’ஸ்டார்ட் அப்’களில் நான் முதலீடு செய்வது தற்செயலானது’- ரத்தன் டாடா
100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க டாடா குழுமத்தின் கவுரவ தலைவரான ரத்தன் டாடா, ஓலா மற்றும் பேடிஎம் நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளர்களில் ஒருவாக இருக்கிறார்.
டாடா குழும முன்னோடியான ரத்தன் டாடா, குழுமத்தின் நிர்வாக செயல்பாடுகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளவர், புதுயுக நிறுவனங்களில் முதலீட்டாளராக மாறியது தற்செயலானது என்கிறார்.
100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க டாடா குழுமத்தின் கவுரவ தலைவரான ரத்தன் டாடா, ஓலா மற்றும் பேடிஎம் நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளர்களில் ஒருவாக இருக்கிறார். 2015ல் இந்த நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் அவர் முதலீடு செய்தார்.
பேடிஎம் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில், சிறிதளவு முதலீடு செய்திருப்பவர், அதன் ஆலோசகராகவும் இருக்கிறார். இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னேப்டீலும் முதலீடு செய்துள்ளார்.
உடல்தகுதி ஸ்டார்ட் அப்பான கியூர்ஃபிட், வானிலை கணிப்பு சேவையான கிலைமாசெல் (ClimaCell) ஆட்டோமொபைல் போர்டலான கார் தேக்கோ, ஆன்லைன் பர்னீச்சர் நிலையமான அர்பன்லேடர், மூக்குக் கண்ணாடி சேவையான லென்ஸ்கார்ட், செல்லப்பிராணி சேவையான டாக்ஸ்பாட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
ரத்தன் டாடா செல்லப்பிராணிகள் பிரியர் என்பதால், டாக்ஸ்பாட் முதலீட்டில் எந்த வியப்பும் இல்லை. இந்த முதலீடுகளை அவர் தனது ஆர்.என்.டி அசோசியேட்ஸ் மூலம் மேற்கொண்டு வருகிறார்.
"ஸ்டார்ட் அப் முதலீட்டாளர் பரப்பில் நுழைந்தது ஒருவிதத்தில் தற்செயலானது. டாடா குழுமத்தில் நான் இருந்த போது, ஸ்டார்ட் அப் துறையை உற்சாகமானதாக நோக்கியிருக்கிறேன் என்றாலும், டாடா குழுமத்துடன் ஏதேனும் ஒரு விதத்தில் முரண் கொண்டிருக்கலாம் என்பதால் விலகியே இருந்திருக்கிறேன்” என்று டாக் டியூஸ்டே நிகழ்ச்சியில் சிராட்டே வென்சர்ஸ் (Chiratae Ventures) தலைவர் சுதீர் சேத்தியிடம் ரத்தன் டாடா தெரிவித்தார்.
ஆனால் நான் குழுமத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் உற்சாகமானவை என கருதும் நிறுவனங்களில் என் கையில் இருந்து சிறிய தொகை முதலீட்டை மேற்கொண்டு வருகிறேன். ஆக, வேறுவிதமான சூழலில் நான் மேற்கொண்டிருக்கக் கூடியதை விட கூடுதல் ரிஸ்கை எடுத்து வருகிறேன். இதில் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இது சிறந்த கற்றல் அனுபவமாக அமைந்திருக்கிறது. ஏனெனில், இந்தத் துறை சிறந்த மனிதர்களோடு, துடிப்பாக உள்ளது என்றுகிறார் அவர்.
நிறுவனர்களின் தொழில்முனைவு ஆர்வம், ஐடியாக்கள், தீர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை மேற்கொள்வதாக கூறுகிறார்.
“என்னைப்பொருத்தவரை, இது உள்ளுணர்வு அடிப்படையில் அமைகிறது. நிறுவனர்களுடன் உரையாடுவதன் மூலம், மற்ற அம்சங்களை எல்லாம் விட, அவர்கள் அணுகுமுறை, பக்குவம் மற்றும் தீவிரம் குறித்து தீர்மானிப்பேன்,” என்கிறார் அவர் புன்னகையுடன்.
”புதிதாக துவக்குவதற்கான விருப்பம், சாதிப்பதற்கான துடிப்பு, ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை சிறப்பாக செய்வதற்கான வழி அல்லது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மற்றும் எல்லாவற்றுக்கும் மேல், நல்லதோ, மோசமானதோ, மொத்த பயணத்தையும் மேற்கொள்ளக்கூடிய உறுதி, துணிவு அகியவை தொழில்முனைவோருக்கு முக்கியம் என்கிறார் அவர்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக நிதியை செலவு செய்வது பற்றி அவர் கவலைப்படவில்லை. வென்ச்சர் கேபிடல் நிதி தான் எதிர்காலம் என்கிறார்.
"மற்ற நாடுகளைப்பாருங்கள். அங்கு ஸ்டார்ட் அப்கள் நீண்ட காலமாக இருக்கின்றன. இந்த துறை வளர்ச்சி அடையும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இது ஏற்கனவே நிருபிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சி தொடரும்,” என்கிறார் அவர் நம்பிக்கையுடன்.
ஸ்டார்ட் அப்கள் உலக அளவிலான செயல்பாடு பெறுவது பற்றி குறிப்பிடும் போது,
“இதற்கு சரியான நேரம் என்று இருப்பதாகத் தெரியவில்லை. உலக அளவில் செல்வது வளர்ச்சிக்கு உதவுமா என்பதை நிறுவனர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,” என்று கூறுகிறார்.
மற்ற வர்த்தகக் குடும்பங்களும், அவரைப்போல முதலீட்டு வழியை பின்பற்ற ஆலோசனை கூறுவீர்களா என கேட்கப்பட்ட போது, “இது இயற்கையாக வரும். இதை திணிக்க முடியாது. துறை பெறும் வளர்ச்சியில் இருந்து இது வரும்,” என்கிறார்.
தனது நிதிக்கு ஏற்ப, இந்தத் துறையில் தனது இருப்பு வளர வேண்டும் என்கிறார் அவர். ஆனால், புதிய பகுதியில் இருப்பது மற்றும் இதுவரை செய்யப்படாததில் பங்கேற்பது ஆகியவை தான் உற்சாகமானது. இதை தான் வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் அவர்.
அவர் முதலீடு செய்யும் துறைகள் பற்றி கேட்கப்பட்ட போது, “தொழில்நுட்ப நோக்கில், நிறைய முன்னேற்றங்கள் நிகழ்கின்றன. இவை எந்த ஒரு துறைக்கும் மட்டும் உரியவை அல்ல. மருத்துவம், மருத்துவச் சிகிச்சை மற்றும் ஆன்லைன் மற்றும் உற்பத்தியில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
"ஸ்டார்ட் அப் பரப்பு வளர்ச்சி அடைந்து முக்கியத்துவம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு விஷயத்தை செய்ய வேறு விதமான வழி இருக்கிறது. அந்த வேறு வழி, மலிவானது மற்றும் சிறந்ததாக இருக்கலாம் என்பதை பெரிய நிறுவனங்கள் இப்போது உணரத்துவங்கலாம்,” என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியர்கள் அடிப்படையில் தொழில்முனைவோர்கள். நமக்குத் தேவை எல்லாம் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள். ஸ்டார்ட் அப்கள் இதை தான் செய்வதாக நினைக்கிறேன். இவை வெற்றி பெற வாழ்த்துக்கள், என்று அவர் தெரிவித்தார்.
சிராட்டே வென்சர்ஸ் நிறுவனம், மீடியா, தொழில்நுட்பம், ஃபின்டெக் உள்ளிட்ட துறைகளில் 75க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில், 470 மில்லியனுக்கு மேல் முதலீடு செய்துள்ளது. ரத்தன் டாடா இதன் மூத்த ஆலோசகராக இருக்கிறார்.
செய்தி: பிடிஐ | தமிழில்; சைபர்சிம்மன்