'Meta' என மாற்றப்பட்ட ‘ஃபேஸ்புக்' நிறுவன பெயர்: ஆப்’களின் பெயர்களில் மாற்றம் இல்லை!
அமெரிக்க பங்கு சந்தையில் ஃபேஸ்புக்கின் குறியீடும் மாற்றம்!
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனம், ‘Facebook'. கிட்டத்தட்ட 285 கோடி பேர் உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றப்போவதாகத்தகவல் வெளியானது. அதன்படி, இப்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக்-இன் தாய் நிறுவனமான ’ஃபேஸ்புக் இன்க்’கின் பெயர் இப்போது ’மெட்டா' ’Meta' என மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலில்களின் பெயரில் எந்த மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி மாநாட்டில் பேசிய அதன் CEO மார்க் ஜுக்கர்பெர்க், இந்த பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மார்க்,
“உலகில் நிலவும் சமூகப் பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். இந்த கற்றல் மூலமாக புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. இப்போது எங்கள் செயலிகள் மற்றும் பிராண்டுகளின் பெயர் மாறவில்லை. எங்கள் அடுத்தகட்ட கவனம், மெய்நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) ஆன்லைன் உலகமான 'Metaverse' நோக்கி இருக்கும். இந்த சேவையை அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றுள்ளார்.
ஃபேஸ்புக் ஆப்களின் பெயர்கள் அப்படியே இருந்தாலும், அதன் தாய் நிறுவனத்தின் புதிய பெயர் அதன் சமூக ஊடகச் சேவையை விட மெட்டாவர்ஸில் முதலீடு செய்துள்ளதை அதிகமாக பிரதிபலிக்கிறது. மெட்டாவர்ஸ் என்பது மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் "ஸ்னோ க்ராஷ்" என்ற டிஸ்டோபியன் நாவலில் உருவாக்கப்பட்ட ஒரு சொல். ஆக்மென்டட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியான ’மெட்டாவர்ஸ்'ல் முதலீடுகளை அதிகரித்துள்ளது.
மெட்டாவர்ஸில் பணியாற்றுவதற்காக ஒரு தயாரிப்புக் குழுவை உருவாக்கியுள்ள ஃபேஸ்புக் இந்த முதலீடுகளில் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பாவில் 10,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான திட்டங்களை சமீபத்தில் அறிவித்திருக்கிறது.
முன்னதாக, தகவல் தொழில்நுட்ப பப்ளிகேஷன் ஒன்று அளித்த பேட்டியில் மார்க்,
“தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நான் விலகுவது குறித்து பரிசீலிக்கவில்லை. அதுகுறித்து இன்னும் தீவிரமாக யோசிக்கவில்லை," என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மெட்டா பெயர் மாற்றம் என்பதோடு நில்லாமல், அமெரிக்க பங்குச் சந்தையில் ஃபேஸ்புக்கின் குறியீடு எம்.வி.ஆர்.எஸ் என மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது என்று மார்க் தெரிவித்துள்ளார்.