15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி தொடக்கம்: தமிழ்நாட்டில் 33.46 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி பெற தகுதி!
இந்தியாவில் இன்று முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென பல்வேறு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் அடுத்தடுத்த அலைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. இந்தியாவிலும் ஒமைக்ரானால் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது.
தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவை தான் கொரோனாவிற்கு எதிரான முக்கிய ஆயுதங்களாக இப்போதைக்கு நம் வசம் உள்ளன. உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் எந்தளவிற்கு வேலை செய்யும் என்ற கேள்வி பரவலாக இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய்ப் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை குறைக்கலாம் என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவுரையாக உள்ளது.
அதன்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தின்படி, 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,
“ஜனவரி 3ம் தேதி முதல் இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தார்.”
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தனியாக மையங்களை அமைக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இதற்கான முன்பதிவும் தொடங்கியது.
வேக்சின் பெற தகுதி உள்ள சிறார்கள் Cowin தளத்தில் முன் பதிவு செய்யலாம் என்று அதன் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி,
கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர்கள் முன்பதிவு செய்தனர். தமிழகத்தில் சுமார் 6 லட்சம் சிறுவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரதமர் அறிவித்தபடி, இன்று முதல் இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென பல்வேறு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதல்வர்கள் இந்த தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளனர்.
தமிழகத்திலும் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர்,
“தமிழகத்தில் சுமார் 33 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி பெற உள்ளனர். 15 நாட்களுக்குள் இந்த இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள், கலெக்டர்கள் இந்த பணிகளை தொடங்கி வைத்தனர். இதனால் முதல் நாளே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
2005, 2006, 2007ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள் இந்தத் தடுப்பூசி பெறத் தகுதியானவர்கள் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2004 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு 18 வயதைக் கடந்திருக்கும் என்பதால் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயது நிரம்பப்பட்ட சுமார் 10 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 33.46 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி பெற தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
இவர்களில் சுமார் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆவார்கள். 10, 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் முழுமையாக இந்த வயது பிரிவில் இடம் பெறுகிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளியிலும் 15-18 வயது உடைய மாணவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக சிறப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கூட்டம் அதிகம் சேருவதை தவிர்ப்பதற்காக சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வர பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நாளில் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் அன்றே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான பெரிய கேடகமாக தடுப்பூசிகள் கருதப்படுவதால், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவர்கள் ஆன்லைனில் மட்டுமல்லாமல், நேரடியாக வந்து ஆன் சைட்டில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கோவின் செயலியில் அருகில் இருக்கும் வேக்சின் முகாமை கண்டறிந்து அதில் முன் பதிவு செய்தும் கூட வேக்சின் போட்டுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள குழந்தைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை இல்லாமல், அவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளிலேயே தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளது தமிழக அரசு. இதன் மூலம் அதிக அளவில் சிறார்கள் வேக்சின் போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக கோவாக்சின் போடப்படும். பின்னர் போதுமான விநியோகம் கிடைத்தபின் சைடஸ் கேடில்லா வேக்சின் போடப்படலாம் என்று சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி பதிவு செய்யும் வழிகள்
சிறார்கள் தடுப்பூசி முன் பதிவை செய்ய பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும். https://www.cowin.gov.in/ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து தங்கள் பெயரை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். தொலைபேசி எண்ணைக் கொடுத்ததும் வரும் ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
அதற்கு ஏற்ப மாநில அரசுகளுக்கு Covaxin தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. சிறுவர்களிடம் தடுப்பூசி தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை மத்திய அரசு செய்து உள்ளது. அதன்படி, சிறுவர்களுக்கு கோவேக்சின் தவிர வேறு வகை தடுப்பூசிகளை செலுத்தி விடக்கூடாது என்பதில் சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பள்ளிகளில் படிக்கும் சுமார் 26 லட்சம் பேரை தவிர மேலும் 7.5 லட்சம் பேர் 15-18 வயதில் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் முடுக்கிவிடப் பட்டுள்ளன.