கொரோனா வைரஸ்: உலா வரும் வதந்திகளும், உண்மைகளும்…
கொரானோ குறித்த வதந்திகளையும், அதுகுறித்த உண்மை தகவல்கள் என்ன?
அன்பு எனும் மூன்றெழுத்து உலகை ஆட்சி செய்து வருகிறது என்றால், கொரானோ எனும் மூன்றெழுத்து இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது. ஆண்டி முதல் அதிபர் வரை யாரையும் விட்டு வைக்காமல், வளரும் நாடு, வல்லரசு நாடு என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஓர் கை பார்த்து விடுவேன் என சவால் விட்டு உலகை வலம் வருகிறது கொரானோ.
கொரோனோ வைரஸ்தான் இன்று உலகம் முழுவதும் பீதியை கிளப்பி வருகிறது என்றால் அதை விட அதிகமாக கொரோனோ வைரஸ் குறித்த வதந்திகள் கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. கொரானோவே அதிர்ச்சியடையும் வகையில் அதுகுறித்த ஆச்சரிய, அதிசய, கொடூரத் தகவல்களை நமது நெட்டிசன்கள் இணையத்தில் உலவ விட்டு சமூக வலைதள ஊடகங்களை ரணகளமாக்கி வருகின்றனர்.
கொரானோ குறித்த வதந்திகளையும், அதுகுறித்த உண்மை தகவல்களையும் நாம் இங்கே அலசி ஆராய வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசியமாகிறது.
வதந்தி 1: கொரானோ வைரஸ் என்பது தற்போது தோன்றி உலகையே அச்சுறுத்தும் கடும் உயிர்கொல்லியாக மாறியுள்ளது.
உண்மை: கொரோனோ வைரஸ் பாதிப்பு 1960 முதல் உலகத்தில் உள்ளது. உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் ஒருமுறையாவது கொரோனோவின் தாக்கத்தை சந்தித்திருப்பார்கள்.
விளக்கம்: மனிதர்களுக்கு சளியை உண்டாக்கக் கூடியது ரைனோ வைரஸ். அதற்கு அடுத்தபடியாக தீவிர சளியை ஏற்படுத்துவதுதான் கொரோனோ வைரஸ். இவற்றில் 7 வகைகள் உண்டு. இதில் 4 வகை சாதாரண சளி, காய்ச்சலை உண்டாக்கும். மற்ற 3 வகை உயிர்சேதத்தை ஏற்படுத்தும். இவை SARS எனும் Severe Acute Respiratory Syndrome, * MERS எனும் Middle East Respiratory Syndrome மற்றும் தற்போது தோன்றிய * Covid 19 வைரஸ் ஆகும்.
வதந்தி 2: Covoid 19 எனப்படும் கொரானோ வைரஸ் பாம்பு கறியை உண்டதாலும், பறவைகளில் இருந்தும்தான் முதலில் பரவியது.
உண்மை: SARS, MERS மற்றும் Covid 19 போன்றவை மிருகங்களிலிருந்து மனிதனுக்கு பரவிய தொற்று நோய்களாகும். SARS மரநாய் என்ற விலங்கிலிருந்தும், MERS ஒட்டகத்திலிருந்தும், Covid 19 பழந்தின்னி வௌவால்களிடம் இருந்தும் பரவியுள்ளது.
பாம்பின் இறைச்சியில் இருந்துதான் கொரானோ பரவியதாக பலர் கூறினாலும், இவ்வைரஸ்கள் பழந்தின்னி வௌவால்களின் மரபணுக்கள் இருப்பதால் இது வௌவால்களில் இருந்து தான் பரவி இருக்கவேண்டும்.
வதந்தி 3: கொரோனோ வைரஸ் சீனாவின் பரிசோதனைக் கூடங்களில் இருந்து பரவியதா?
உண்மை: பயோ வார் என்றழைக்கப்படும் நுண்ணுயிரி போர் முறை குறித்த ஆராய்ச்சி மையத்தில் இருந்து பரவியதாக கூறப்படுவது வெறும் வதந்தியே. இவை பழந்தின்னி வௌவாலிலிருந்தே பரவியதாக அனைத்து நாடுகளும் ஆய்வு செய்து ஏற்றுக் கொண்டுள்ளன.
வதந்தி 4: கொரோனா வைரஸ் எளிதில் தொற்றக்கூடிய நோயா, உயிர்கொல்லி நோயா ?
உண்மை: ஆம், இது எளிதில் தொற்றக்கூடிய வைரஸ் தான். ஆனால் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்ட அனைவருக்கும் நோய் ஏற்படுவதில்லை இரண்டு சதவீத மக்களுக்கு மட்டுமே நோய் ஏற்படுகிறது. நோய் தொற்று உடையவர்களில் 97-98 % மக்களுக்கு சாதாரண சளி, தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் மூச்சு விடுதலில் கடினம் போன்ற அறிகுறிகளே இருக்கும். 2-3 % பேர்தான் உயிரிழக்க நேரிடுகிறது.
வதந்தி 5: இந்தியா, சீனாவின் அண்டை நாடாக இருந்தும் ஏன் அதிக பாதிப்புக்கு உட்படவில்லை?
உண்மை: இதுகுறித்து பல்வேறு யூகங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில் சில
* இந்திய உணவில் உள்ள உட்பொருள்கள் நச்சுயிரிக்கு எதிரான தன்மையைக் கொண்டுள்ளன.
* நம் உணவிலுள்ள அதிகளவு மிளகாய் பயன்பாடு, நுரையீரல் தொற்றினை தடுக்க காரணமாக இருக்கலாம்.
* இந்தியர்களின் கலாச்சாரமான கை, கால்களை கழுவுதல் மற்றும் தினசரி குளியல் போன்றவை முக்கியத் தடுப்பு நடவடிக்கையாகும்.
* இந்தியர்கள் பொதுவாக சூடான உணவினை உட்கொள்கிறார்கள். மேலும் தங்களது உணவினை ஒரே தட்டில் இட்டு பகிர்ந்து உண்பதில்லை. இதுவும் இத்தொற்று பரவாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
* இந்தியர்கள் வணக்கம் சொல்லும் பண்பாட்டினை உடையவர்கள், கை குலுக்கும் பண்பாடு அதிகம் இருப்பதில்லை.
* இந்தியாவின் சீதோசண நிலை, சீனாவைக் காட்டிலும் மிக வெப்பமானது. இதுகூட இந்த வைரஸின் பரவலைத் தடுத்திருக்கலாம்.
வதந்தி 6: கொரானோ தொற்றுநோயைக் குணப்படுத்த மருத்துவம் உள்ளதா?
உண்மை: இதுவரை இந்நோயை குணப்படுத்த மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை. ஆனால் இந்நோயினை தீர்க்கும் மருத்துவமுறை, மருந்துகள் என பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வதந்திகளே.
வதந்தி 7: கொரானோ வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, எனவே காட்டாயம் மாஸ்க் அணியவேண்டும்
உண்மை: கொரானோ வைரஸ் காற்றின் மூலம் பரவாது. தும்மல், இருமலில் தெறிக்கும் droplets எனப்படும் நீர்த்துளி மூலம்தான் பரவுகிறது. இந்த நீர்த்துளி பட்ட கைகளால் முகத்தை துடைக்கும்போது கண், மூக்கு, வாய் வழியாக நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாஸ்க் அணிவதன் மூலம் நம்மிடம் இருந்து மற்றவருக்கு நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தீவிரமான சில வதந்திகள் அல்லது கொரானோ குறித்த பொய் தகவல்கள்:
1. ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் Fortune cookies மற்றும் wagyu beef போன்ற சீனா இறக்குமதி உணவுப்பொருட்களில் இந்த வைரஸ் கலந்திருக்கலாம் என்ற வதந்தி முதலில் பகிரப்பட்டது. எனினும் இத்தகவல் எந்தவித ஆதாரமுமற்றது என மெல்பேர்ன் பல்கலைக்கழக Infectious diseases epidemiologist James McCaw தெரிவித்துள்ளார்.
2. கொரோனோ வைரஸை உருவாக்கியவர் பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் என்ற தகவலும் அண்மையில் வெளியிடப்பட்டு, பின்பு இச்செய்தி தவறென உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
3. கொரோனோ வைரஸ் ஓர் bio-weapon எனவும், இதனை அமெரிக்காதான் திட்டமிட்டு பரப்பியது என்றும் பரவலாக பேசப்பட்டது. மேலும், மக்கள் தொகையைக் குறைக்க சீன அரசு மேற்கொண்டுள்ள ரகசிய நடவடிக்கை என்றும் வதந்திகள் உலா வந்தன.
4. இந்த வைரஸ் தாக்காமல் இருக்க உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்தால் போதும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது ஆகும்.
5. பசுவின் கோமியத்தை (சிறுநீர்) அருந்தினால் கொரோனோ வராது என பல்வேறு வதந்திகளை தங்கள் மனம்போல் பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் இவை எல்லாம் உண்மையல்ல.
கொரானோவில் இருந்து தப்பிக்க சில ஐடியாக்கள்:
1. இந்நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள மூன்று ‘H’ யை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* Hand wash (கைக் கழுவுதல்).
* Hand sanitizer (கை சுத்திரிப்பான்)
* Hands of face (முகத்திலிருந்து கையை தூர வைத்துக்கொள்ள வேண்டும்).
2. இருபது விநாடிகளுக்கு சோப் போட்டு கையினை சுத்தமாகக் கழுவ வேண்டும். ஒருநாளைக்கு பதினைந்திலிருந்து இருபது முறை கையை அலம்பவேண்டும்.
3. கைகளைக் கழுவ முடியாத இடத்தில் கை சுத்திகரிப்பான் மூலம் நம் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
4. மூக்கு, வாய், முடி மற்றும் காதுகளை அடிக்கடி நம் கைகளால் தொடக்கூடாது.
5. வெளிநாட்டுப் பயணங்களைக் கூடுமானவரை தவிர்க்கவேண்டும்.
6. மக்கள் அதிகம் கூடும் பேரணி, திருவிழா போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். இது நோய் தொற்று பரவலை தடுக்க உதவும்.
கொரானோ குறித்த சில உண்மைத் தகவல்கள்:
* நம் கைகளில் இந்த வைரஸ் பதினைந்து நிமிடங்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். எனவேதான் கைகளை சுத்திகரிப்பான் கொண்டு தூய்மை படுத்தவேண்டும்.
* கைகுட்டை மற்றும் நாம் உடுத்தும் துணிகளில் இரண்டு மணி நேரம்வரை உயிர்ப்புடன் இருக்கும். எனவே துணிகளை துவைத்து குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது வெயிலில் போடவேண்டும்.
* கதவுகளிலும் தரைகளிலும் இரண்டு நாள்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும். இந்த இடங்களை நல்ல தரமான கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
5. முக்கியமாக பொதுஇடங்களில் கூட்டம் சேரும்போது இருவருக்கிடையே குறைந்தது ஒரு மீட்டருக்கு மேல் இடைவெளி (சமூக விலகல்) இருக்க வேண்டும். அதே சமயம் மூன்று மீட்டர் இடைவெளி இருந்தால் நிச்சயமாக இக்கிருமி ஒருவரிலிருந்து மற்றவர்களுக்கு பரவாது.
பொதுவாக மக்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் 1 முதல் 4 நாள்கள் வரை இருக்கும்.
கொரானோ அறிகுறி இருப்பின் இது 14 நாட்கள் வரை கூட நீடிக்கும். அதிகபட்சமாக சாதாரண சளி 12 நாள்களும், காய்ச்சல் 7 நாள்கள் வரையும் நீடிக்கலாம். ஆனால் லேசான கொரானோ அறிகுறிகள் இருந்தால் 2 வாரம் முதல் 6 வாரங்கள் வரை இந்தநிலை நீடிக்கும் என்பதாலேயே, பாதிப்புக்குள்ளானவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தித் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர்.
மேலும், இந்திய அரசும் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் கொரானோ குறித்து மக்கள் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதே உண்மை.