ஓர் ஊழியருடன் தொடங்கி, இன்று 700 பேருடன் வெற்றிநடை போடும் ஆசிப் பிரியாணி சாம்ராஜ்ஜியம்!
பிரியாணி வாசம் மூக்குக்கு வந்ததுமே, எங்கயோ பிரியாணிப்பா...! என்று தன்னையறியாமல் நம் நாவில் எச்சிலை ஊறவைக்கும் உணவு...
எதச் சாப்பிட்டாலும் காக்கா மாதிரி பட்டுப் பட்டுன்னு சாப்பிட்டு எந்த ரியாக்சனும் இல்லாம போற அவசர குடுக்கைகள் கூட கொஞ்சம் நிதானமா ரசிச்சு சாப்பிடுறத பாக்கணும்னா நீங்க பிரியாணி கடைக்கு போய் பாருங்க...
பிரியாணி சாப்பிடுறவங்க முகத்த பாத்தாலே தெரியும்... அது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம்னு. அங்க போயி யாரு முகத்தப் பாக்கப் போற, போனா நாமளும் ஒரு கட்டு கட்டணும்னு ஆசைதான் மூக்கத் தொளைக்கும்னு சொல்றீங்களா...
பிரியாணியின் மகத்துவம் சாப்பிட்டவர் அறிவார்,
அதைவிட அதனைச் சமைத்தவர் அறிவார்,
அதைவிட அதனால் சாதித்தவர் அறிவாரென நினைத்து...
'ஆசிப் பிரியாணி' உரிமையாளர் ஆசிப் அகமதுவைப் பார்க்கப் சென்றிருந்தோம்.
1999 இல் தி.நகரில் ஒரு தள்ளு வண்டியில் 3 கிலோ அளவிற்கு பிரியாணி விற்றுக் கொண்டிருந்த இவர், தற்போது ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் பிரியாணி விற்பனை செய்கிறோம் என்கிற எந்த இறுமாப்பும் இல்லாமல் இயல்பாக பேசுகிறார்.
“பிறந்தது வளர்ந்தது சென்னை பல்லாவரம்தான், அப்பா பெங்களுர், 1976 இல் பிறந்த எனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த பொண்ணுக்கு 12 வயது“ என்று சுருக்கமாக சுயபுராணம் சொன்னவர், பிரியாணி கடை அனுபவம் குறித்து நிறையவே சொல்கிறார்.
9 ஆம் வகுப்போடு படிப்பை விட்டு விட்டு ஒரு பிரியாணி மாஸ்டரின் உதவியாளரான தான், 1999 ஆம் ஆண்டு தி.நகர் கல்யாண் ஜூவல்லர்ஸ் அருகே ஒரு தள்ளுவண்டியில் பிரியாணி கடை போட்டு சுய தொழிலைத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.
மாஸ்டர்தான் எனக்கு தொழில் கத்துக் கொடுத்து வழியமைத்தவர் என்ற நன்றியை அடிக்கடி பதிவு செய்கிறார். ரோட்டோர தள்ளுவண்டிக்கடையை ரௌடிகளின் தொல்லையால் தி.நகரில் தொடரமுடியாமல், கிண்டி பட்ரோடுக்கு இடம் மாறியதை அடுத்து, சிறிய அளவில் 2004 ஆண்டு 15 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு ஒரு இடத்தை அமைத்து, தனது தொழிலை மாற்றியமைத்திருக்கிறார்.
“சாப்பிடுறவங்க வாவ்ன்னு சொன்னா போதும், நாம ஜெயிச்சுட்டோம்னு அர்த்தம்“ என்று சொல்லும் ஆசிப், தனது பிரியாணி தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
“இந்த பிரியாணி எங்க வேணாலும் கிடைக்கும்னா, அப்புறம் எப்படி நம்மைத் தேடி வருவாங்க“ என்று கேள்வி எழுப்புகிறார் அவர். அந்த தனித்துவத்திற்காக அஜின மோட்டோ மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்று சொல்லும் அவர், இயற்கையான இஞ்சி, பூண்டு போன்றவற்றில் தரமானவற்றை தேவையான அளவு பயன்படுத்துவதாக சொல்கிறார்.
அங்க சாப்பிட்டோம் டேஸ்ட்டா, இருந்துச்சு ஆனா மறுநாள் ஆபீஸ்க்கு லீவ் போடுற அளவுக்கு வயிறு பிராப்ளம்னு சொன்னா தொழில் நீடிக்குமா என்று அவர் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
அந்த அக்கறைதான் தற்போது சென்னையில் மட்டும் 17 கிளைகள், சென்னை தவிர கோவை, பாண்டிச்சேரி, பெங்களுர், இலங்கை என கடல் தாண்டியும் விரிவாகியுள்ள ஆசிப் பிரியாணி, அதன் வர்த்தகத்தின் வெற்றியை காட்டுகிறது.
இரண்டு ஆண்டுகளில் கோடி ரூபாய் வர்த்தகத்தை தொட்டிருக்கும் ஆசிப் பிரியாணியின் வளர்ச்சியை மேலும் ஒரு மடங்கு அதிகமாக்கும் முனைப்போடு இருக்கிறார். 50 விழுக்காட்டிற்கு மேல் டோர் டெலிவரி மூலமாக தங்களின் வணிகம் நடப்பதாகவும், 30 நிமிடங்களில் தங்களால் சென்னையில் டெலிவரி செய்யமுடியும் என உறுதியளிக்கிறார். விழாக்கள், விருந்துகள் என்றால் ஆசிப் பிரியாணி என்று பலருக்கும் பயன்படும் அளவிற்கு தங்கள் சேவை உண்டு என்கிறார். அவுட்டோர் கேட்டரிங் முறையில் தங்களால் திறம்பட சேவை செய்ய முடிகிறது என்பது மேலும் பலம் எனக் குறிப்பிடுகிறார்.
ஓ.எம்.ஆரில் அடுத்த பெரிய திட்டமாக ஆசிப் பிரியாணி அமைக்கவிருப்பதாகக் கூறுவதோடு, சென்னையில் எங்கும் ஆசிப் பிரியாணி கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவேன் என்கிறார்.
முகல் பிரியாணி, லக்னோ பிரியாணி, பாம்பே பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மலபார் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, திண்டுக்கல் பிரியாணின்னு பல வகைகள் இருந்தாலும், முகல் பிரியாணி தான் ஒரிஜினல், ஊசி மாதிரி பாசுமதி அரிசியில் செய்றதுதான் முகல் பிரியாணி என்கிறார் ஆசிப்.
பிரியாணி எல்லாருக்கும் பிடிக்கக் காரணம், அதன் சுவை மட்டுமல்ல, அது அதிக ஊட்டம் தரும் உணவு, புலால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒன்று கலந்து நல்ல ஊட்டத்தை தருகிறது. அதனைச் சாப்பிட்டு விட்டு, போருக்குச் செல்லும் அளவிற்கு உடலில் தெம்பு கிடைக்கும். அதனால் பண்டையகாலத்தில் போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு பிரியாணி என்று வரலாறு வேறு சொல்லி அசத்துகிறார் ஆசிப்.
பாரசீக சொல் மூலத்திலிருந்து பிறந்த பிரியாணி என்ற சொல் மட்டுமல்ல, பிரியாணியும் 2 ஆம் நூற்றாண்டில் பாரசீக நாட்டைச் சேர்ந்ததுதான். முகலாயர் காலத்தில் இங்கேயும் வந்தது என்று சொல்லப்படும் சரித்திர செய்திகளை ஆசிப் பகிர்வதில் உண்மை இருப்பதை உணர்த்துகின்றன.
வரலாறு யாருக்கு வேணும், வயிறு நிறைய பிரியாணி வேணும் என்போர் தாராளமாக எங்கள் கடைக்கு வரலாம், கொடுக்கிற காசுக்கு வஞ்சமில்லாமல், போதும் போதும்ன்ற அளவுக்கு பிரியாணி கிடைக்கும் என்கிறார் ஆசிப். 1999 ஆம் ஆண்டு அரை பிளேட் 28 ரூபாய்க்கு விற்ற காலத்திலும் சரி, இப்போ மட்டன் பிரியாணி 319 ரூபாய்க்கும் சிக்கன் பிரியாணி 240 ரூபாய்க்கும் விற்கிற காலத்திலும் சரி ஒரே மனநிலைதான் என்கிறார்.
இத வெறும் தொழிலா, காசு சம்பாதிக்கிற வழியா மட்டும் நெனச்சிருந்தா, தி.நகர்ல ரௌடிகள் தொந்தரவு வந்தப்பவே விட்டுட்டு வேற வேலைக்கு போயிருப்பேன். ஆனா இது என்னோட பேஷன், எதச் செஞ்சாலும் பிடிச்சிருந்து, விருப்பத்தோட செஞ்சோம்னா, நாமளும் விடமாட்டோம், நம்மையும் அது விடாது” இதுதான் என் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்.
ஒரே ஒரு ஊழியருடன் தொடங்கிய வணிகம் 700 ஊழியர்களுடன் பெரும் தொழிலாக வளர்ந்ததுக்குக் காரணம் இதுதான் என்கிற ஆசிப், இதே தொழிலில் இருக்கிற மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனிக்கத் தவறுவதில்லை.
"மற்றவர்களின் பிரியாணி எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன், என் பிரியாணியை விட சிறப்பானதாக தென்பட்டு விட்டால், அதை விடச் சிறப்பாக எனது தயாரிப்பை மாற்றும் வரை தூக்கம் கஷ்டம்தான்"என்கிறார்.
வாடிக்கையாளர்களின் பாராட்டுகள் மட்டுமன்றி, அவர்கள் சொல்லும் குறைகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும், எப்போதாவது வரும் திட்டுகளைக் கூட பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு செல்வதால்தான் தன்னால் இந்த நிலைக்கு உயர முடிந்திருக்கிறது என்கிறார்.
'இது போதாது, இன்னும் நிறையத் தூரம் போக வேண்டும். இதிலேயே நிறைவடைந்து விட்டால் வளர்ச்சியில்லை. என்று சொல்லிவிட்டு எழுந்து செல்லும் ஆசிப், அந்த இஞ்சி நல்லாயிருக்கான்னு பாத்தியா என்று ஊழியரைக் கேட்பது நம் காதில் விழுகிறது'
பில்கேட்ஸ்ல இருந்து பிரியாணி மாஸ்டர் வரைக்கும் எல்லோருடைய வெற்றியின் ரகசியமும் ஒன்னுதான். எதையும் விருப்பத்தோட செஞ்சா வெற்றிதான்!
இணையதள முகவரி: Aasife Biriyani
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
டோமினோஸ் போல இந்திய உணவு வகைகளை பிரபலப் படுத்த விரும்பும் 'சார்க்கோல் பிரியாணி'