பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா?

cyber simman
10th Jan 2019
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் 2019 ம் ஆண்டுக்கான தனது புத்தாண்டு தீர்மானத்தை அறிவித்திருக்கிறார். எதிர்பார்க்கக் கூடியது போலவே, முந்தைய ஆண்டு தீர்மானங்களை விட இது முக்கியமாக அமைந்திருக்கிறது.

சமூகத்தில் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பான பொது விவாதத்தை நடத்துவது தான் ஜக்கர்பர்கின் தீர்மானாமாக அமைந்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த சவால்கள், வாய்ப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கவலைகள் பற்றி எல்லாம் பேசப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இணைய உலகின் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக்கின் நிறுவனரான 34 வயதான மார்க் ஜக்கர்பர்க், புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வழக்கம் கொண்டிருக்கிறார். 2009ம் ஆண்டு முதல், தனிப்பட்ட சவால்களை இப்படி புத்தாண்டு தீர்மானமாக மேற்கொண்டு வருகிறார்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகம் வாசிப்பது, புதிய மொழி (சீனம்) கற்பது, தினமும் ஒரு மைல் ஓடுவது, செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்குவது, என இதுவரை அவரது புத்தாண்டு தீர்மானங்கள் வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் அமைந்துள்ளன.

எனினும், ஒரு நிறுவனமாக ஃபேஸ்புக்கின் செல்வாக்கும், சமூகத்தில் அதன் தாக்கம் தொடர்பான சர்ச்சைகளும் அதிகரித்து வரும் நிலையில், ஜக்கர்பர்கின் புத்தாண்டு தீர்மானம் என்பது தனிமனித உறுதிமொழி என்பதை கடந்து ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

2017 ம் ஆண்டில் அவர் அமெரிக்காவில் நாடு தழுவிய பயணத்தை மேற்கொண்டார் என்றால், பொய்ச்செய்திகள் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கடந்த ஆண்டு இந்த பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டார்.

இதனிடையே 2018 ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனலிடிகா உள்ளிட்ட பிரச்சனைகளால் ஃபேஸ்புக்கிற்கு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. பயனாளிகளின் தரவுகளை கையாள்வது தொடர்பாக ஃபேஸ்புக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஜக்கர்பர்க் இந்த விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் ஆசிய நாடான, மியான்மரில் வெடித்த துவேஷம் சார்ந்த வன்முறையில் ஃபேஸ்புக்கின் பங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தரவுகள் திருட்டு சார்ந்த பிரச்சனைகளிலும் ஃபேஸ்புக் தொடர்ச்சியாக சிக்கித்தவித்து வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தை ஜக்கர்பர்க் வழிநடத்தும் விதம் குறித்தும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த பின்னணியில் ஜக்கர்பர்க், 2019 ம் ஆண்டிற்கான தனது தீர்மானத்தை அறிவித்திருக்கிறார். தனது வழக்கப்படி ஃபேஸ்புக் பதிவாக இதை வெளியிட்டுள்ளார்.

சமூகத்தில் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பாக- அதன் வாய்ப்புகள், சவால்கள், நம்பிக்கைகள் மற்றும் கவலைகள்- குறித்து தொடர்ச்சியாக பொது விவாதம் நடத்துவேன் என அதில் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். ’ சில வாரங்களுக்கு ஒரு முறை பல்வேறு துறைகளைச்சேர்ந்த வல்லுனர்கள், தலைவர்கள் மற்றும் மக்களுடன் விவாதம் நடத்துவேன்,’ என்று அவர் கூறியுள்ளார்.

இதை சுவாரஸ்யமாக வைத்திருக்க வெவ்வேறு வடிவத்தை பின்பற்றுவேன் என்று கூறியுள்ள ஜக்கர்பர்க், தனது ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கம் அல்லது வேறு ஊடகத்தில் இதை மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

நாம் வாழும் உலகம் பற்றியும், அதில் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றியும் பெரிய கேள்விகள் இருக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகலாவிய கூட்டுறவு தேவைப்படும் உலகின் பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண இணையத்தை எப்படி பயன்படுத்துவது?, மனிதர்கள் செய்வதை தானியங்கிமயமாக்கும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை உருவாக்குவதை விட, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிநுட்பத்தை உருவாக்குவது எப்படி? போன்ற கேள்விகள் முக்கியமானவை என்றும் ஜக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பொறியாளராக தனது ஐடியாக்களை கொண்டு சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், சேவைகளே தங்கள் சார்பில் பேசும் எனும் நம்பிக்கைக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளவர், தங்கள் நிறுவனம் அளிக்கும் சேவையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது போதாது என உணர்ந்து, எதிர்காலம் பற்றிய பொது விவாதத்தில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனர் பதவியில் இருந்து ஜக்கர்பர்க் விலக வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், ஃபேஸ்புக்கின் செயல்பாடு தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளி விடாமல், உரையாடலுக்கு தயாராக இருப்பதை இதன் மூலம் அவர் உணர்த்தியுள்ளார். ஜக்கர்பர்கின் இந்த பொது விவாதம் ஃபேஸ்புக்கின் செயல்படும் விதத்தை மாற்றக்கூடியதாக இருக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.ஜக்கர்பர்கின் 2019 தீர்மானம்: https://www.facebook.com/zuck/posts/10106021347128881


 

 

 

 

 

 

 

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags