இந்தியாவில் காலாவதியான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக வெளியான செய்திகள் உண்மையா?
இந்தியாவில் காலாவதியான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை என பிஐபி செய்தி வெளியிட்டுள்ளது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஆயுட்காலத்தை முறையே 12 மாதங்கள் மற்றும் 9 மாதங்களாக நீட்டித்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது என்றும் இது தொடர்பாக வந்த செய்திகள் கட்டுக்கதைகள் என்றும் பிஐபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய அளவிலான கோவிட் 19 தடுப்பூசி இயக்கத்தில், காலாவதியான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது அரைகுறையான தகவல்களின் அடிப்படையில் வெளியான தவறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய செய்தியாகும்.
பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த நிறுவனத்தில் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் ஆயுட்காலத்தை 9 மாதங்களில் இருந்து, 12 மாதங்களாக நீட்டித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, 25 அக்டோபர் 2021 அன்று உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலத்தையும் 6 மாதத்திலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து 22 பிப்ரவரி 2021 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்த புள்ளிவிவரங்களை முறையாக ஆய்வு செய்து, விரிவான பகுப்பாய்வுகளுக்கு பிறகே இந்த தடுப்பூசிகளின் ஆயுட்காலம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் அறிவித்தபடி, நேற்று முதல் இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென பல்வேறு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதல்வர்கள் இந்த தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளனர்.
தகவல் உதவி: பிஐபி