ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி ‘லைக்ஸ் ஹைட்’ பண்ணலாம்: விரைவில் அறிமுகம்!
சோதனை முயற்சியை முடித்த பேஸ்புக்!
சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தனது பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, இந்த வசதி இன்ஸ்டாகிராமில் பயனர்கள் தங்கள் போஸ்டில் இருந்து லைக்ஸ் எண்ணிக்கையை மறைக்க அனுமதிக்கும். முதல்கட்டமாக இந்த அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த வசதி பயனர்கள் மற்ற பயனர்களின் போஸ்ட்களில் லைக்ஸ்களைப் பார்க்க விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தேர்வுசெய்யவும் அனுமதிக்கும். இந்த வசதி, மக்களுக்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கும் நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று இது தொடர்பாக பேஸ்புக் அறிக்கை தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் இந்த வசதியை சோதித்து பார்ப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2019ல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுடன் இதே வசதியை சோதிக்கத் தொடங்கியது. ஆனால் இதன்பின் ஏற்பட்ட, கொரோனா தொற்றுநோய் காரணமாக, இன்ஸ்டாகிராம் மற்ற மிக முக்கியமான வசதிகள் தொடர்பாக தங்கள் கவனத்தை செலுத்தியது.
முன்னதாக, இந்த hide likes வசதி மற்ற பயனர்களுக்கு லைக்ஸ் எண்ணிக்கையைக் காட்ட வேண்டுமா இல்லையா என்பதை மட்டுமே தேர்வுசெய்ய அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் தற்போது தங்கள் லைக்ஸ்களை பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதுடன், இதை மற்றவர்களுக்கு அதை காட்ட வேண்டுமா வேண்டாமா என்ற ஆப்ஷனையும் கொடுக்கிறது.
இந்த வசதியின் நோக்கம், இன்ஸ்டாகிராமில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே லைக்ஸ் பெறுபவர்களை 'Feel Good' செய்ய வைப்பதாகும். இது தொடரபாக ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இன்ஸ்டாகிராமில் மக்களின் அனுபவத்தை குறைக்க முடியுமா என்பதைப் பார்க்க இந்த வசதி மூலம் சோதித்து பார்த்தோம். ஒரு போஸ்டை பகிர்வதற்கு முன்பு லைக்ஸ் எண்ணிக்கையை மறைக்க இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வுசெய்யலாம். இது நேரலைக்கும் பொருந்தும். மக்களுக்கு ஆப்ஷனை வழங்குவது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம். சில வாரங்களில் இந்த இரண்டு கட்டுப்பாடுகளும் ஃபேஸ்புக்கில் வருவதை நீங்கள் காண்பீர்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மக்களை எவ்வாறு மேம்படுத்துவது, சுய விழிப்புணர்வை உருவாக்குவது மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் நேர்மறையான அனுபவத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நன்கு புரிந்துகொள்ள மூன்றாம் தரப்பு நிபுணர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
இன்ஸ்டாகிராமில் மக்களின் அனுபவங்களைப் பற்றிய கூடுதல் வெளிப்புற ஆராய்ச்சிகளுக்கும் நாங்கள் நிதியளிக்கிறோம். இது எங்கள் கொள்கைகளையும் தயாரிப்புகளையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்காக. தற்போது உலகளாவிய கல்வியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்றவர்களிடமிருந்து ஆராய்ச்சி திட்டங்களை நாங்கள் கோருகிறோம், என்று அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.