Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

எய்ம்ஸ்-ல் மருத்துவம் பயில தேர்வாகிய விவசாயக் கூலித் தொழிலாளி மகள்!

விவசாயத் தொழிலாளியின் மகளான சாருல் ஹோனாரியா தனது கடின உழைப்பால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

எய்ம்ஸ்-ல் மருத்துவம் பயில தேர்வாகிய விவசாயக் கூலித் தொழிலாளி மகள்!

Monday January 18, 2021 , 4 min Read

அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்று சட்டம் இயற்றப்பட்டாலும்கூட கல்வி என்பது அத்தனை எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. சிலருக்கு படிப்பதற்கான வசதி வாய்ப்புகள் தானாக அமைந்துவிடும் நிலையில் சிலருக்கு ஆரம்பக் கல்வியைப் பெறுவதே போராட்டமாக மாறிவிடுகிறது.


இன்றைய டிஜிட்டல்மயமான உலகிலும் பாலின பாகுபாடு காரணமாக பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாத சூழல் பல இடங்களில் நிலவுவதாக சமீபத்திய ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.


ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த எத்தனையோ துறைகளில் பெண்கள் கால் பதித்து உச்சத்தை எட்டியிருந்தாலும் பெண்கள் போராடி கல்வி கற்க வேண்டிய சூழலும் இருப்பது வருத்தத்திற்குரியது.


கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர் உணராமல் போவது, பொருளாதாரச் சூழல் இப்படி எத்தனையோ காரணங்கள் இதன் பின் அடங்கியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் சாருல் ஹோனாரியா என்கிற மாணவிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் படிக்க அட்மிஷன் கிடைத்துள்ளது.

1

இவரது கிராமத்தில் முதல் முறையாக எய்ம்ஸ் மருத்துமனையில் படிக்க இருக்கும் சிறுமி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் கிராம மக்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்து வளர்ந்தவர் சாருல்.

“எங்கள் கிராமத்தில் பலருக்கு மருத்துவப் பிரச்சனைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அருகில் மருத்துவமனைகள் ஏதும் இல்லாததால் இவர்கள் சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. பிரசவித்திருக்கும் தாய்மார்களும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரும் மருத்துவமனை இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்,” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் சாருல்.

அவர் மேலும் கூறும்போது,

“மருத்துவப் படிப்பு முடித்து மருத்துவர் ஆனதும் கிராமப்புறங்களுக்கு அருகில் மருத்துவமனை அமைத்து கிராமவாசிகளுக்கு தரமான மருத்துவ சேவைகளைக் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்,” என்கிறார்.

ஆரம்ப நாட்கள்

சாருல் உத்திரப்பிரதேசத்தின் பிஜ்னார் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீராத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்து வளர்ந்தவர் சாருல்.


சாருலின் அப்பா பட்டதாரி. இவருக்கு ஐந்து குழந்தைகள் என்பதால் செலவுகளை சமாளிக்கக் கிடைத்த வேலையை செய்யவேண்டிய நெருக்கடியான சூழல். விவசாயக்கூலியாக வேலை செய்தார். இதில் கிடைத்த வருமானம் கொண்டு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே கடினமான இருந்துள்ளது.

2

குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்கவேண்டும் என்பதே இவரது கனவாகவும் லட்சியமாகவும் இருந்தது. தன்னைப் போல் குழந்தைகள் கஷ்டப்படாமல் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

“தரமான கல்வி வழங்கக்கூடிய நிறைய பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிகம். என் பெற்றோரால் அவ்வளவு அதிக தொகையை செலவிட முடியாது. குடும்பத்தின் நிலை புரிந்ததால் நல்ல பள்ளியில் சேர்க்குமாறு அவர்களிடம் நான் கேட்டதில்லை,” என்று சாருல் நினைவுகூர்ந்தார்.

படிக்கவேண்டும் என்கிற விருப்பம் இருந்தும் வறுமை காரணமாக இவரைப் போன்ற எத்தனையோ மாணவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது.

வாய்ப்பு கிடைத்தது

சாருல் நன்றாகப் படித்தார். இதனால் சாருலின் ஆசிரியர்கள் அவரது பெற்றோர்களிடம் புலந்த்சாகரில் உள்ள வித்யாகியான் லீடர்ஷிப் அகாடெமி பற்றிக் கூறியுள்ளனர். இது ஒரு ரெசிடென்ஷியல் பள்ளி. ஆண்டு வருவாய் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் நலிந்த, கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த அகாடெமி இலவச கல்வி வழங்கி வருகிறது.


2009-ம் ஆண்டு ஷிவ் நாடார் அறக்கட்டளை இந்த அகாடெமியை நிறுவியுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுக்கு நிகராக கல்வி கற்கவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். சாருலை அவரது அப்பா இந்தப் பள்ளியில் சேர்த்தார்.

“இந்தப் பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் இருந்தனர். வசதி இல்லாத மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இங்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்ட்டம் என்றே நினைக்கிறேன்,” என்றார் சாருல்.

ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது மொழி காரணமாக கற்பதில் சிரமம் இருந்துள்ளது. இருப்பினும் கடினமாக முயற்சி மேற்கொண்டார். ஒன்பதாம் வகுப்பில் இருந்து முதலிடம் வகிக்கத் தொடங்கினார். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 93 சதவீத மதிப்பெண் எடுத்தார்.

3

நீட் தேர்வு

புனேவில் ‘தக்‌ஷனா ஃபவுண்டேஷன்’ என்கிற தொண்டு நிறுவனம் கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்கி வருகிறது. சாருல் இங்கு சேர்ந்து நீட் தேர்வுக்குத் தயாரானார். நாள் ஒன்றிற்கு 11-12 மணி நேரம் செலவிட்டார்.


இவ்வாறு கடினமாக உழைத்துத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சாருல் ஆறாம் வகுப்பு வரை ஹாஸ்டலில் தங்கிப் படித்துள்ளார். விடுமுறைக்கு வீட்டிற்கு வருவார். இதனால் வீட்டில் இருந்து படிப்பது இவருக்குக் கடினமாக இருந்துள்ளது.


இதுதவிர வீட்டில் இணைய இணைப்பு மோசமாக இருந்துள்ளது. இதுபற்றி அப்பாவிடம் சொல்லிக் கவலைப்பட்டார். ஏழ்மை நிலையிலும் மகளின் படிப்பிற்காக மொபைல் வாங்கிக் கொடுத்துள்ளார் சாருலின் அப்பா.

“நான் ஹாஸ்டலில் தங்கியே படித்திருக்கிறேன். விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவேன். வீட்டில் படித்துப் பழக்கமில்லை. பகல் நேரத்தில் படிக்க முடியாமல் போனதால் இரவில் அமைதியான சூழலில் படிக்க ஆரம்பித்தேன். படித்துக்கொண்டிருக்கும்போதே மேஜையில் படுத்து தூங்கிவிடுவேன். அம்மா எழுப்புவார். மீண்டும் தொடர்ந்து படிப்பேன்,” என்றார்.

சாருலின் கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்தது. அகில இந்திய அளவில் 681-வது இடம் பிடித்தார். பிரிவு வாரியாக (category) 10-வது இடத்தைப் பிடித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இதுகுறித்து சாருல் பகிர்ந்துகொண்டபோது,

“பயிற்சித் தேர்வின்போது 630 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். தேர்வில் நன்றாக எழுதினேன். தேர்வெழுதி முடித்து வீட்டை வந்தடைவதற்கு முன்பே 650-க்கும் அதிகமான மதிப்பெண் வரும் என தெரிந்தது. அதிகாலை 2.30 மணி வரை தூங்கவில்லை. நான் எழுதிய விடைகளை சரிபார்த்தபோது என்னுடைய மதிப்பெண் 680. காலை வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டார்கள்,” என்றார்.

தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் வகுப்புகள் தொடங்கிவிட்டது. சாருல் தன்னைப் போல் நலிந்த குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்கள் எப்படிப்பட்ட உத்திகளைப் பின்பற்றி படிக்கலாம் என்பதை விரிவாக எடுத்துரைக்க யூட்யூப் சானல் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.


மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தங்கள் முன் இருக்கக்கூடிய வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்கிற கருத்தை வலியுறுத்துகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: கனிஷ்க் சிங் | தமிழில்: ஸ்ரீவித்யா