Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நெல்லை நிலத்தில் விளைச்சலை அதிகரிக்கும் 'Farm Again' - கோடிகளில் வருவாய் ஈட்டும் பென் ராஜா!

பென் ராஜா, ராஜ் கான்சம் இருவரும் தங்களது கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்து வெளியேறி 'ஃபார்ம் அகெயின்' பிராண்டின்கீழ் 2,500 ஏக்கர் நிலத்தை ஒன்றிணைத்துள்ளனர். நேரடி கொள்முதல் அல்லது விற்பனை முறை, தொழில்நுட்பத் தலையீடு, தனித்துவமான விலை நிர்ணயம் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியடைகிறது.

நெல்லை நிலத்தில் விளைச்சலை அதிகரிக்கும் 'Farm Again' - கோடிகளில் வருவாய் ஈட்டும் பென் ராஜா!

Tuesday April 23, 2019 , 5 min Read

அமெரிக்கர்கள் ஃப்ரோசன் டெசர்ட் வாங்கும் போக்கை மாற்றியது ஐஸ் கிரீம் பிராண்டான பென் & ஜெர்ரி. அதேபோல் இந்தியாவில் பாரம்பரிய விவசாய முறையை மாற்றி வருகின்றனர் பென் மற்றும் ராஜ்.


கடந்த ஐந்தாண்டுகளில் இவர்கள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை ஆர்கானிக் பண்ணையாக மாற்றியுள்ளனர். அதே போல் பொருட்கள் எந்த நிலத்தில் விளைந்தவை என்பதைத் தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகளையும் உருவாக்கியுள்ளனர்.

அடுத்தமுறை நீங்கள் ரிலையன்ஸ் ரீடெயில், மோர், பிக்பஜார் போன்ற ஸ்டால்களுக்கு செல்லும்போது தர்பூசணி, வெங்காயம் அல்லது தக்காளி வாங்கினால் காய்கறி பையில் இருக்கும் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.


’ஃபார்ம் அகெயின்’ (Farm Again) நிர்வகிக்கும் பண்ணையை இந்த ஸ்கேன் சுட்டிக்காட்டும். பென் ராஜா; ’ஃபார்ம் அகெயின்’ நிறுவனத்தின் நிறுவனர். இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அவரது நெருங்கிய நண்பரான ராஜ் கான்சம் ஆதரவளித்து வருகிறார்.

30 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம் 8 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஸ்டார்ட் அப்புடன் இணைந்துள்ளனர். அடுத்த ஆண்டு மேலும் 13,000 விவசாயிகளை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

முழுமையான தீர்வு

“இந்தியாவில் விவசாயம் உள்ளூர் தேவைகளுக்காக உள்ளூரிலேயே செயல்படும் வகையிலேயே பல காலமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கில் உணவு இறக்குமதி செய்யப்பட்டு சில்லறை வர்த்தகங்களுடன் ஒன்றிணைக்கப்படுகிறது,” என்கிறார் பென் ராஜா.

இந்த ஸ்டார்ட் அப் விவசாயம் தொடர்பான முழுமையான தீர்வை வழங்குகிறது. இதில் விவசாயிகளின் விளைச்சல் அதிகரிக்க தொழில்நுட்பமும் பாரம்பரிய விவசாயமும் ஒன்றிணக்கப்படுகிறது.

ஃபார்ம் அகெயின் செயல்பாடுகளின் தலைவர் ராஜ் கான்சம் கூறுகையில்,

“விவசாயிகளுக்கு சரியான தகவல்கள் சென்றடைவதில்லை. வர்த்தகர்கள் அவர்களிடம் ரசாயனங்களை விற்பனை செய்கின்றனர். அவர்களுக்கு விவசாய கண்காட்சிகள் மூலமும் வர்த்தகர்கள் வாயிலாகவும் மட்டுமே தகவல்கள் கிடைக்கிறது,” என்றார்.

முறையான தகவல்கள், விவசாய திட்டமிடல், வாடிக்கையாளர்கள், சரியான சந்தை விலை ஆகியவற்றை தனது நிறுவனம் மூலம் வழங்கி இந்த நிலையை மாற்ற விரும்புவதாக தெரிவிக்கிறார் ராஜ்.


ஃபார்ம் அகெயின் நிலத்தில் நுழைந்ததும் ஐஓடி சாதனம் ஒன்று ஈரப்பதம் குறித்தும் மண் வளம் குறித்தும் தகவல்களை வழங்குகிறது. தண்ணீர் மற்றும் உர உள்ளீடுகளை கட்டுப்படுத்தும் பைப்களின் நெட்வொர்க்கை ஒழுங்குப்படுத்துகிறது. இவர்களின் குழுவால் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு விவசாயிக்கு வழிகாட்டப்படுகிறது.

துவக்கம்

1992-ம் ஆண்டு பென் கல்லூரிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 17. அந்த நாட்களில் கணிணிகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டியுள்ளார்.

“ஆனால் என் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கிற அழுத்தம் இருந்ததால் பொறியியல் கல்லூரிக்குத் திரும்பினேன்,” என்றார்.

ராஜ் விஞ்ஞானிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே கம்ப்யூட்டிங் குறித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஜாவா பற்றிய திறன் இருந்ததால் 1999-ம் ஆண்டு ஒரு ஸ்டார்ட் அப்பில் பணி கிடைத்தது. அதன்பிறகு பல்வேறு கார்ப்பரேட்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஹனிவெல் நிறுவனத்தில் பணிபுரியும்போது நன்மதிப்பைப் பெற்றார். ஹார்ட்வேர் மற்றும் மென்பொருள் மீதான ஆர்வம் தொடர்ந்தது.


ஹனிவெல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோதுதான் பென்னும் ராஜும் ஒருவரோடொருவர் அறிமுகமாயினர். ராஜ் 2015-ம் ஆண்டு ஃபார்ம் அகெயின் நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.

”பென் ஏற்கெனவே தனது மூன்றாண்டு உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் இந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்தார். இந்த திட்டம் மிகவும் வெளிப்படையானதாகவும் புதுமையானதாகவும் இருப்பதை உணர்ந்தேன்,” என்றார் ராஜ்.

விவசாயிகளுக்கு வெறுமனே நுண்ணறிவை மட்டும் வழங்காமல் இந்தத் தொழில்நுட்பமும் அறிவும் அவர்களது பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ராஜ் இதற்கு முன்பு ’நோக்கியா மார்கெட் லைட்’ உடன் பணியாற்றியுள்ளார். இதில் ஒன்பது மில்லியன் விவசாயிகள் சந்தாதாரர்களாக இருந்தனர். பயிரின் விலை குறித்த தகவல்களை இவர்கள் தெரிந்துகொள்ளலாம். விவசாயம் தொடர்பான பின்னணி இருந்ததால் பென் ராஜை இணைத்துக்கொண்டார்.

தடங்கல்கள்

பென் எதற்காக விவசாயம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்?

“என்னுடைய சிறுவயது நண்பர் ஒருவர் பள்ளியில் தங்கப்பதக்கம் வென்றவர். இவர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். நான் அவரை சந்தித்தபோது அவர் வறுமையில் தவிப்பதைக் கண்டேன். அவரது நிலத்தில் விளைச்சல் குறைவாக இருந்தது. சந்தை விலை குறித்த புரிதல் அவரிடம் இல்லை,” என்றார் பென்.

பென் தனது நண்பரின் நிலம் இருந்த சேலம் பகுதியைப் பார்வையிட்டார். “என் நண்பர் ரசாயன உரங்களில் முதலீடு செய்த பிறகு தண்ணீர் பற்றாக்குறையையும் குறைந்த விளைச்சலையையும் எப்படி கையாள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. தகவல்கள் சரியாக கிடைக்காததால் விவசாயத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகின்றன,” என்றார் பென்.


இது நடந்தது 2010-ம் ஆண்டு. அவர் உடனடியாக ஒரு விவசாய நிறுவனத்தைத் துவங்கி 2012-ம் ஆண்டு தனது பணியை விட்டு விலகினார். அதே ஆண்டு ’ஃபார்ம் அகெயின்’ துவங்கினார். தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் துவங்கினார். சில ஏக்கர் நிலத்தில் வெவ்வேறு பயிர்களை வளர்த்தார். இதில் தர்பூசணியும் அடங்கும்.

”நான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்தினேன். தண்ணீரையும் சிக்கனமாகவே செலவிட்டேன்,” என்றார் பென்.

அவரது நிலத்தில் தர்பூசணி விளைச்சல் சராசரியைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகரித்தது. ஒரு ஏக்கரில் 12 டன் கிடைத்தது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 2 டன் விளைச்சல் இருக்கும். மேற்குப் பகுதியில் விளைச்சல் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 40 டன்னாக இருக்கும்.

இந்தச் செய்தி மக்களிடையே பரவி பல விவசாயிகள் பென்னை தொடர்பு கொண்டனர். மெல்ல அந்தப் பகுதி முழுவதும் உள்ள விவசாயிகள் பென்னின் விவசாய முறையில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.


பென் 180 சாதனங்களை தானே உருவாக்கி விவசாயிகளிடம் கொடுத்தார். கோவையில் உருவாக்கிய ஹார்ட்வேர் கொண்டு விஷுவலைசேஷன் என்ஜினையும் உருவாக்கினார்.

தொழில்நுட்பப் பயன்பாடு

“இஸ்ரேலில் தண்ணீரை திறம்பட நிர்வகிக்கின்றனர். இந்தியாவில் நாம் போர்வெல் போட்டுக்கொண்டே இருக்கிறோம். விவசாயத்தில் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டியது அவசியம்,” என்றார்.

பென் தனது சொந்த பணத்திலிருந்து 8 கோடி ரூபாய் திரட்டி தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய பகுதிகள் முழுவதும் கூட்டு பண்ணையை உருவாக்கினார்.

”என்னுடைய பணத்தை நான் இன்னமும் திரும்ப எடுக்கவில்லை. விவசாயத்திற்காக கார்ப்பரேட் வாழ்க்கையை விட்டுவிட்டதாக திருநெல்வேலியில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் கருதுகின்றனர். ஆனால் நான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்கச் செய்ய மிகப்பெரிய பண்ணை அமைப்பை உருவாக்கி வருகிறேன்,” என்றார் பென்.

அவர் முக்கிய நகரங்களுக்கு காய்கறிகளையும் பழங்களையும் விநியோகிக்க சில்லறை வர்த்தக பிராண்டை உருவாக்க விரும்புகிறார். அத்துடன் உள்ளூர் ஸ்டோர்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

”மக்கள் விவசாயத்தை சிக்கல்தன்மையுடன் கையாள்கின்றனர். இதில் புதுமையான சிந்தனை அவசியம். விவசாயத்தில் புரட்சி அவசியம்,” என்றார் பென்.

பென், ராஜ் இருவரும் 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள முன்னணி சில்லறை வர்த்தகர்களுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர். அவர்களது விளைச்சல் எங்கிருந்து வந்தது என்பதை எளிதாகக் கண்டறியும் முறையை உருவாக்கினர். தென்னிந்தியாவில் 25 சில்லறை வர்த்தக ஸ்டோர்களுக்கு ஒரு மாதத்திற்கு 120 மெட்ரிக் டன் அளவிற்கு விநியோகம் செய்கின்றனர்.


பச்சை காய்கறிகள், எலுமிச்சை, உருளை, வெண்டைக்காய், வெங்காயம், முருங்கை போன்றவற்றை வளர்த்தனர். இந்நிறுவனம் ஒரு மாதத்திற்கு 400 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. மீதமிருக்கும் விளைச்சலை உள்ளூர் மண்டி அல்லது ஏஜென்சிக்கு விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் விளைச்சலை சேகரித்து அவற்றை சாக்கு பைகளில் அடைக்காமல் பெட்டிகளில் மாற்றுகிறது. இதனால் விளைச்சலின் ஊட்டச்சத்து தக்கவைக்கப்படுகிறது.

எதிர்காலத் திட்டம்

இந்நிறுவனத்தின் தளத்தில் 13,000 விவசாயிகள் இணைந்துகொள்ள இருப்பதால் அடுத்த ஆண்டு 1,500 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்ய திட்டமிடுகிறது.

Crop Again, Peat, AIBONO போன்ற நிறுவனங்கள் ஃபார்ம் அகெயின் போட்டியாளர்களாகும். சற்றே நெருக்கமாக போட்டியிடும் நிறுவனம் டெல்லியைச் சேர்ந்த Crofarm. ஆரின் கேப்பிடல் நிர்வாக இயக்குநர் மோஹன்தாஸ் கூறுகையில்,

“விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றம் அவசியமாகிறது. ஸ்டார்ட் அப்கள் வாயிலாக விவசாயிகள் விநியோக சங்கிலியையும் தொழில்நுட்பத் தீர்வுகளையும் அணுகவேண்டும்,” என்றார்.

அடுத்த ஆண்டு வருவாய் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என பென், ராஜ் இருவரும் எதிர்பார்க்கின்றனர். பென் ஏற்கெனவே வெற்றிக்கான செயல்திட்டத்தை உருவாக்கியிருப்பதால் இது சாத்தியப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. முதலீட்டை உயர்த்துவது, திறம்பட திட்டமிடுவது, விவசாயிகளுக்கு மீண்டும் விவசாயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது போன்றவையே ஃபார்ம் அகெயின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆகும்.


பத்தாண்டுகளுக்கு முன்பு மெக்டொனால்ட்ஸ் மற்றும் பல்வேறு கிளைகளைக் கொண்ட மற்ற சில்லறை வர்த்தகங்கள் பண்ணைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவு, விற்பனை குறைவு, வாடகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இவர்களது வளர்ச்சி தடைபட்டது.


தற்போது ஃபார்ம் அகெயின் மூலம் இந்த நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

2.0 புரட்சி விவசாயிகளைச் சென்றடைவது தொடர்பாக இருந்தது. ஆனால் இதில் தொழில்நுட்பம் இணைக்கப்படவில்லை. தற்போது இந்த முயற்சி 3.0 விவசாயப்புரட்சி என எடுத்துக்கொள்ளலாம்.


ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா