புதிய தொழில்நுட்ப விதிகள்: ஒப்புக் கொண்ட ஃபேஸ்புக்; வழக்கு தொடர்ந்த வாட்ஸ்அப்!
தனி உரிமையை பாதிக்கும் என வழக்கு!
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி, சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள் உள்ளிட்டவற்றுக்கான புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் புதிய கட்டுப்பாடுகளில் இடம் பெற்றிருந்தன.
மேலும், சமூக ஊடக நிறுவனங்கள், குறை தீர்க்கும் அதிகாரி, முதன்மை பொறுப்பு அதிகாரி மற்றும் தொடர்பு அதிகாரி ஆகியோரையும் நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களுக்கான புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுமுன்தினத்துடன் (25/05/21) முடிந்தநிலையில், இந்திய சமூக ஊடக நிறுவனமான கூ (Koo ) மட்டுமே விதிமுறைகளை செயல்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிறுவனம், குறை தீர்ப்பு அதிகாரி உள்ளிட்டோரை நியமனம் செய்துள்ளது. முன்னணி சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னமும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனினும் மத்திய அரசின் இந்த புதிய தொழில்நுட்ப விதிகளை பின்பற்றும் முடிவில் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கும் அதேவேளையில், மத்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு தொடர்பாக பேசிய வாட்ஸ்அப் செய்திதொடர்பாளர்,
”மத்திய அரசின் புதிய சட்டவிதிகள், பயனர்களின் தனி உரிமையை பாதிக்கும். அனுப்பப்படும் மெசேஜ்களை கண்காணிக்கச் சொல்வது வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்தியின் கைரேகையை வைத்திருக்கும்படி கேட்பதற்குச் சமம். வாட்ஸ்அப் அதன் பயனர்களின் தனியுரிமையை மீறும் தேவைகளை எதிர்ப்பதில் சிவில் சமூகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுடன் தொடர்ந்து இணைந்துள்ளது.”
இதற்கிடையில், எங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களுக்கான சரியான சட்டக் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது உட்பட, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை தீர்வுகள் குறித்து நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து ஈடுபடுவோம், என்று கூறியுள்ளார்.
வழக்கிற்கு மத்தியில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
''புதிய விதிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் வாட்ஸ்அப் வழக்கு தொடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் முயற்சி ஆகும். தனி உரிமையை அடிப்படை உரிமை என்று மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதனை குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதிலும் உறுதியாகவும் உள்ளது," என்று தெரிவித்துள்ளது .
இதற்கிடையே, பொது ஒழுங்கை உறுதி செய்ய, தேசிய பாதுகாப்பைப் பேண இந்த தகவல்கள் அடங்கிய விதிகள் அவசியம், என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.