43,574 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக்!
இந்தியாவில் 60 மில்லியன் சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிக்க ஃபேஸ்புக் உடன் இணைந்து செயல்பட உள்ளது ஜியோ.
சமூக வலைதள ஜாம்பவான் நிறுவனம் ஃபேஸ்புக், ரிலையன்ஸ் ஜியோவில் 43,574 கோடி மதிப்பில் முதலீடு செய்து, 9.99% பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக மைனாரிட்டி பங்குதாரராக ஃபேஸ்புக் ஆகியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின், தொலைத்தொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 9.99% பங்குகளை அமெரிக்க சமூகவலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக்குக்கு $5.7 பில்லியன், அதாவது 43,574 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் இன்னும் அழுத்தமாக கால் பதிக்கவிருக்கிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் உடனான இந்த பங்கீடு குறித்து நிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில்,
“2016ல் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடங்கியபோது, இந்திய டிஜிட்டல் சர்வோதயாவைக் கொண்டுவரும் கனவுடன் அதைத் தொடங்கினோம். ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரத்துடன், இந்தியாவின் டிஜிட்டல் திறனும் சேர்ந்தே வளரும்போது, இந்தியா சர்வதேச நாடுகளின் முன்னால் டிஜிட்டல் வளர்ச்சியும் பெற்ற நாடாக மிளிரும் என்பதே கனவாக இருந்தது. இந்தியர்கள் அனைவருக்குமான பயனாகவும், டிஜிட்டல் துறையில் வேகம்பெற்று வளர்வதற்கு ரிலையன்ஸைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஃபேஸ்புக்கை, நீண்ட கால பங்குதாரராக வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜியோவுக்கும் ஃபேஸ்புக்கும் இடையிலான கூட்டானது, பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடனான, இரண்டு குறிக்கோள்கள், அதாவது, வாழ்வின் எளிமை, மற்றும் வணிகத்தில் எளிமை என்பதை உணர்த்த உதவிகரமாக இருக்கும். கொரோனாவுக்குப் பிறகும், இந்தியா பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெறும் என நான் நம்புகிறேன். இந்த மாறுதலுக்கு, இந்த பங்கீட்டு உறவும் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன், என்று தெரிவித்தார்.
"அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள், ஆனால் குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள சிறு வணிகங்களுக்கு, புதிய மற்றும் அற்புதமான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதே. இது 1.3 பில்லியன் இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், வளப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவும்," என்று ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
"வாட்ஸ்அப் இந்திய வாழ்க்கையில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டது, இது பல இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வினைச்சொல்லாக மாறியுள்ளது. வாட்ஸ்அப்’பின் சக்தியைக் கொண்டு, மக்களை வணிகங்களுடன் இணைக்கவும், பொருட்களை வாங்கவும், தடையற்ற மொபைல் அனுபவத்தை மக்களை பெறவும் உதவும்,” என்று ஃபேஸ்புக் மேலும் கூறியது.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்,
“இந்த முயற்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களுக்கும், வணிகங்களுக்கும் புது வழிகளைத் திறக்கும். உதாரணமாக, ஜியோவின் சிறு முன்னெடுப்பான ஜியோ மார்ட், வாட்ஸ்-அப்பின் திறனுடன் சேரும்போது, வணிகத்துடனான தொடர்போ, பொருட்களை வாங்குவதோ சிரமமற்ற ஒரு மொபைல் அனுபவமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் இந்தியாவின் தலைமை இயக்குனர் அஜித் மோஹன் இது பற்றி தெரிவிக்கையில்,
“எங்கள் முக்கிய நோக்கமே இந்தியாவில் உள்ள புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், அதிலும் குறிப்பாக 60 மில்லியன் சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவுவதே ஆகும். இதுவே இந்தியாவின் பெரும்பாண்மை பணிகள் உருவாகும் இடமுமாகும்,” என்றார்.
ரிலையன்ஸ் மற்றும் ஃபேஸ்புக் இணைவது இது முதல் முறை அல்ல. ஜூலை 2019ல், ஃபேஸ்புக் 'டிஜிட்டல் உதான்' என்ற டிஜிட்டல் கல்வியறிவு இயக்கத்திற்காக ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது . இது இணையத்தில் புதியதாக இருந்த இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜியோபோன் பயனர்களை இலக்காகக் கொண்டது. இந்த கூட்டு முயற்சி 13 இந்திய மாநிலங்களில் 200 இடங்களை அடைந்து மொபைல் இணைப்பின் சிறப்புகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
ஆங்கிலத்தில்: சோஹினி | தமிழில்: இந்துஜா