ஒரே சரிவில் மார்க் இழந்த 50,000 கோடி: வாட்ஸ்-அப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் டவுன் தான் காரணமா?
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சேவை பாதிப்பால் மன்னிப்பு கேட்ட மார்க்!
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய மூன்று நிறுவனங்களும் நேற்றிரவு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவைகள் தடைபட்டது. குறிப்பாக இரவு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக சேவையில் பாதிப்பு இருந்ததால் பயனர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
அதன்பிறகே, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தப் பாதிப்பின் விளைவு ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் CEO மார்க் ஜுக்கர்பெர்க்கின் மதிப்பில் தெரியவந்துள்ளது.
ஆம், இந்த ஐந்துமணி நேரச் சேவை பாதிப்பு காரணமாக மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு பெரும் அளவு சரிந்துள்ளது.
குறிப்பாக சேவைகள் தடைபட்ட சில மணிநேரத்திலேயே மார்க்கின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சரிவு வேறுவித பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐம்பதாயிரம் கோடி ரூபாய் சரிவால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்குச் சென்றுள்ளார் மார்க்.
இப்போது பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் தற்போது உள்ளார். தற்போது மார்க்கின் சொத்து மதிப்பு சுமார் 120 பில்லியன் டாலர். இதுவே கடந்த சில வாரங்களுக்கு முன் 140 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்க்கின் சொத்து மதிப்பு மட்டுமல்ல, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பும் நேற்று ஒரே இரவின் சுமார் 5% சரிந்திருக்கிறது.
இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மட்டும் நேற்று ஃபேஸ்புக்கின் சொத்து மதிப்பு சரிவடையவில்லை. வேறு ஒரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது ஃபேஸ்புக் முன்னாள் ஊழியர் கொடுத்த பேட்டி. ஃபேஸ்புக்கின் 'Civic Integrity Unit'-ல் பணிபுரிந்த முன்னாள் ஊழியரும் விசில் ப்ளோயருமான பிரான்செஸ் ஹவ்கென் என்பவர் சமீபத்தில் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.
அது, ஃபேஸ்புக்கிற்கு பெரும் பின்னடைவாக அமைத்துள்ளதாம். அந்தப் பேட்டியில் பிரான்செஸ்,
“சில மோசமான விஷயங்கள் நீங்கள் நினைக்கும் அளவை விட ஃபேஸ்புக்கில் நடக்கின்றன. தங்கள் லாபத்துக்காக வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள், போலிச் செய்திகள் போன்றவற்றை ஃபேஸ்புக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. இந்தப் பழக்கம் அதிகரித்து வருகிறது," என்று பேசியிருந்தார்.
சில வாரங்கள் முன் ஃபேஸ்புக் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து சில ஆதாரங்களையும் இதே பிரான்செஸ் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஃபேஸ்புக் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. என்றாலும் அமெரிக்க அரசு இதுதொடர்பாக விசாரணையை செய்ய கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இதனிடையே, ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் CEO மார்க் ஜுக்கர்பெர்க் நேற்றைய தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
“ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவை இப்போது மீண்டும் ஆன்லைனில் வருகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் மீது அக்கறைக் கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்," என்று பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மார்க் இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுக்கு மன்னிப்பு கேட்பது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது முதல்முறையாகும்.