15-வது பிறந்த நாள் கொண்டாடும் 'ஃபேஸ்புக்' - உருமாற்றமும்; வளர்ச்சியும்!
“ஃபேஸ்புக் ஏன் இன்னமும் களத்தில் நிலைத்து நிற்கிறது தெரியுமா?” என்று என்னுடைய கல்லூரிப் பேராசிரியர் கேள்வி கேட்டு நின்றிருந்த போது மொத்த வகுப்பும் அமைதியாக இருந்தது.
“அது இலவசமாக இருப்பதினால்...”, “ குறைந்த இண்டர்நெட்டிலும் லோடு ஆகிறது...”,” நீல நிறம் தான் காரணம்...” என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்லத் தொடங்கினோம்.
இருக்கலாம். ஆனால், ஃபேஸ்புக் நமக்கு சலித்து போகாமல் இருப்பதற்கு முதல் காரணம்- ஃபேஸ்புக்கின் வடிவம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது என்பது தான்...” என்றார் அவர்.
யோசித்துப் பார்த்தால், இப்போது நம் மொபைலில் இருக்கும் எல்லா செயலிகளுமே சில நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் ஆகிக் கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமின் ஒரு அப்டேட் மிக மோசமாக இருந்ததால், அதை உடனடியாக இன்ஸ்டாகிராம் மாற்றி முன்னிருந்த வடிவத்திற்கு மாற்றியது கூட நடந்தது. இந்த ‘அப்டேட்கள்’ எல்லாம் தவிர்க்க முடியாதவையாக மாறியிருக்கிறது. இதற்கு ஃபேஸ்புக் முன்னோடியாக இருக்கிறது.
பதினைந்து வருடத்தில் ஃபேஸ்புக் கடந்த வந்த பாதையை நினைவு கூர்ந்திருந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்,
“நம்மைச் சுற்றி புத்தகங்கள், இசை, தகவல்கள், வணிகங்கள் என எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வெப்சைட்டுகள் இருக்கின்றது- ஆனால் மனிதர்களை கண்டுபிடிக்க மட்டும் எதுவும் இல்லை. அதனால் தான் மனிதர்களைச் சுற்றி ஒரு வெப்சைட்டை வடிவமைத்தேன்...” என்றார்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என பல தளங்களை பயன்படுத்திக் கொண்டே இருந்தாலும், ஃபேஸ்புக் மனிதர்களுக்கு நெருக்கமானதொரு தளமாகவே இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் என்ன தான் எழுத முடியும் என்றாலும், முழுக்க முழுக்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கும் இடம் அது; ட்விட்டரில் வார்த்தை எண்ணிக்கை கட்டுப்பாடு இருக்கிறது. அப்படி வார்த்தை எண்ணிக்கை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஃபேஸ்புக் இன்னமுமே வளர்ந்து கொண்டே இருக்கிறது.
லைக் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது, மொபைலுக்கு ஏற்ற மாதிரி ஃபேஸ்புக்கை வடிவமைத்தது, இயற்கை பேரிடரின் போது தங்களுடைய நிலைமையை தெரிவித்துக் கொள்ள ’சேஃப்டி செக்’ ஆப்ஷன் என பல அப்டேட்களால் ஆனது ஃபேஸ்புக். ’ஹாஷ்டேக் சேலஞ்ச்’ எனும் பெயரில் பிரபலமான நிகழ்வுகள் பல. ஐஸ் பக்கெட் சேலஞ்ச் தொடங்கி, பிளாக் அண்ட் வொயிட் சேலஞ்ச், புக் சேலஞ்ச், மூவிஸ் சேலஞ்ச் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“இண்டர்நெட்டின் வருகைக்கு முன்னர், உங்கள் அக்கம்பக்கத்தினரை விட மாறுபட்ட கருத்துடையவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சமூகத்தை கண்டுபிடிப்பது கடினமானதாக இருந்தது. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இடம்மாறிச் சென்றால், அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போகும். ஒரு பிரச்சினை குறித்த விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் வழியேயும், அச்சு ஊடகத்தின் வழியேயும் போக வேண்டியதாகவே இருந்தது. உங்களுடைய பிசினஸுக்கு வாடிக்கையாளர்கள் தேவை என்றால் நிறைய பணம் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டியதாக இருக்கும். நாங்கள் ந்யூஸ் ஃபீட்-வசதியை அறிமுகப்படுத்திய பிறகு, கொலம்பியாவில் கோடிக்கணக்கான மக்கள் வன்முறைக்கு எதிரான பேரணி நடத்தியதைப் பார்த்தோம். வைரலான நிதி திரட்டும் நிகழ்வுகள் நடத்த நிறைய சமூகங்கள் ஒன்று கூடியதை பார்த்தோம்,” என்று தன்னுடைய பதிவில் தெரிவிக்கிறார் மார்க்.
- தொழில்முனைவோருக்கு நெருக்கமானதொரு தளமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். 2016-ல் #SheMeansBusiness என்ற பிரச்சாரத்தோடு ஆசியாவிலும், பசிஃபிக் பகுதியிலும் இருக்கும் பெண் தொழில்முனைவோருக்கு பயிற்சி கொடுக்க தொடங்கியது
- ஃபேஸ்புக். அதே வருடத்தில் ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதரவளிக்க ’டெவலபர் சர்க்கிள்ஸ்’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- 2017-ல் பொருட்கள் விற்கவும், வாங்கவும் மார்க்கெட் பிளேஸ் எனும் புது வசதியை அறிமுகப்படுத்தியது.
- 2018-ல் ட்ரெயினிங், ஃபண்டிங் என இயங்கும் ஆட்களில் முதலீடு செய்ய கம்யூனிட்டி லீடர்ஷிப் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அதை நடத்தியது.
இளைஞர் பட்டாளத்திற்கானது ஃபேஸ்புக் என்பதை விட வியாபாரங்களுக்கும், விளம்பரங்களுக்குமானது ஃபேஸ்புக் என்பது பொருந்திப் போவதாகவே இருக்கிறது. ஆனாலும் ஃபேஸ்புக்கின் தொடக்கக் காலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் விவாதங்களுக்கும், பிரச்சாரங்களும் ஒன்றும் குறையவில்லை. தற்போது கூட, இந்தியாவில் தேர்தல் நடக்கவிருப்பதால், அரசியல் ரீதியான விளம்பரங்களை எல்லாம் அதிகம் காண்பிக்க வேண்டும் என ஃபேஸ்புக் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
”கடந்த பதினைந்து வருடங்கள் மக்கள் குழுக்களாகக் கூடியதையும், அதனால் உண்டாகும் தாக்கத்தையும் பார்த்தோம் என்றால், அடுத்த பதினைந்து வருடங்களில் மக்கள் தங்கள் அதிகாரத்தை வைத்து வருகின்ற காலத்திற்குத் தேவையான மாற்றங்களை சமூகத்தில் உண்டாக்குவதை பார்ப்போம்!” என மக்களுக்காக மக்களைச் சுற்றி இயங்குகிறது ஃபேஸ்புக் என நிறைவு செய்கிறார் மார்க்.
விளம்பரங்கள், வியாபாரங்கள், பிரச்சாரங்கள், வேலை வாய்ப்புகள், அறிமுகங்கள், வீடியோ பகிர்தல்கள் என ஃபேஸ்புக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க நிறைய மூளைகள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. நேரடி மனித தொடர்புகள் அலர்ஜியாகியிருக்கும் என் போன்றவர்களுக்கு, எனக்கான ஆட்களை தேடிப் பிடிப்பதை எளிதாக்கியிருப்பது பெரும் ஆறுதல்!