மை மிக்க, பரிவான முகமே பலமுறை தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. அதே போல, சிறுவயது முதல் தன்னை வழிநடத்துவதாக அவர் கருதும் வலுவான விழுமியங்கள் மற்றும் தார்மீக அமைப்பும் வெளிப்படுகிறது.
“என்னையும், என் சகோதரரையும் வளர்த்த என் பாட்டிக்கு நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன். அவரே, தான் சரியானவை என கருதியவற்றை என்னுள் விதைத்தார். என் மீதும் எனது மதிப்புகள் மீதும் இது வலுவான தாக்கம் செலுத்துவதாக கருதுகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
பல பேட்டிகளில் டாடா தனது பாட்டி நவாஜ்பாய் டாட்டா பற்றி பாசத்துடன் பேசி, அவர் தனக்கு ஊக்கமாக இருந்தது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ரத்தன் டாடா மற்றும் அவரது இளைய சகோதரர் ஜிம்மி இருவருமே மும்பையில் டாடா அரண்மனையில் பாட்டியால் வளர்க்கப்பட்டனர்.
சரியானதைச் செய்வது
வலுவான குடும்பத்தலைவியான நவாஜ்பாய் தனது பேரக்குழந்தைகளிடம் வலுவான விழுமியங்களை நிறுவியிருக்கிறார். இந்த விழுமியங்களை தான் டாடா தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்திருக்கிறார் மற்றும் இப்போது இளம் மற்றும் ஆர்வம் உள்ள இன்றைய தலைவர்களிடம் விதைக்க முயன்று வருகிறார்.
எல்லா தடைகளையும் மீறி சரியானதைச் செய்யுங்கள் என்பதே இளம் தலைமுறைக்கான ரத்தன் டாடாவின் முதல் அறிவுரையாக இருக்கிறது.
“சரியானதைச் செய்வது மிகவும் கடினமான வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் அது சிறந்த வாய்ப்பாகும்,” என்கிறார்.
“மற்றொரு முக்கிய விஷயம்: மற்றவர்கள் நலனுக்காக செயல்படுங்கள்: பெரிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்னொரு நிறுவனத்தை அழிப்பது பற்றி எதுவும் நினைப்பதில்லை, ஏனெனில் அவை வர்த்தகத்தில் போட்டியிடுகின்றன.
”அவற்றை டிராயரில் போட்டு மூடி மறைப்பதற்காக, நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களை வாங்கும் பழக்கம் கொண்டுள்ளன. இது என்னை எப்போதுமே கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இன்னொரு நிறுவனம் அல்லது இன்னொருவர் வளத்தை பார்த்து உங்களால் மகிழ்ச்சி அடைய முடியும் என்றால், அதை மகிழ்ச்சிக்கான வரையறை என்பேன்.”
இல்லை என மறுத்து சொல்ல முடியாததே டாடாவின் தோல்விகளில் ஒன்றாக இருப்பது ஏன் என்பதை இது விளக்குகிறது. ஆனால், இந்தத் தோல்வியிலும் கூட ஆழமான ஒரு விளக்கம் இருக்கிறது.
“மற்றவர்கள் முன் என்னால் கதவை அடைப்பதில் எனக்கு பிரச்னை இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். எனவே, ஒருவரை பார்க்க எனக்கு நேரமில்லை எனச் சொல்வது அல்லது, அதனால் ஏற்படக்கூடிய ஏமாற்றத்தை நினைத்துப்பார்ப்பது எனக்கு வருத்தம் தருகிறது,” என்கிறார்.
டாடா சொல்லும் எல்லாவற்றிலும் இந்த விஷயம் மீண்டும் மீண்டும் வருகிறது. வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் பரிவு மற்றும் ஒன்று எனும் உணர்வு மற்றும் மகிழ்ச்சி மற்றும் வெற்றியில் எல்லோருக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும் எனும் வலுவான விருப்பம் ஆகியவற்றை உணர முடிகிறது.
ரத்தன் டாடாவின் கனவு: சம வாய்ப்பு
இப்போது டாடா மோட்டார்ஸ் என அழைக்கப்படும் டெல்கோ நிறுவனத்தின் ஷாப் புளோரில் பணியைத் துவக்கிய ரத்தன் டாடா, ஏழைத்தொழிலாளர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் சவால்களையும் புரிந்து கொண்டார். அந்த வயதிலேயே, இவர்கள் நலனுக்காக என்ன செய்வது என அவரை இது யோசிக்க வைத்தது.
இன்று அவர் கானும் கனவு என்ன என்று டாடாவிடம் கேட்கும் போது, ஆச்சர்யம் அளிக்காத வகையில், ஏழை, பணக்காரர் வேறுபாடு இல்லாமல், நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பது தான் என்கிறார்.
“சம வாய்ப்புள்ள நாடாக இந்தியா இருப்பதை கனவு காண்கிறேன் – ஏழை, பணக்காரர் இடையிலான வேறுபாட்டை நாம் குறைக்கும் ஒரு நாடாக, அதைவிட முக்கியமாக, ஒருவருக்கு ஆர்வமும், உறுதியும் இருக்கும் வரை எவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக கனவு காண்கிறேன்,” என்கிறார்.
நன்கொடை வழங்குவது என்பது, கட்டிடங்கள் கட்டுவது கோயில்களுக்கு பணம் அளிப்பது போன்றவையாக மட்டும் அல்லாமல், ஏழை மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இந்தியாவில் அமைந்திருக்க வேண்டும் என வலியுறுத்திய வர்த்தகத் தலைவர்களில் ஒருவராக ரத்தன் டாடா விளங்குகிறார்.
டாடா குழுமத்தை வழிநடத்திய போது அதன் பாதையை வரையறை செய்தது போல இந்தியாவில் கொடைத்தன்மையை அவர் மறு வரையறை செய்திருக்கிறார்.
டாடா குழுமம், பொது நலனின் காவலனாக செயல்பட்டு வந்திருக்கிறது. அது ஏற்படுத்தப்பட்ட 150 ஆண்டுகளில் நல்லவிதமான சமூக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் இருப்பு முழுவதும் இந்த குழுமம், இந்தியாவின் முக்கியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வந்திருக்கிறது. ஆரம்ப நாட்களில், உள்ளூர் திறனை உருவாக்கி, உலகத்தரமான திறமையை உருவாக்கும் நிறுவன கட்டமைப்பு மூலம் இதை செய்தது.
1991ல் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ரத்தன் டாடா, மைய நிறுவனமான டாடா சன்சில் 66 சதவீத பங்குகளை கொண்டுள்ள டாடா டிரஸ்ட்ஸ் கொடை அமைப்பின் தலைவராக இருந்தார்.
அதன் பிறகு, டாடா குழுமத்தின் செயல் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2012 முதல் டாடா டிரஸ்ட்சில் முழுநேர பணியை ஏற்றிருக்கிறார். இருப்பினும், டாடா சன்ஸ் இயக்குனர்கள் குழு, சைரஸ் மிஸ்ட்ரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பிறகு, 2016ல் அவர் குறுகிய காலத்திற்கு டாடா குழும தலைவராக மீண்டும் பதவி வகித்தார். அந்த நேரத்தில் ரத்தன் டாடா லேசான விமர்சனத்திற்கும் இலக்கானார். ஆனால் இது உண்மையில்லை.
“விலகி இருக்க அனுமதிப்பதை எளிதாக உணர்வது தவறாக முடிந்திருக்கும். ஏனெனில் நான் தான் ஓய்வுகால வரம்பை நிர்ணயித்தேன். எல்லோரும் மறுத்த போது, ஓய்வு கால வயது தலைவருக்கும் பொருந்தும் என்று நான் தான் சொன்னேன்,” என்கிறார் அவர்.
டாடா குழும ஓய்வு கால கொள்கை
ரத்தன் டாடா தான் நிறுவனத்தில் ஓய்வு கால கொள்கையைக் கொண்டு வந்து செயல் இயக்குனர்கள் மற்றும் இதர இயக்குனர்களுக்கான ஓய்வு வயது வரம்பை கொண்டு வந்தார்.
உலகின் முன்னணி எண்ணெய் வள சேவை நிறுவனமான ஸ்கலம்பர்கர் முன்னாள் தலைவர் ஜீன்ரிபோட் தன்னிடம் கூறியது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை டாடா நினைவு கூர்ந்தார். டாடா குழுமத்தில் உள்ள செயல் பணிகளுக்கு ஓய்வு கால வயதை கொண்டு வரும் எண்ணத்திற்கும் இதுவே காரணம் என்றார்.
“பிரான்சில் இருந்த அவரது 1,800 ஏக்கர் பண்ணையில் நானும் அவரும் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஒருமுறை, ’ஜேஆர்டி’ ஓய்வு பெறுவாரா விலகுவாரா என்பது பற்றி பேசினோம், அப்போது அவர் கூறியதை என்னால் மறக்க முடியாது.”
“ஓய்வு கால வயது வரம்பு வேண்டும் என்பது பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் வயதாகும் போது முதலில் நடப்பது உங்கள் நினைவுத்திறன் பாதிக்கப்படும். ஆனால் நீங்கள் நினைவுத்திறன் மட்டும் தான் பிரச்னை என்பீர்கள். பின்னர் உடல் தளர்ந்து சக்கர நாற்காலியில் வருவீர்கள். ஆனால் மனது நன்றாக இருப்பதாக சொல்வீர்கள். நீங்கள் வழி நடத்த உடல் தகுதியுடன் இல்லை என்பதை யார் சொல்வது என அவர் கேட்டார்,” என்கிறார் டாடா.
எனவே, எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கொள்கை இருப்பது நல்லது தான் என்கிறார்.
“ஒருவர் 65 அல்லது 70 அல்லது 75 வயதை மிகவும் இளம் வயது என கருதலாம். எப்படி இருந்தாலும், நீங்கள் ஓய்வு பெற வேண்டும் என்று ஒருவர் சொல்லும் நிலை இருக்கக் கூடாது. இதுவே ஓய்வு கால வயது முடிவுக்கு பின் இருக்கும் காரணம். டாடா குழுமத்தில் ஓய்வு வயது இல்லை. நான் ஓய்வு பெறாமல் தொடர்ந்திருக்கலாம்” என்று விளக்கம் தருகிறார் டாடா.
ஆனால் மீண்டும் பொறுப்புக்கு வருவது என்பது அவரை கவலையில் ஆழ்த்தியது. எனினும் தன் வழிகாட்டுதலின் கீழ் டாடா குழுமத்தை வலுவான வர்த்தகக் குழுமமாக உருவாக்கியவருக்கு, 2014 சிக்கலுக்குப் பிறகு மீண்டும் பொறுப்புக்கு வருவது என்பது ஆழமான பொறுப்புணர்வு மற்றும் மதிப்புகள் சார்ந்ததாக அமைந்தது.
“2016ல் ஏற்பட்ட தலைமைப் பிரச்னை அல்லது தலைமை இல்லாத பிரச்சனையை எதிர்கொண்டேன். நான் மீண்டும் உள்ளே போக விரும்பவில்லை. அது காரணம் இல்லை. நான் உள்ளே சென்றதற்கான காரணம், நான் என்னுடைய சுயத்திற்கு பதில் அளிக்க விரும்பினேன். மோசமான ஒன்று நடந்து கொண்டிருந்த போது விலகி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. ஏனெனில் மனித இயல்பு என்னவெனில் யாரேனும் உங்கள் கண்களைப் பார்த்து, எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்பார்கள். நீங்கள் ஏன் எதையும் செய்யவில்லை என்று கேட்பார்கள். நான் தலையிட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.”
“எனவே விட்டுவிட முடியாமல் தவிக்கவில்லை. நிச்சயம் நான் சுதந்திரமாக இருப்பதை எதிர்நோக்கினேன்,” என்கிறார் அவர்.
உண்மையில் ரத்தன் டாடா, கட்டிடக்கலை வல்லுனராக விரும்பியவர், செல்லப் பிராணிகளை நேசிப்பவர், தொழில்நுட்பம் மீது ஆர்வம் கொண்டவர், ஓவியம் மற்றும் வரைதலில் மீண்டும் ஈடுபட விரும்பினார். பியானோ வாசிப்பதையும் துவக்க விரும்பினார்.
அவர் ஒரு மின்னணு பியானோவும் வாங்கினார். ஒரு முறையான பியோனா வாங்க இருந்ததாகவும் ஆனால் விலையை பார்த்ததும் அதை கைவிட்டுவிட்டதாக அவர் கூறிய போது நான் ஆச்சர்யம் அடைந்தேன். என்னுடைய வியப்பை மறைத்துக்கொள்ள விருப்பம் இல்லாமல், திருவாளர் டாடா, நீங்கள் விலைப்பட்டியல் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லையே என்று கேட்டேன்.
அவர் சிரித்தபடி, கவலையே வேண்டாம், வேறு கவலைகள் இருக்கின்றன என்றார். ஓவியம் மற்றும் பியோனா வாசிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி கேட்கிறேன். “முதல் விஷயத்தில் (ஓவியம்) நான் முழுமையாக ஈடுபடவில்லை. இரண்டாவது விஷயத்தில் (பியானோ) முன்னேறி இருக்கிறேன். ஒரு பியானோ ஆசிரியர் கிடைத்தார். அதன் பிறகு நடந்ததை விரும்புகிறேன். ஆனால் இதற்கு நிறைய பயிற்சியும், கடின முயற்சியும் தேவைப்படுகிறது. இதற்கான உறுதி என்னிடம் இல்லை. இதைத் தான் எண்ணி வருந்துகிறேன். ஏனெனில் இது இன்னொரு விஷயமாகி இருக்கும். கட்டிடக்கலை வடிவமைப்பு போலவே,” என்கிறார்.
டாடா இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதனுடன் இந்த வாசகத்தை இடம்பெறச்செய்திருந்தார்.
"கார்னலில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பிறகான ஆண்டுகளை பார்க்கிறேன். நான் பெற்ற அனுபவங்கள் செழுமை, வாய்ப்புகள் மற்றும் பாடங்களை நினைத்து மகிழ்கிறேன். வாழ்க்கை இவற்றால் நிறைந்திருக்க வேண்டும். ஏனெனில் காலம் உண்மையில் கையில் சிக்காமல் இருக்கலாம்.”.
“நாட்டை விட்டு வெளியே வசித்த இந்த 10 ஆண்டுகளுக்கு ஈடாக எதுவும் அமைந்துவிடாது என நினைக்கிறேன். நான் உங்களுக்குக் கூறியதை திரும்பிப் பார்த்தீர்கள் என்றால், எல்லோருக்கும் சம வாய்ப்பு இருந்த நாட்டில் நீங்கள் யார் அல்லது உங்களிடம் என்ன பணம் இருக்கிறது என்பது முக்கியமாக இல்லாத நாட்டில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இவை எல்லாம் நெருக்கமாக அமைவதாக நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.
வேலைக்கும் மேலாக
அவரது கட்டிடக்கலை கல்வி, அவர் ஏன் செயல்களை விரும்புகிறார் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. அவரது தலைமையின் கீழ், டாடா குழுமம் 50 மடங்கு லாபம் ஈட்டுவதாக வளர்ந்தது. வருவாய் 40 மடங்கு அதிகரித்தது.
டாடாவை பொறுத்தவரை இது வேலைக்கும் மேலானது. அது வாழ்நாள் முழுவதுமாகும். அவர் தனது பாரம்பரியத்தை, கடினமானதாக இருந்தாலும் சரியானதைச் செய்யும் வகையில் அமைந்திருந்ததை விவரிக்கிறார்.
“இது வேலைக்கும் மேலானது. இந்த வேலைக்கு பல குணங்கள் உள்ளதால், இது வாழ்நாள் பணி. ஒன்று வேலை மற்றும் பங்குதாரர்களுக்கான உங்கள் செயல்பாடு என்றால், மற்றொன்று உங்கள் ஊழியர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதாகும். எப்படி நியாயமாக நடந்து கொண்டீர்கள். பல நேரங்களில் நிறுவனத்தின் பரந்துபட்ட நலனுக்காக நீங்கள் பல்வேறு சமரசங்களை செய்து கொள்ள வேண்டும் என்பதால், ஊழியர்களுடன் எந்த அளவு நேர்மையாக நடந்து கொண்டீர்கள் என்பதற்கு நான் பெற விரும்பியதை விட குறைவான மதிப்பெண்களையே பெறுவேன்,” என்கிறார்.
விடைபெறும் போது அவர் சொல்கிறார்:
“இது ஐந்து ஆண்டு அல்லது பத்து ஆண்டு கால ஒப்பந்தம் அல்ல. அதற்கும் மேலானது. இது தொங்கிக் கொண்டிருப்பதல்ல என்பதை மக்கள் உணர்வதில்லை. இது விடாமல் இருப்பது அல்ல. இது அதிகாரத்துக்காக அல்ல. இது இதுபோன்ற எந்த விஷயங்களுக்குமானது இல்லை. இது ஒரு வாழ்நாள் விஷயம்.”
நேர்காணல் முடிந்த பிறகும் அவரது வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
ஆனால் அதைவிட, அவரது பணிவு, மனிதth தன்மை, நேர்மை, நம்பகத்தன்மை ஆகியவை தான், அவர் என்னை வாயில் வரை வந்து வழியனுப்பிய பிறகும் நினைவில் நிற்கிறது.
நான் விடைபெற்று வரும் போது, அவரது உள் கருவரைக்குள், அவர் உலகிற்குள், அவர் இதயத்திற்குள், அரிதான தரிசனத்தை அளித்ததற்கான நன்றி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
எனவே இந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாததாக அமைகிறது.
நேர்காணல் மற்றும் கட்டுரை: ஷரத்தா சர்மா, யுவர்ஸ்டோரி நிறுவனர் | தமிழில்: சைபர்சிம்மன்