விருப்பத்திற்கேற்ப தங்க ஆபரணம் வடிவமைத்து தரும் கோவை 'அக்ரோவ்'
பொதுவாகவே நகை வாங்குவோர் நகை கடைக்கு செல்வார்கள் அங்கிருக்கும் பல்வேறு டிசைன்களில் தங்களுக்கு பிடித்த ஒன்றை வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு தங்களுக்கு பிடித்தமான டிசைன்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து அது போல செய்ய சொன்னார்கள்.
இப்போது ஒருவர் தன் புகைப்படத்தை காட்டி அதை உள்ளடிக்கிய ஒரு ஆபரணத்தை செய்யச்சொல்லி கேட்க முடியும். இதுபோல கைரேகை, பார்கோட், கார், ஜீப், சைக்கிள் என தங்களுக்கு பிடித்த எந்த டிசைனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இவற்றையெல்லாம் செய்து இணையம் மூலமே விற்பனை செய்கிறார் கோவையை சேர்ந்த விவேக் கிருஷ்ணா. அக்ரவ் (augrav) என்ற தன் நிறுவனம் உருவான விதம் பற்றி தமிழ் யுவர்ஸ்டோரி யிடம் பகிர்ந்துகொண்டார்.
"சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சமயத்தில் அவர் முகம் பொறித்த தங்க நாணயம் நன்கு விற்பனையானது. இது போல வாடிக்கையாளரின் முகம் பொறித்த தங்க நாணயத்தை விற்றால் என்ன என்ற யோசனை தோன்றியது.” அப்படி உருவான சிந்தனை தான் இன்று வெற்றிகரமான நிறுவனமாக உருவாகியிருக்கிறது.
விவேக் கிருஷ்ணா 2006ம் ஆண்டு கோயம்புத்தூர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கணினி அறிவியல் படித்தவர். கல்லூரி முடித்தவுடன் பெங்களூர் ஐபிஎம் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் மென்பொருள் வல்லுனராக பணியாற்றினார். "சினிமாவில் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னை செல்வது போலவே, மென்பொருள் வல்லுனர்களுக்கு சிலிக்கான் வேலி செல்ல ஆசை இருக்கும், அங்கே பணியாற்ற வேண்டுமென்றால் ஒரே வழி அங்கே சென்று படிப்பது தான்”.
வெளிநாட்டில் படிக்க தேர்வெழுதி விண்ணப்பித்தவருக்கு இண்டியானா பல்கலைக்கழகத்தில் நூறு சதவீத உதவித்தொகையில் எம்.எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010ம் ஆண்டு மேற்படிப்பை முடித்துவிட்டு ஜெனரல் செண்டிமண்ட் என்ற புதுநிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நிறுவனத்தில் ஒரு குழுவை உருவாக்குவது எப்படி, ஒரு பொருளை உற்பத்தி செய்வது அதை சந்தைக்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை களைவது, உலகின் தலைசிறந்த வல்லுனர்களை கவர்வது எப்படி என பலவற்றை அந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது கற்றுகொள்ள முடிந்தது என்றார்.
2012ம் ஆண்டு வரை அமெரிக்காவில் பணியாற்றினார். ஈகாமர்ஸ் தளங்களான ஃப்லிப்கார்ட், மிந்த்ரா போன்ற நிறுவனங்கள் பரபரப்பாக பேசப்பட்ட தருணம் அது. அதை கவனித்தார். புதிதாக நிறுவனம் துவங்கி எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமானது, உடனடியாக இந்தியா திரும்பினார்.
அமெரிக்காவில் மென்பொருளுக்கு எப்படி சிலிக்கான் வேலி பிரசித்தி பெற்றதோ, இந்தியாவின் தங்க வேலி கோயம்புத்தூர் தான், உலகின் பல்வேறு இண்டு இடுக்குகளுக்கும் தங்க நகைகளை விற்கும் நிறுவனங்கள் கோயம்புத்தூரில் இருப்பதை கவனித்தார். கூடுதலாக இவரின் அப்பா தங்க நகை விற்கும் ஒரு நிறுவனத்தோடு பணியாற்றுகிறவர். எனவே துணிந்து களத்தில் இறங்கினார்.
புதுநிறுவன உருவாக்கம்
தன் நண்பர் சூர்யாவோடு இணைந்து க்ரிஷ்டா.காம் (Krizda.com) என்ற பெயரில், இணையத்தில் ஆபரணங்களை விற்கும் நிறுவனத்தை துவக்கினார். "மென்பொருள் துறையிலிருந்து வந்திருந்ததால் இணையதளம் துவங்குவது கடினமாக இல்லை. வெறுமனே வெப்சைட் மட்டும் உருவாக்கிவிட்டால் போதும், எல்லாம் தானாகவே நடந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வெப்சைட்டை துவங்கிய பிறகு தான் தெரிந்தது, இணைய சந்தைப்படுத்துதலில் நிறைய சவால்கள் இருப்பது” என்கிறார்.
எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை”, காரணம் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆபரணங்களை இணையத்தில் வாங்கவே மக்கள் யோசித்தார்கள்”. இணைய சந்தைப்படுத்துதல் பற்றியும் பெரிய அறிவில்லாததால் இது வேலைக்கு ஆகாது என்று மூன்று மாதத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டார் விவேக். புதிதாக எதாவது செய்யலாம் என்று தீர்மானித்தார்.
ஏற்கனவே சில ஆபரண விற்பனையாளர்கள் இணையதளம் துவங்கி விற்பனை சந்தைக்கு வந்து கொண்டிருந்ததை கவனித்தார். அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து தன் தளத்தில் விற்பனை செய்தால் என்ன என்று யோசனை வந்தது. ஆனால் அதில் வேறுவகையான சவால்கள் இருந்தது. மிகப்பெரிய அளவிலான நிதி தேவைப்பட்டது. அந்த சமயத்தில் அது போன்ற நிறுவனம் ஏதும் இல்லை. எனவே அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
இடையில் வாடிக்கையாளர்களின் முகம் பொறித்த சில நாணயங்களை விற்றார். அதற்கு பெரிதாக எந்த விளம்பரமும் செய்யவில்லை. பிறகு நாணயம் வாங்குவோர் எண்ணிக்கையும் குறைந்தது. இதுவும் அவ்வளவுதானா என்று நினைத்துக்கொண்டிருந்தவருக்கு சரியாக ஒருவருடம் கழித்து வந்தது ஒரு மெயில். “போன வருடம் என் நண்பருக்கு ஒரு நாணயம் செய்து கொடுத்தீங்க. அது போலவே எனக்கும் வேண்டும். செய்து தரமுடியுமா?” என்று கேட்டிருந்தார்கள்..
இது அக்டோபர் 15 2014ம் ஆண்டு நடந்த சம்பவம். மறுநாளே 'அக்ரவ்' என்ற பெயரில் இணையதளம் துவங்கினார், நிறுவனமும் உதித்தது. வாடிக்கையாளர்களின் படம் பொறித்த தங்க நாணயம் விற்பதற்காகவே துவங்கப்பட்ட நிறுவனம் இது. இதற்கு மிகப்பெரிய சந்தை இருப்பதை உணர்ந்ததே காரணம். ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் இந்த சந்தையில் அனுபவம் இருந்ததால் இதை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருந்தது.
வாடிக்கையாளர்களிடம் இது மிகப்பெரிய வெற்றியடைந்தது. நிறுவனத்தின் பெயரில் முதல் இரண்டு எழுத்து au தங்கத்தின் கனிமக்குறியீடு ஆகும். “இந்த நிறுவனத்தின் மூலம் நாங்கள் விற்கும் ஒவ்வொரு ஆபரணத்திலும் வாடிக்கையாளரின் எதாவது ஒரு அங்கம் நிச்சயம் இருக்கும். எங்கள் ஆபரணம் தனிப்பட்டமுறையில் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் விவேக் மேலும்.
"வாடிக்கையாளரின் முகம், கணவன் மனைவியாக சேர்ந்து எடுத்த போட்டோ ஏன் அவர்கள் குரல் ஒலியையே பதிவு செய்து அந்த ஒலிவடிவம் பொறித்த ஒரு ஆபரணத்தை உருவாக்கி தருகிறோம். உலகத்தில் ஏழு பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதை பிரதிபலிக்க்கூடிய ஒன்றாக அவர்கள் அணியும் ஆபரணம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் பெருமிதமாக.
எப்படி செய்கிறார்கள்?
ஆபரணம் வேண்டி ஒருவர் தொடர்புகொண்டால் அதன்பிறகு அவரிடம் பேசி அவர் தன் போட்டோ பொறித்த நாணயம் தேவை என்று கேட்டால் அவரிடம் போட்டோ வாங்கி, நாணயம் தயாரானதும் வாட்ஸப்பில் மாதிரி அனுப்புகிறார்கள். சமயங்களில் மூக்கு சரியில்லாமல் இருக்கும், வேறு எதாவது மாற்றம் தேவைப்படும் அதையெல்லாம் அவ்வப்போது சரிசெய்து, முழுவதும் திருப்தி ஆனபிறகே ஆபரணத்தை அனுப்புகிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சி எல்லா வேலையையும் எளிமைபடுத்தியிருக்கிறது என்று கூறும் விவேக் தொழில்நுட்பத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்துகிறார். நிறுவனம் துவங்கி முதல்மாதம் மட்டும் ரூ2,50,000 வருமானம் கிடைத்திருக்கிறது. இப்போதைக்கு 150 வாடிக்கையாளர்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்.
தொழில்போட்டி
ஒருவரின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப ஆபரணங்களை வடிவமைப்பது என்பது சந்தையில் புதிதான ஒன்றாகும். அதுவும் விவேக் போல, தனிப்பட்ட நபர்களின் உருவம் பொறிப்பதெல்லாம் வேறு யாரும் செய்வதில்லை. ரோச்சா ஃபேசன் (Rocha Fashion), அடிமன்( Addimon), வோய்லா(Voylla), மிர்ரா(Mirraw), ப்ளூஸ்டோன் (Bluestone), மற்றும் கரட்லேன்(Caratlane) இப்போதைக்கு வளர்ந்து வரும் போட்டி நிறுவனமாவார்கள். விவேக்கின் அனுபவத்தை பார்க்கும்போது இந்த துறைக்கு மிகப்பெரிய எதிர்காலமிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது!
இணையதள முகவரி: Augrav